மும்பை: பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த வியாபாரியும் கூட.
திரைத்துறையில் சம்பாதித்த பணத்தை அந்தத் துறையில் மட்டும் அவர் முதலீடு செய்வதில்லை. அவர் மற்ற பணக்காரர்களைப் போலச் செலவு செய்தாலும் தனது மன திருப்திக்காகப் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார்.
இதுவே அவரது வெற்றிக்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளது.
பல துறையில் பல முதலீடு
ஷாருக்கான் திரைத்துறையில் இருந்தாலும் கூட அவர் விளையாட்டு மற்றும் கல்வி துறைகளில் அதிக அளவு முதலீடு செய்து அந்தத் துறையில் சாம்பியன்களை உருவாக்குவதில் விருப்பம் கொண்டவர்.
'ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட்' என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் படங்களைத் தயாரித்து வரும் ஷாருக்கான், இன்னொரு முக்கியத் துறையான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணி செய்யும் VFX யூனிட் ஒன்றையும் வைத்துள்ளார். மேலும் அவர் IPL கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பார்ட்னர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மெக்சிகோ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமான கிட்சானியா என்ற நிறுவனத்தின் இந்திய கிளையிலும் அவர் பெருமளவு முதலீடு செய்துள்ளார்.
ரிஸ்க் எல்லாம் வெறும் ரஸ்க்
திரையுலகில் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் சொந்தக்காசை போட்டுப் படம் எடுக்க மாட்டார்கள். பைனான்ஸ் வாங்கிப் படமெடுத்து அந்தப் படத்தை விற்ற பின்னர்ப் பைனான்சில் வாங்கிய பணத்தைக் கட்டிவிடுவார்கள். ஆனால் ஷாருக்கானுக்கு அந்தப் பழக்கமே இல்லை.
அவர் எப்போது தன்னுடைய படங்களை அடுத்தவர் காசில் ரிஸ்க் எடுக்க மாட்டார். முழுக்க முழுக்கத் தனது சொந்த பணத்தைப் போட்டே அவர் படமெடுப்பார். யாரிடமும் கடன் வாங்கக் கூடாது என்பது அவருடைய கொள்கைகளில் ஒன்று.
பங்கு சந்தை
ஷாருக்கான் இதுவரை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததே இல்லை. அதில் அவருக்கு விருப்பமும் இல்லை.
கனவு
ஷாருக்கானின் தந்தை பல வருடங்களாக வெற்றிகரமான ரெஸ்டாரெண்டை நடத்தி வருகிறார். ஆனால் ஷாருக்கானுக்கு அதில் சிறிதும் விருப்பமில்லை. அவர் தனக்கென ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு அதில் மட்டுமே முதலீடு செய்பவர்.
அவருடைய மிகப்பெரிய திட்டங்களில் ஒன்று சொந்தமாகப் பிலிம் ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான். ஸ்டுயோவை பொருத்தவரை போட்ட முதலீட்டுக்கு ஏற்ற வருமானம் உடனே வருவதில்லை. ஆனாலும் தனக்கென ஒரு ஸ்டுடியோ வேண்டும் என்றும் அதில் பல தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் படமெடுக்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் ஆசை. இது முழுக்க முழுக்க அவருடைய கொள்கைதானே தவிர வியாபாரமாக அவர் பார்ப்பதில்லை.
வெற்றிக்கும் ஏதும் ஃபார்மூலா இல்லை
ஷாருக்கானின் படங்கள் பல வெற்றி தோல்விகளைப் பார்த்துள்ளது. ஒரு வெற்றிப் படம் எப்படி உருவாக வேண்டும் என்ற ஃபார்முலா இதுவரை யாரும் வகுத்ததில்லை.
படம் வெளியாகி வெற்றி-தோல்வி அடையும் வரை அந்தப் படத்தின் ரிசல்ட் என்ன என்பதை யாராலும் ஊகிக்க முடியாது. இருப்பினும் ரிஸ்க் நிறைந்த இந்தத் தொழிலில் அவர் முதலீடு செய்து வெற்றியும் பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications