இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முன்னணி ஆன்லைன் உணவு விநியோக தளமான Zomato தொடர்ச்சியான இரண்டாவது காலாண்டில் ஆச்சரியமான லாபத்தைப் பதிவுசெய்து முதலீட்டாளர்களை குஷிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே பதிவு செய்து வந்த சோமேட்டோ ஜூன் காலாண்டில் முதல் முறையாக லாபத்தை பதிவு செய்தது மூலம் அதன் பங்கு விலை தொடர்ந்து உயர்ந்தது.

இந்த நிலையில் செப்டம்பர் 2023 காலாண்டில் 36 கோடி ரூபாய் நிகர லாபத்தைப் பெற்றுள்ளது மட்டும் அல்லாமல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எப்போதாவது ஒரு முறை லாபத்தை பெறும் என்ற முதலீட்டாளர் மனநிலையை உடைத்து தொடர்ந்து 2வது காலாண்டாக லாபத்தை பதிவு செய்துள்ளது.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் சோமேட்டோ நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகளின் மூலம் சுமார் 2,848 கோடி ரூபாய் அளவிலான வருவாயை பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டின் 1,661 கோடி ரூபாயில் இருந்து 72 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் சோமேட்டோ நிறுவனம் 302 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை பதிவு செய்தது இருந்தது. ஜூன் 2023 உடன் முடிவடைந்த முந்தைய காலாண்டில், சோமேட்டோ நிறுவனம் முதல் முறையாக லாபம் பெற்றது, இந்த லாப அளவும் வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே. செப்டம்பர் காலாண்டில் 36 கோடி ரூபாய் லாபமாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்வதற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, சமீப காலமாக சோமேட்டோ தனது சேவை 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு விரிவாக்கம் செய்து வரும் வேளையில் இந்த சேவைகளுக்கு அதிகப்படியான டிமாண்ட் உருவாகியுள்ளது.
சோமோட்டோ நிறுவனத்தை போல் அதன் சக போட்டி நிறுவனமான Swiggy-யும் டெலிவரி சேவை வழங்குநர்களை சிறிய நகரங்களுக்கு விரிவுபடுத்த துவங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது சோமேட்டோ டைனிங்-அவுட் வணிகத்தை உருவாக்கி வருகிறது. இந்த சேவையின் கீழ் பெரிய ஹோட்டல்களில் ஆன்லைன் டேபிள் புக்கிங் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களில் தள்ளுபடிகளை வழங்குகிறது. மேலும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் டிக்கெட் தளங்களுடன் இணைந்து பல்வேறு சேவைகளும் வழங்குகிறது. மேலும் Blinkit மளிகைக் கடைகளைத் திறக்கிறது.
இந்த முயற்சிகள் நடவடிக்கைகளில் இருந்து அதன் வருவாய்க்கு உதவியது, இது இன்னும் அதன் முக்கிய உணவு விநியோக வணிகம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் உணவகங்களுக்கும் விதிக்கும் தொடர்புடைய கட்டணங்கள் மூலம் 71 சதவீதம் அதிகரித்து 28.48 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சோமேட்டோ நிறுவன பங்குகள் 8.28 சதவீதம் உயர்ந்து 116.4 ரூபாயாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications