டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு என இரண்டுமே 16 இலக்க எண், காலாவதி தேதி மற்றும் பின் கோடு கொண்டவை தான். டெபிட் கார்டில் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தினைச் செலவு செய்வீர்கள், ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் கிரெடிட் கார்டு பயன்படுத்திக் கடன் பெற்றுச் செலவு செய்ய முடியும்.
எனவே இங்கு டெபிட் கார்டுகளை விட ஏன் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை என்று விளக்கமாகப் பார்க்கலாம்.
சலுகைகள்
கிரெடிட் கார்டுகள் மூலம் ஷாப்பிங் செய்யும் போது கேஷ்பேக் போன்று பலவிதமாகச் சலுகைகள் கிடைக்கும். மேலும் கடன் வாங்கிச் செலவு செய்து அதனைச் சரியாகத் திருப்பிச் செலுத்தும் போது வெகுமதி புள்ளிகளும் கிடைக்கும். அதனைப் பயன்படுத்திப் பரிசுகள், சேவை மெறுகேற்றுதல் / புதுப்பித்தல் போன்றவற்றைப் பெற முடியும்.
டெபிட் கார்டில் எப்போதாவது தான் இது போன்ற நன்மைகள் கிடைக்கும்.
ஈஎம்ஐ
கிரெடிட் கார்டில் தவணை முறையில் பொருட்களை வாங்க முடியும், டெபிட் கார்டில் அப்படிச் செய்ய முடியாது. ஆனால் தவணை முறையில் கிரெடிட் கார்டு பயன்படுத்திப் பொருட்கள் வாங்கும் போது அதற்கு வட்டி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்க.
மோசடி குறைவு
டெபிட் கார்டு பரிவர்த்தனையில் மோசடி நடைபெற்றால் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தினையும் இழக்க நேரிடும். ஆனால் கிரெடிட் கார்டில் அப்படிப்பட்ட ரிஸ்க் இல்லை. வரம்பிற்கு மீறி பரிவர்த்தனை செய்ய முடியாது. வங்கியின் பணம் தான் மோசடியில் சிக்கும்.
கிரெடிட் ஸ்கோர்
கடன் வேண்டும் என்று விண்ணப்பிக்கும் போது வங்கிகள் உங்கள் கிரெடிட் ஸ்கோர் என்னவென்று செக் செய்யும். கிரெடிட் கார்டு பயன்படுத்திக் கடன் பெற்று அவற்றைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தி இருக்கும் போது கிரெடிட் ஸ்கோர் உயர்ந்து இருக்கும். எளிதாகக் கடன் பெற முடியும். டெபிட் கார்டு மட்டும் வைத்து இருக்கும் போது கிரெடிட் ஸ்கோரை உயர்த்த முடியாது.
குறிப்பு
கடன் பெற்று அதனைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியும் என்றால் மட்டும் கிரெடிட் கார்டு வாங்குவது நல்லது. சரியான நேரத்தில் கடனை திருப்பு செலுத்தவில்லை என்றால் தாமதமாகக் கட்டணத்தினைச் செலுத்தியதற்கு அபராதம் மற்றும் வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும். எனவே கிரெடிட் கார்டு பயன்படுத்தும் முன்பு சிந்தித்துச் செயல்படுவது நல்லது.


Click it and Unblock the Notifications