சோமேட்டோ இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக இருக்கிறது. குயிக் காமர்ஸ் துறையில் வளர்ந்து பிளிங்கிட் நிறுவனத்தையும் இந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இவற்றுக்கு தலைமை செயல் அதிகாரியாக செயல்படும் தீபிந்தர் கோயல் 2026 ஆம் நிதியாண்டு வரை தன்னுடைய நிறுவனத்தில் இருந்து எந்த ஊதியத்தையும் பெறப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 3.5 கோடி ரூபாய் ஊதியத்தை அவர் வேண்டாம் என மறுத்திருக்கிறார். தீபிந்தர் கோயல் இதற்கு முன்னதாக 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 36 மாதங்களுக்கு அதாவது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தான் சோமேட்டோ நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு ஊதியத்தையும் பெறப்போவதில்லை என அறிவித்திருந்தார். இந்த நிலையில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அதனை நீட்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சோமேட்டோ நிறுவனம் பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தின் அடிப்படையில் எந்த ஒரு ஊதியமும் பெறாமல் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்பினை தீபிந்தர் கோயல் வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதியம் தவிர்த்து வேறு சில பலன்கள் இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அதனை நிறுவனத்தின் வாரிய குழு உறுப்பினர்கள் முடிவு செய்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சோமேட்டோ நிறுவனத்தில் தீபிந்தர் கோயல் தன்வசம் 4.18 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். அதன் மதிப்பு தற்போது 10000 கோடி ரூபாயாக இருக்கிறது. 2023 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சோமேட்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு 140% உயர்ந்துள்ளது. நவம்பர் 27ஆம் தேதி நிலவரப்படி சோமேட்டோ நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 286 ரூபாய் ஆகும்.
இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2,45,243 கோடி ரூபாயாக இருக்கிறது. அதுவே இதன் போட்டி நிறுவனமான ஸ்விக்கியின் சந்தை மூலதன மதிப்பு 99,000 கோடி ரூபாய் ஆகும். சோமேட்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 5 நாட்களில் 5 சதவீதமும் கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 13 சதவீதமும் உயர்ந்துள்ளது.
மேலும் இந்தியாவின் பெஞ்ச் மார்க் குறியீடான சென்செக்ஸில் சோமேட்டோ நிறுவனம் இணைய இருக்கிறது. மேலும் இந்த நிறுவனம் தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து 8,500 கோடி ரூபாயை முதலீடாக திரட்ட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.இந்நிறுவனத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வைத்துள்ளன.


Click it and Unblock the Notifications