இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி தளமான சோமேட்டோ நிறுவனத்தின் முக்கிய அதிகாரி, இந்நிறுவனத்தை விட்டு வெளியேறிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை இந்நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு ஏப்ரல் 5ஆம் தேதி சனிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
சோமேட்டோ நிறுவனத்தின் உணவு ஆர்டர் மற்றும் விநியோகப் பிரிவின் தலைமை இயக்க அதிகாரியாக பணியாற்றி வந்த ரிஞ்சுல் சந்திரா தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சோமேட்டோ பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், எங்கள் நிறுவனத்தின் மூத்த நிர்வாகப் பணியாளராக நியமிக்கப்பட்ட ரிஞ்சுல் சந்திரா தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அவருடைய கடைசி பணி நாள் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி திங்கட்கிழமை முடிவடையும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஞ்சுல் சந்திரா தனது ராஜினாமா கடிதத்தில் சோமேட்டோ நிறுவனத்தில் ஏழு வருடமாக பணியாற்றிய நிலையில், தற்போது தனிப்பட்ட விருப்பம் மற்றும் புதிய தொழில் முயற்சிகளை தொடரும் கனவுடன் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்தில் இருந்த கடந்த ஏழு வருட பணி மிகவும் முக்கிய பயணமாக இருந்தது என்றும், தனக்கு வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் வாய்ப்புகளுக்கு நன்றியைத் தெரிவித்தார் ரிஞ்சுல் சந்திரா.
சோமேட்டோவின் முக்கிய வர்த்தக பிரிவான உணவு டெலிவரி செயல்பாடுகளின் வளர்ச்சியிலும் மற்றும் விரிவாக்கத்திலும் ரிஞ்சுல் சந்திரா முக்கிய பங்கு வகித்தார். இதேபோல் தேசிய அளவில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கியுள்ளார்.
சோமேட்டோ தற்போது எடர்னல் என்ற புதிய பிராண்ட் அடையாளத்தின் கீழ் இயங்கி வருவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி சேவைகளை விரிவாக்கம் செய்து வருகிறது. ரிஞ்சுல் சந்திரா-வின் வெளியேற்றம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகத்தில் சில தடுமாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் ரிஞ்சுல் சந்திரா-வின் வெளியேற்றத்தை தொடர்ந்து இந்த இடத்தில் அடுத்து யார் நியமிக்கப்படுவார் என்பது இன்னும் சோமேட்டோ நிர்வாகம் முடிவு செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications