செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய டிரக், டாக்சி மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் வேலை நிறுத்தத்திற்கு மத்தியில் இந்தியாவில் சுமார் 2000 பெட்ரோல் பங்க்-களில் எரிபொருள் காலியானது மட்டும் அல்லாமல் பலர் சரியான போக்குவரத்து இல்லாமல் தவித்தனர். மேலும் பெரும்பாலான பெட்ரோல் பங்க்-களில் அதிகப்படியான கூட்டம் அலைமோதியது.
இந்த மோசமான சூழ்நிலையில் வாகனங்களை மட்டுமே நம்பி இயங்கும் டெலிவரி ஊழியர்களின் பணி பெட்ரோல் இல்லாமல் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. பெட்ரோல், எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல், உணவு டெலிவரி வர்த்தகம் கடந்த 2 நாட்களாக பெரிய அளவில் பாதித்தது.

இந்த நிலையில் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல் ஒரு சொமேட்டோ ஊழியர் குதிரையை எடுத்துக்கொண்டு உணவை டெலிவரி செய்யும் வீடியோ தற்போது சமுக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. பெட்ரோல், டீசல் இல்லாத நேரத்தில் எலக்ட்ரிக் வாகனம், சைக்கிள் ஆகியவற்றை உணவு டெலிவரி ஊழியர்கள் பயன்படுத்திய நிலையில், இவர் குதிரையைப் பயன்படுத்தியது பார்ப்பவர்களை வியக்க வைத்தது.

நம்முடைய தினசரி வாழ்க்கையில் குதிரையில் பயணிப்பவரைப் பார்ப்பது அரிதிலும் அரிதாக இருக்கும் வேளையில், பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிய ஹைதராபாத்தில் குதிரையில் சொமேட்டோ டெலிவரி செய்தது மக்களின் கவனத்தை ஈர்த்தது.
புதிதாக நிறைவேற்றப்பட்ட பாரதீய நியாயச் சன்ஹிதா சட்டத்தின் கீழ் hit-and-run வழக்குகளுக்கு ரூ.7 லட்சம் அபராதம் மற்றும் 10 ஆண்டுச் சிறை தண்டனை வழங்குவதை எதிர்த்து நாடு தழுவிய வேலைநிறுத்தப்போராட்டத்தை டிரக், டாக்சி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் நடத்தினர்.
இன்னும் நடைமுறைக்கு வராத இந்த விதிகள், வாகன ஓட்டிகளுக்குத் தேவையற்ற பாதிப்புகளை வழிவகுக்கும் என்றும், அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அகில இந்திய மோட்டார் போக்குவரத்துக் காங்கிரஸ் கூறிய வேளையில், போராததில் ஈடுபட்டவர்களை மத்திய அரசிடம் பேச்சுவார்த்தையின் மூலம் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
டிரக், டாக்சி மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் காரணமாகக் கடந்த 2 நாட்களாக ஹைதராபாத், நாக்பூர் நகரங்களைத் தாண்டி, ஹிமாச்சல பிரதேசம், சட்டீஸ்கர், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எரிபொருள், எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடும் உருவானது. நாட்டில் 2000 பெட்ரோல் பங்க் எரிபொருள் இல்லாமல் தற்காலிகமாக மூடப்பட்டது.


Click it and Unblock the Notifications