பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ (zomato)சந்தை மூலதன அடிப்படையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை விட அதிக மதிப்பு கொண்ட நிறுவனமாக மாறி இருக்கிறது.
இந்தியாவில் உணவு டெலிவரி பிரிவில் முன்னணி நிறுவனமாக சோமேட்டோ நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்து பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையின் பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸில் இந்த நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சோமேட்டோ நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு நடப்பாண்டில் 142 சதவீதம் உயர்ந்து 2.83 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் சந்தை மூலதன அடிப்படையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை சோமேட்டோ மிஞ்சி விட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 2.79 லட்சம் கோடி ரூபாய் ஆகும் .அதே போல பிரபல பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சந்தை மூலதனத்தையும் சோமேட்டோ கடந்துவிட்டது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 2.5 லட்சம் கோடியாக இருக்கிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்ஸில் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் நிறுவனம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக சோமேட்டோ நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளது. டிசம்பர் 20 ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த மாதம் தான் மும்பை பங்குச்சந்தை சார்பாக, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்திற்கு பதிலாக சோமேட்டோ நிறுவனம் சென்செக்ஸ் குறியீட்டில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஒரு நிறுவனத்தின் ஆறு மாத கால சராசரி சந்தை மூலதன அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு சென்செக்ஸ் குறியீட்டில் அவற்றை சேர்ப்பது அல்லது நீக்குவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இந்திய பங்குச்சந்தையின் முக்கியமான ஒரு பெஞ்ச் மார்க் குறியீடு தான் சென்செக்ஸ். இதில் 30 பெரிய மற்றும் நிதி ரீதியாக சிறந்த நிறுவனங்கள் மட்டுமே இடம் பெறும்.
சோமேட்டோ நிறுவனம் இதில் சேர்க்கப்படுவது அந்த நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது. சோமேட்டோவின் பங்கு மதிப்பு நடப்பாண்டில் மட்டும் 136 சதவீதம் உயர்ந்துள்ளது. கூடிய விரைவில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 510 என்ற அளவில் வர்த்தகமாகும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக சோமேட்டோ நிறுவனம் தன்னுடைய குயிக் காமர்ஸ் தளமான பிளிங்கிட்டில் கணிசமான வருவாயை ஈட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 24 பங்கு தரகு நிறுவனங்கள் சோமேட்டோ பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்திருக்கின்றன. டிசம்பர் 20ஆம் தேதி நிலவரப்படி சோமேட்டோவின் ஒரு பங்கு மதிப்பு 285 ரூபாய் ஆகும்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications