சோமோட்டோ நிறுவனம் நேற்று, "ப்யூர் வெஜ் மோட்" என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கென பிரத்யேக "ப்யூர் வெஜ் ஃப்ளீட்" (டெலிவரி படை) ஒன்றையும் உருவாக்கியது. இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபீந்தர் கோயல் நேற்றே ஒரு விளக்க பதிவை டிவிட்டரில் செய்த நிலையில், மக்களின் கடுமையான ஏச்சுக்களுக்கு பின்பு மீண்டுமொரு விளக்கப்பதிவைச் செய்துள்ளார். இதில் ப்யூர் வெஜ் மோட் மற்றும் ப்யூர் வெஜ் ஃப்ளீட் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டு உள்ளதையும் தெரிவித்தார்.

சோமேட்டோ சிஇஓ தீபீந்தர் கோயல் கொடுத்த 2வது விளக்க பதிவில், சுத்த சைவ உணவு ஆர்டர்களுக்கென தனி டெலிவரி படையைத் தொடர்ந்து இருக்கும், ஆனால், இந்த டெலிவரி படையை பச்சை நிற உடை அணிவித்து தனித்தனியாகக் காட்டும் முறையைக் கைவிட முடிவு செய்துள்ளோம். இனி எங்கள் அனைத்து டெலிவரி பணியாளர்களும் சிவப்பு நிற உடையையே அணிவார்கள் என்று தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுத்த சைவ உணவு ஆர்டர்களுக்கான டெலிவரி பணியாளர்கள் தனித்தனியாகக் காட்சிப்படுத்தப்பட மாட்டார்கள், ஆனால் பயன்பாட்டில் சுத்த சைவ உணவு ஆர்டர்களை, சுத்த சைவ டெலிவரி பிரிவு ஊழியர்களாலேயே வழங்கப்படும் என்பதை உறுதி செய்கிறோம் என தெரிவித்தார்.
பச்சை நிற ஆடையைப் பயன்படுத்தினால், சிவப்பு நிற உடை அணிந்த எங்கள் டெலிவரி பணியாளர்கள், அசைவ உணவுடன் தொடர்புடையவர்கள் என கருதப்பட்டு, சில குடியிருப்பு நலச் சங்கங்கள், அப்பார்ட்மென்ட்களில் அவர்கள் தடுக்கப்படுவார்கள். இதை தவிர்க்கும் வகையில் மொத்த டெலிவரி ஊழியர்களும் சிவப்பு நிற பேக், யூனிபார்ம் பயன்படுத்துவார்கள். எங்கள் டெலிவரி பணியாளர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது.
சைவம், அசைவம், பச்சை, சிவப்பு பிரிவால் எங்களின் சில வாடிக்கையாளர்கள் கூட தங்கள் வீட்டு உரிமையாளர்களுடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளக்கூடும் என்பதை இப்போது புரிந்துகொண்டுள்ளோம். எங்களுடைய தவறுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதியாக, இந்த விஷயத்தை குறித்து நேற்று இரவு முதல் பேசிய அனைவருக்கும் நன்றி. இந்த சேவையை அறிமுகப்படுத்தியதன் விளைவுகளைப் புரிந்துகொள்ள உதவி செய்தீர்கள். உங்கள் ஆதரவும், விமர்சனங்களும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன, சிறந்த முடிவை எடுப்பதற்கு இவை உதவி செய்தன.
தேவையற்ற ஈகோ, அல்லது பெருமை இல்லாமல் எப்போதும் உங்கள் கருத்துக்களை நாங்கள் கவனித்து வருகிறோம். உங்களுக்குத் தொடர்ந்து சேவை செய்து மகிழ்ச்சி அடைவோம் என்று வாடிக்கையாளர்களுக்கும், டிவிட்டர் வாசிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சோமேட்டோ சிஇஓ தீபீந்தர் கோயல்.


Click it and Unblock the Notifications