சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி இருவரின் மீதும் வருமான வரித் துறை ஒரு புதிய வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ஐஎன் எக்ஸ் மீடியா, ஏர்செல் மேக்சிஸ் வழக்குகள் இல்லாமல் இது தனி வழக்கு. சுவாரஸ்யமாக இது ஒரு ரொக்கம் (Cash) சம்பந்தப்பட்ட வழக்கு.
விசாரிக்கவே இல்லை
ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனம் வாங்கும் போது நிதி அமைச்சகம் வழங்க வேண்டிய அனுமதியை ஒழுங்காக விசாரித்து வழங்காமல், காசை வாங்கிக் கொண்டு, ஒரு தலைப்பட்சமாக, அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்படாமல், கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த அனுமதியை கார்த்தியின் தந்தை ப சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அதிகார துஸ்பிரயோகம் செய்து வாங்கியதாக ஒரு வழக்கை விசாரித்து வருகிறது சிபிஐ.
பணச் சலவைப் பிரச்னை
ஏர்செல் வழக்குகளே முடிந்த பாடில்லை, உடனடியாக வாசன் ஹெல்த் கேர் குழுமத்தில் கார்த்தி சிதம்பரம் ஒரு கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார். சிகுயா கேப்பிடல் (Sequoia Capital India) நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் அந்நிய நேரடி முதலீடுகளை, தன் இஷ்டத்துக்கு பணச் சலவை செய்து பயன்படுத்தி இருப்பதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர். அங்கும் சென்று அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது.
காசு வாங்கியது உறுதி
கார்த்தி சிதம்பரம் தன் பெயரில் இருந்த நிலங்களை 26.74 கோடி ரூபாய்க்கு விற்று இருக்கிறார். அதில் 19 கோடி ரூபாய் மட்டும் வங்கிக் கணக்குகள் மூலம் வாங்கிக் கொண்டு, மீதமுள்ள 7.74 கோடி ரூபாயை காசாக (ரொக்கமாக) வாங்கி இருக்கிறார். கார்த்தி சிதம்பரத்தை போலவே அவரின் மனைவி ஸ்ரீநிதியும் ஐந்து கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் வீட்டை விற்று, அதில் 3.64 கோடியை மட்டும் வங்கிக் கணக்குகள் மூலம் முறையாக சட்டப்படி பெற்றுக் கொண்டார். மீதத் தொகையான 1.36 கோடி ரூபாயை கணவர் வாங்கியது போல ரொக்கமாக வாங்கி இருக்கிறார்.
காசு தான் தவறு
சாமானியர்களே, நீங்களும் நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்கும் போதும் விற்கும் போது பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வங்கிகள் மூலமாகவே நடைபெற வேண்டும். அதையும் மீறி காசு (ரொக்கம்) வாங்கினால் இந்திய வருமான வரிச் சட்டம் சரத்து 276, 277, 278 படி அது குற்றம். தற்போது கார்த்தி சிதம்பரம் மீது இந்திய வருமான வரிச் சட்டம் சரத்து 276, 277, 278 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது வருமான வரித் துறை.


Click it and Unblock the Notifications