ஜோஹோ நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் நாட்டின் பொருளாதாரம் குறித்தும், வேலை வாய்ப்புகள் , ஏஐ குறித்தும் தொடர்ச்சியாக பதிவு செய்து வருபவர். ஸ்ரீதர் வேம்பு வெளியிடக்கூடிய அறிவுரைகள் தற்கால இளைஞர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.
அந்த வகையில் இந்தியா எந்தெந்த பிரிவுகளில் எல்லாம் கவனம் செலுத்தினால் மிகப்பெரிய உற்பத்தி சக்தியாக மாறும் என்பது குறித்து அவர் தெரிவித்துள்ள யோசனை பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது . எக்ஸ் பக்கத்தில் உலக அளவில் உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்திருக்கிறது என்ற பதிவை பகிர்ந்திருக்கிறார் ஸ்ரீதர் வேம்பு.

ஜப்பானையும் ஜெர்மனியையும் பாருங்கள் நம்மை விட அங்கே மக்கள் தொகை குறைவு, ஆனால் அந்த நாடுகள் உலகின் மிகப்பெரிய உற்பத்தி சக்திகளாக மாறி இருக்கின்றன எனக் கூறியிருக்கிறார் . இந்தியா சீனாவுடன் ஒப்பிடும்போது ஜப்பானிலும், ஜெர்மனியிலும் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தாக வேண்டும். அப்படிப்பட்ட சூழலிலும் இந்த நாடுகள் உலக அளவில் உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்துள்ளன என சுட்டிக்காட்டி இருக்கிறார் .
உலக அளவில் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்த நாடுகள் எட்டுவதற்கு முக்கிய காரணம் என்ன என்பதையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். மேம்பட்ட மற்றும் உயர் துல்லிய இயந்திரங்கள், மேம்பட்ட மெஷினரிகள் , சென்சார்கள், மெட்டீரியல்கள், சிறப்பு உலோக கலவைகளை, படிகங்கள், ரசாயனங்கள் தயாரிப்பது என தனித்துவமான துறைகளில் கவனம் செலுத்துவதே இந்த நாடுகள் தொழில் உற்பத்தி துறையில் முன்னிலையில் இருப்பதற்கு காரணம் எனக் கூறுகிறார் .
இந்த அனைத்து துறைகளுமே மிகவும் மதிப்பு கூட்டலை கொண்டவை எனக் குறிப்பிட்டிருக்கும் அவர் அதிக சம்பளம் தந்தாலும் இந்த துறைகளில் நாம் போட்டியிட முடியும் எனக் கூறியிருக்கிறார். அதனால் தான் அதிக ஊதியம் வழங்கும் ஜெர்மனி போன்ற நாடுகளும் உலகின் மிகப்பெரிய உற்பத்தி சக்திகளாக இருக்கின்றன என சுட்டிக்காட்டுகிறார். சீனாவும் அண்மைக்காலமாக இந்த துறைகளில் முன்னேறி வருகிறது என கூறுகிறார்.
சீனாவும் ஜெர்மனியை போலவே அதிக ஊதியம் தரக்கூடிய நாடாக மாறி வருகிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர் இந்தியாவும் இந்த பட்டியலில் முதலிடத்தில் வரவேண்டும் என்றால் உண்மையிலேயே ஒரு சிறந்த உற்பத்தி நாடாக இருக்கவும் நமது மக்களுக்கு அதிக வருமானத்தை வழங்க கூடிய ஒரு நாடாகவும் இந்தியா மாற வேண்டும் என்கிறார்.
மேலே கூறிய துறைகளில் எல்லாம் வளர்ச்சி அடைய வேண்டும் , நம்மால் நிச்சயம் அது முடியும் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்திருக்கிறார் . அவருடைய இந்த பதிவு சமூக வலைத்தள பக்கத்தில் பலரின் கவனத்தையும் பெற்று இருக்கிறது .


Click it and Unblock the Notifications