இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ தனது சேவையை 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் விரிவாக்கம் செய்து வரும் இதேவேளையில், பெரு நகர வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் சிறப்பு சேவைகளை அறிவித்து வருகிறது.
இந்த வகையில் பார்ட்டிகள் மற்றும் வீட்டில் நடக்கும் சிறு நிகழ்வுகளுக்கான பெரிய ஆர்டர்களைக் கையாள்வதற்காக, சோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபின்தர் கோயல், இந்தியாவில் முதல் முறையாக "லார்ஜ் ஆர்டர் ஃப்ளீட்" சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இந்த புதிய முயற்சியில் டெலிவரி வாகனம் அனைத்தும் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் ஏற்புடைய சேவையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பெரிய ஆர்டர்களுக்கான தனி ஃப்ளீட்: புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஃப்ளீட், குறிப்பாக 50 பேர் வரை கொண்ட விருந்துகளுக்கான பெரிய ஆர்டர்களைக் கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபின்தர் கோயல் தனது X பக்கத்தில், "இன்று நாங்கள் இந்தியாவின் முதல் பெரிய ஆர்டர் ஃப்லைட்டை அறிமுகப்படுத்த மகிழ்ச்சியடைகிறோம். இது உங்கள் அனைத்து பெரிய (குழு/பார்ட்டி/நிகழ்வு) ஆர்டர்களையும் எளிதாகக் கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முழு மின்சார வாகன ஃப்ளீட் ஆகும், இது 50 பேர் வரை கொண்ட நிகழ்ச்சிக்கான ஆர்டர்களைக் கையாள்வதற்காகவே உருவாக்கப்பட்டது" என்று கோயல் தெரிவித்தார். மேலும், பெரிய ஆர்டர்-க்கான டெலிவரிக்கு பயன்படுத்தும் வாகனங்களின் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, பெரிய ஆர்டர்கள் பல சாதாரண இரு சக்கர வாகன ஃப்ளீட்-ஐ பயன்படுத்தி டெலிவரி செய்யப்பட்டன, இதில் வாடிக்கையாளர்கள் திருப்தி அடையாத நிலையில், எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யமுடியவில்லை. பெரிய ஆர்டர் ஃப்ளீட்-ன் இந்த குறைபாடுகளைத் திறம்படச் சமாளிக்கும் வகையில் இதற்கான தனிப்பட்ட சேவை கொண்டு வரப்பட்டு உள்ளதாக சோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபின்தர் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த புதிய சேவை சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு: சோமேட்டோவின் இந்த புதிய முயற்சி வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய அளவிலான விருந்துகள் மற்றும் நிகழ்வுகளுக்கு எளிதாகவும், திறமையாகவும் ஆர்டர் செய்ய இது வழிவகுக்கும்.
ஐபிஎல் பார்ட்டி முதல் பர்த்டே பார்டி, பண்டிகை நாளில் செய்யப்படும் ஆர்டர்கள் என அனைத்து விதிமான நிகழ்வுக்கும் இந்த சேவை பெரிய அளவில் பயன்படும்.


Click it and Unblock the Notifications