இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி தளமான சோமேட்டோ, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு நிதி முடிவுகளைத் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் வருவாய் கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் 64% அதிகரித்து ரூ.5,405 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.138 கோடி ஈட்டிய நிகர லாபம் 57% குறைந்து ரூ.59 கோடியாகக் குறைந்துள்ளது.
இதேபோல் முந்தைய காலாண்டை ஒப்பிடும்போது, அதாவது செப்டம்பர் காலாண்டை ஒப்பிடும் போது வரிக்கு பிந்தைய லாபம் (PAT) 66% குறைந்துள்ளது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாக உள்ளது. முந்தைய காலாண்டில் ரூ.176 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வருவாய் முந்தைய காலாண்டை ஒப்பிடுகையில் 13% அதிகரித்து ரூ.4,799 கோடியிலிருந்து ரூ.5,405 கோடியாக உயர்ந்துள்ளது.

டிசம்பர் காலாண்டு சோமேட்டோ-வுக்கு மிகவும் முக்கியமான காலமாக பார்க்கப்படுகிறது, இது பண்டிகை காலம் என்பதால் பொதுவாகவே அதிகப்படியான வர்த்தகம் இருக்கும், ஆனால் டிசம்பர் காலாண்டில் ஒரு முக்கியமான பிரச்சனை வெடித்துள்ளது. இது முதலீட்டாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நவம்பர் மாதம் இரண்டாம் பாதியில் சோமேட்டோ நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் மக்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் சேவைகளின் தேவை குறைந்ததால் (broad-based slowdown) லாபத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சோமேட்டோ இன்று முதலீட்டாளர்களுக்காக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், உணவு விநியோகத் தொழிலின் நீண்ட கால வளர்ச்சி இலக்குகள் குறித்து நிறுவனம் நம்பிக்கையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
வருடாந்திர அடிப்படையில் மொத்த ஆர்டர் மதிப்பு (GOV) 20% வளர்ச்சியை நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டின் முடிவில் தான் தெரியும்.
டிசம்பர் காலாண்டில் சோமோட்டோ-வின் மொத்த ஆர்டர் மதிப்பு (GOV) கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் 57% மற்றும் முந்தைய காலாண்டை ஒப்பிடுகையில் 14% அதிகரித்து உள்ளது. டிசம்பர் காலாண்டில் ரூ.20,206 கோடி மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்துள்ளது.
டிசம்பர் காலாண்டு முடிவும், நவம்பர் மாதத்தில் இருந்து வர்த்தகம் குறைந்துள்ளதாகத் தனது நிதி முடிவுகளில் வெளியிட்டதைத் தொடர்ந்து, சோமேட்டோ பங்குகள் கடுமையாகச் சரிந்துள்ளன. தேசிய பங்குச் சந்தையில் இன்று சோமேட்டோ பங்கு விலை 7% க்கும் அதிகமாகச் சரிந்து ரூ.230.70 க்கு வர்த்தகம் நடந்து முடிந்தது. நிதி முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் பங்கு விலை ரூ.241.75 என்ற அன்றைய குறைந்தபட்ச விலைக்குச் சரிந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications