Bank loan வேண்டுமா..? பிரியாணிக் கடை வெங்கி செய்ததைப் பாருங்கள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறிப்பு: மக்களுக்கு பிசினஸுக்காக கடன் (Bank Loan) வாங்குவது எப்படி என்று எளிதில் சொல்ல ஒரு கதாபாத்திரத்தை வைத்து இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறோம். இதில் வரும் வெங்கி என்பது ஒரு எதார்த்தக் கற்பனையே. எனவே பிசினஸில் உள்ள சில எதார்த்த சிக்கல்கள், நண்பர்களுக்கு நடந்த சோகங்கள் எல்லாம் ஒரே நபருக்கு நடந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இன்றைய தேதிக்கு இந்தியாவில் சம்பளதாரர்களாக இருந்து புதிதாக தொழில் தொடங்குபவர்கள் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்கு நல்ல உதாரணம் பெங்களூரூ. இந்தியாவின் ஸ்டார்ட்அப் ஹப் என்றால் அது பெங்களூரில் இருக்கும் கோரமங்களா தான் என்கிறார்கள்.

அந்த அளவுக்கு ஒரு வியாபார வெறி பிடித்து அழைந்து கொண்டிருக்கிறார்கள் நம் இந்திய இளைஞர்கள். இந்தியாவிலேயே உண்மையாகவே ஒரு கலவையான பொருளாதார அமைப்பு கொண்ட மாநிலம் என்றால் அது தமிழகம் தான் என்கிறார் அமர்த்தியா சென்.

ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்யேக ஆஃபர்.. Flipkart பிக் ஷாப்பிங் டே சிறப்பு தள்ளுபடி விற்பனை ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்யேக ஆஃபர்.. Flipkart பிக் ஷாப்பிங் டே சிறப்பு தள்ளுபடி விற்பனை

காரணம்

காரணம்

தமிழகத்தில் தான் உற்பத்தித் துறை, சேவைத் துறை, விவசாயம், வியாபாரம், சிறு குறு தொழில், நடுத்தர தொழில் முனைவோர்கள், சின்ன அளவில் நிதி சேவை நிறுவனங்கள், பெரிய வங்கிகள் என பல தரப்பட்ட பொருளாதார அமைப்பைப் பார்க்க முடியும். அதனால் தான் தமிழகத்தைப் புகழ்கிறார் அமர்த்திய சென்.

எப்படி வியாபாரி

எப்படி வியாபாரி

ஒன்றுமே விளையாத நிலம் கொண்ட குஜராத்திகள், ராஜஸ்தானிகள் முழுக்க முழுக்க வியாபாரத்தில் இறங்கிவிட்டார்கள். அவர்கள் வெறுமையும், வெற்று நிலங்களும் அவர்களை வியாபாரியாக உருவாக்க காரணமாக அமைந்து விடுகிறது. ஆனால் தமிழக வியாபாரிகளுக்கு அப்படி இல்லை. நமக்கு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். சம்பளத்துக்கு வேலைக்கு போக வேண்டுமா, உற்பத்தித் துறையும், சேவைத் துறைகளும் இருக்கிறது. சின்ன தொழில் தொடங்க வேண்டுமா ஓகே...

விழிப்புணர்வும் ஆசையும் தான்

விழிப்புணர்வும் ஆசையும் தான்

ஆக பெரும்பாலான தமிழர்கள் வியாபாரம் செய்ய வருகிறார்கள் என்றால் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகவும், ஒரு முதலாளிக்கு உழைத்துக் கொடுத்து மாத சம்பளம் வாங்குவதை விட தன் உழைப்பில் தானே சம்பாதிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வும் தான் காரணமாக இருக்கிறது.

எதார்த்தம்

எதார்த்தம்

வசனம் எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது, ஆனால் எதார்த்தம் பயங்கரமாகத் தான் இருக்கிறது. அந்த பயங்கரங்கள் பட்டியலில் முதல் இடம் முதலீடு. தொழில் தொடங்க முதன் முதலில் போட வேண்டிய முதல். அந்த முதலில் இருந்தே வெங்கி என்ன செய்தார், தன் தொழிலை எப்படி வளர்த்து எடுத்தார், வங்கிக் கடனுக்கு என்னவெல்லாம் செய்தார்..? வாருங்கள் ஒரு நடை போடுவோம்.

வெங்கியைப் பற்றி

வெங்கியைப் பற்றி

வெங்கிக்கு தற்போது வயது 32. முழு பெயர் வெங்கட்ராமன். சொந்த ஊர் கும்பகோணம். தற்போது சென்னையில் செட்டிலாகிவிட்டார். சென்னையில் வேளச்சேரி பகுதியில் ஒரு இரவு நேர பிரியாணிக்கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். கடந்த ஆறு வருடமாக பிசினஸ் செய்கிறார். முன்னாள் ஐடி ஊழியர். தற்போது வங்கியில் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, தன் இரவு நேரக் கடையை இன்னும் சில இடங்களில் திறக்க வேலை பார்த்து வருகிறார். இவர் என்ன செய்தார்..? எப்படி தன் பிசினஸ் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்..? எல்லாவற்றையும் முழுமையாகப் பார்ப்போம்.

திட்டம்

திட்டம்

வெங்கிக்கு நல்ல பிரியாணி சமைக்கத் தெரியும். அதை அவர் பாட்டி இடமிருந்து கற்றுக் கொண்டார். வெங்கியின் அம்மாவே, வெங்கியின் பிரியாணிக்கு பெரிய விசிறி என்றால் வெங்கியின் திறமையைப் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரும் வெங்கியின் பிரியாணியைப் பாராட்டும் போது, பிரியாணிக் கடை போட்டு கல்லா கட்டினால் என்ன என்கிற ஆசை தொற்றிக் கொண்டது. ஆனால் அது முழுமையான பிசினஸ் பிளானாக 2010-ல் தான் உருவெடுத்தது.

வீட்டுக் கடன் முடிவு

வீட்டுக் கடன் முடிவு

வீட்டில் சொன்னார் வெங்கி. அப்பா வாங்கிய வீட்டுக் கடன் அடையும் வரை வேலைக்கு போகச் சொன்னார்கள். கட்டாயத்தில் வேலைக்குப் போனார். 2012 ஜனவரியில் வீட்டுக் கடன் முடிந்தது. அப்பா வீட்டுக் கடன் போட்டு வெங்கியின் சம்பளத்தில் விரைவாக வீட்டுக் கடனைக் கட்டி முடித்து, ஒரு 900 சதுர அடியில் ஆலந்தூரில் சொந்த வீடு வந்துவிட்டது. இனி தங்குவதில் சிக்கல் இல்லை.

பயம்

பயம்

அடுத்த ஒரு வருடம் சின்ன தயக்கத்திலேயே, பிரியாணி கடை போட்டால் என்ன ஆகும் என்கிற பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. அப்படியே ஒரு வருடம் ஓடி விட்டது. இதற்கு மத்தியில் கடை தொடங்க பல இடங்களிலும் விசாரிக்கத் தொடங்கினார். சில திருமணங்களுக்குச் சென்று 100 பேருக்கு, 200 பேருக்கு என பல்காக பிரியாணி சமைத்து தன் திறமையைச் சோதித்துக் கொண்டார்.

தவறுகள்

தவறுகள்

ஒரு சில முறை மிக மோசமாக சொதப்பிய பின் பல்காக சமைக்கும் போது செய்யக் கூடாத தவறுகளை உணர்ந்து கொண்டார். அடுத்தடுத்து ஒரே நேரத்தில் 500 பேருக்கு பிரியாணி சமைத்து தனக்கு தானே நம்பிக்கை சேர்த்துக் கொண்டார். சரி இனி என்னால் 500 பேருக்கு எளிமையாக, அதிகம் சிரமப் படாமல், ஸ்டெரெஸ் இல்லாமல் சிக்கன், மட்டன், ஃபீப் பிரியாணி சமைக்க முடியும் என நம்பிக்கை பிறந்தது. இது போதும் தொழில் தொடங்கிவிடலாம் என ஒரு உறுதி பிறந்தது. ராஜினாமா செய்தார். கடைசி மாதச் சம்பளம் + மற்ற பணம் எல்லாம் சேர்த்து 2012 டிசம்பரில் 43,000 ரூபாய் தான் கையில் கிடைத்தது. இது தான் இப்போது வெங்கி கையில் தொழில் தொடங்க இருக்கும் பணம்.

அப்பா கணக்கு

அப்பா கணக்கு

வெங்கியின் அப்பா ஒரு முன்னாள் அரசு ஊழியர். 2010-ல் தான் ஓய்வு பெற்றார். மாதம் 15,000 ரூபாய் ஓய்வு ஊதியம் வரும். அவ்வளவு தான். இந்த பணம் 3 பேரின் சாப்பாட்டுச் செலவுக்கே சரியாகி விடும். அதற்கு மேல் வயதான பெற்றோர்களுக்கான சர்க்கரை நோய் மாத்திரை, ரத்த அழுத்த நோய்க்கான மாத்திரைகளுக்கே 2000 ரூபாய் தேவை. எப்படியும் வெங்கி வேலைக்கு போனால் தான் குடும்பத்தை இழுத்துப் பிடிக்க முடியும் என்பது வெங்கி அப்பாவின் கணக்கு.

வெங்கி கணக்கு

வெங்கி கணக்கு

இப்போதே, உடலில் வலு இருக்கும் போதே, தனக்கான பிசினஸை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அப்பா வயதில் நிம்மதியாக ஓய்வு காலத்தை நினைத்து வருத்தப்படாமல் இருக்கலாம் என்பது வெங்கியின் கணக்கு. ஐடியில் தன் திறமையை தனக்கு மேல் இருக்கும் மேலாளர் தொடங்கி, மொத்த நிறுவனமும் திருடிக் கொண்டு ஒரு துண்டு ரொட்டியைத் தூக்கிப் போடுவது போல ஒரு சம்பளத்தைக் கொடுக்கிறார்கள் என ஒரு பெருங்கோபமும் உண்டு.

சாப்பாடு கிடையாது

சாப்பாடு கிடையாது

அப்பாவுக்கு, படித்த தன் மகன் வெங்கி கெளரவமாக வேலைக்கு போகாமல், சமையல் கரண்டி பிடிப்பத்தில் உடன்பாடில்லை. வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்க சம்மதிக்கவில்லை. அதோடு தன் பென்ஷன் பணத்தோடு இன்னும் ஒரு 5,000 ரூபாய்க்கு நிலையான வருமானத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு பிசினஸ் தொடங்கு, இல்லை என்றால் உனக்கு இங்கு சாப்பாடு போட முடியாது எனக் கடுமையாகப் பேசி விட்டார்.

சிந்தனை

சிந்தனை

அப்பாவோடு சண்டை போட்டு விட்டு, வெளியில் பார்க்கில் அமர்ந்து யோசிக்கத் தொடங்கினான். அப்பா சொல்வது போல மாதம் 5,000 ரூபாய் நிலையான வருமானம் ஈட்ட வேண்டும் என்றால் 7.5 லட்சம் ரூபாய் பணத்தை வங்கியில் 8% வட்டிக்கு எஃப்.டியாகப் போட வேண்டும். இப்போது கையில் இருக்கும் 43,000 தவிர வேறு பணம் இல்லை. இது சாத்தியப் படாது என நேறே எழுந்து போய் "எனக்கு உங்க சாப்பாடு வேண்டாம். ஆனால் நான் இங்கு தன் தங்குவேன்" எனச் சொல்லிவிட்டான். எதார்த்தவாதியான அப்பாவும் ஏற்றுக் கொண்டார். ஆக இனி வெங்கி தங்குவதற்கு மட்டுமே வீட்டைப் பயன்படுத்த முடியும். சாப்பாட்டுக்கு..?

புது வேலை

புது வேலை

அடுத்த ஒரு வாரத்தில் வேளச்சேரி மெயின் ரோட்டில் பிரியாணி மட்டுமே விற்கும் ஒரு பிரபல கடையில் காசாளராக பணியில் சேர்கிறார். இரண்டு வேளை சாப்பாடு அங்கேயே கிடைத்துவிட்டது. தங்குவதற்கு மட்டுமே அப்பாவின் வீட்டைப் பயன்படுத்தினார் வெங்கி. பிசினஸ் நுணுக்கங்களைக் கற்கிறார். சரக்கை கையாளுதல், பிரியாணிக் கடையில் கணக்கு வழக்கு பராமரிப்பது, பிரியாணிக்கான செலவைக் குறைக்க செய்யும் சின்ன சின்ன ட்ரிக்ஸ்கள். கேஸை (எரிவாயு) மிச்சம் பிடிக்கும் தந்திரங்களை எல்லாம் கற்றுக் கொள்கிறார். இரண்டு மூன்று மாதங்களில் எல்லாம் கற்றுக் கொண்டோம் என ஒரு தெளிவு பிறக்கிறது. இன்னும் பிசினஸ் மீது நம்பிக்கை கூடுகிறது.

சிம்பில் கடை

சிம்பில் கடை

முதல் முறையாக 2013 ஜூன் மாதத்தில் ஒரு பிரபல தனியார் ஐடி நிறுவனத்தின் பின் புறம் நியூ காலனி முதல் குறுக்கு சாலையில் ஒரு சின்ன கடை போடுகிறார். கடை அதிகாலை 3 மணி முதல் காலை 11 மணி வரை எனவும் முன்பே முடிவு செய்திருந்தார். 500 சதுர அடி கடைக்கு மாத வாடகை 12,000 ரூபாய். அட்வான்ஸாக மட்டும் 1.5 லட்சம் கேட்கிறார்கள். இந்த 1.5 லட்சம் ரூபாய் அட்வான்ஸைக் குறைத்து 1 லட்சம் ரூபாய்க்கு கொண்டு வந்துவிட்டார். இதற்கு மேல் அடுப்பு, பாத்திர பண்டங்கள், மளிகை சாமான்கள், வாடிக்கையாளர்கள் சாப்பிட தட்டு, குடிக்க தண்ணீர் டம்பளர்கள், என ஒரு பெரிய பட்டியலே இருந்தது. மொத்தம் சுமார் 2.5 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. மிக முக்கியமாக வாடிக்கையாளர்கள் நின்று கொண்டே தான் சாப்பிட வேண்டி இருந்தது. வெங்கிக்கு ஆரம்பத்தில் பரவாயில்லை என விட்டுவிட்டார்.

முடியாது

முடியாது

அப்பா உதவ மறுத்துவிட்டார். அம்மா மருமகளுக்காக சேர்த்து வைத்திருந்த நகையில் பாதியைக் கொடுக்கிறார். ஒரு லட்சம் தேறிவிட்டது. அம்மா தன் சொந்த வைர மூக்குத்தி ஒன்றையும் விற்கச் சொல்லிவிட்டார். இன்னொரு 75,000 தேறிவிட்டது. இன்னும் 75,000 தேவைப்பட்டது. அடித்துப் பிடித்து நண்பர்களிடம் வாங்கிவிட்டார். ஒரு நன்னாளில் முதன்முதலாக வெங்கி தன் கையால் 100 பேருக்கு பிரியாணி சமைத்துக் கொண்டு போனார். அதோடு தன் பிரியாணிக் கடைப் பெயரில் சமூக வலைதள கணக்குகளையும் தொடங்கி பொது அழைப்பு விடுத்தார். கடை திறப்புக்கு தனக்கு கடன் கொடுத்து உதவிய நண்பர்களை எல்லாம் கூப்பிட்டு முதல் நாள் வியாபாரத்தை ஒரு மாதிரியாக முடித்தார். ஆனால் போட்ட காசுக்கு சல்லிப் பைசா லாபம் இல்லை.

மார்க்கெட்டிங்

மார்க்கெட்டிங்

அடுத்த நாள் காலையிலேயே தன் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமல் தன் கடையைப் பற்றியும், தன் பிரியாணியின் சிறப்பைப் பற்றியும் சொல்லி அழைக்கிறார். இருந்தாலும் ஒரு பயத்துடன் அரை மனதுடன் 75 பேருக்கு மட்டுமே சமைத்து எடுத்துச் செல்கிறார். ஒருவழியாக காலை 8 மணி வரை காத்திருந்து விற்று முடித்தார். லாபம் என்று சொல்ல முடியாது. உழைத்ததற்கான கூலி கிடைத்தது போல இருந்தது. வெங்கிக்கு கொஞ்சம் உதறல் எடுத்துவிட்டது. "என்னய்யா இது இவ்வளவு கஷ்டப்பட்டாத் தான் கூலியே திரும்ப எடுக்க முடியுமா..?" என வியந்தும் போனார். ஆனால் பிசினஸ் தொடக்கத்தில் இப்படி எல்லாம் நடக்கும் என தியரிக்களைப் படித்ததை வைத்து சமாளித்துக் கொண்டார்.

விடுமுறை

விடுமுறை

அடுத்த நாள் கடையைத் திறக்கவில்லை. முழுவதுமாக மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்தினார். தனக்கு தெரிந்த நண்பர்கள், சக ஊழியர்கள், தன் சீனியர்கள், தன் முன்னாள் மேலாளர்கள் என எல்லோருக்கும் ஆன்லைனில் அழைப்பு விடுத்தார். மூன்றாவது நாள் லீவில் வெறித்தனமாக மார்க்கெட்டிங் செய்த சந்தோஷத்தில், எப்படியும் விற்று விடும் என நம்பி 75 கிலோ பிரியாணி சமைத்தார். நினைத்த படியே விற்றுத் தீர்ந்தது. இப்படியாக முதல் நாள் இரவு 11 மணிக்கு பிரியாணி சமைக்கத் தொடங்கி, 3 மணிக்கு கடை திறந்து 8 மணி வரை வியாபாரம் பார்த்து விட்டு பாத்திர பண்டங்களை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு, கடையை சுத்தம் செய்துவிட்டு, வீட்டுக்குப் போக காலை 11 மணிக்கு மேல் ஆனது. அதன் பிறகு அன்றைக்கான மார்க்கெட்டிங். இது தான் நம் வெங்கியின் தினசரி ஆனது.

ஒரு மாதத்துக்குப் பின்

ஒரு மாதத்துக்குப் பின்

இப்படி ஒரு மாதம் கடத்தினால் கடை வாடகை கொடுக்கக் கூட காசு இல்லை. ஆனால் கடுமையாக உழைத்திருக்கிறார். ஆக மீண்டும் கடைக்கு இரண்டு நாள் விடுமுறை விட்டு, அடித்துப் பிடித்துக் கடன் வாங்கி கடை வாடகையைக் கொடுத்துவிட்டார். இனி வெறுமனே பிரியாணி வியாபாரம் பார்த்தால் பத்தாது கூடவே மார்க்கெட்டிங்கும் சிறப்பாகப் பார்க்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

அதிரடி ஆஃபர்

அதிரடி ஆஃபர்

மூன்று நாட்கள் விடுப்புக்குப் பின், முதல் முறை வாடிக்கையாளருக்கு ஒரு ப்ளேட் பிரியாணி ப்ரீ என்கிறார். அதை எப்படி கணக்கு வைத்துக் கொள்வார்..? தன் கடைக்கு முதல் முறையாக பிரியாணி சாப்பிட வரும் நபரின் செல்போன் எண்ணை வைத்து கணக்கு வைத்துக் கொண்டார். அதை தன் கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டு சரி பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் வியாபார நேரத்தில் ஒரு வாடிக்கையாளர் புதிய நபரா இல்லையா என உட்கார்ந்து பொறுமையாகத் தேடிக் கொண்டிருக்க முடியவில்லை. ஓரளவுக்கு சரி பார்த்துவிட்டு தன் இலவச பிரியாணியைக் கொடுக்கத் தொடங்கினார். பிசினஸும் பிக் அப் ஆனது.

செம மார்க்கெட்டிங்

செம மார்க்கெட்டிங்

இலவச பிரியாணி என்பதால் ஒரு பக்கம் வெங்கியின் புகழ் மெல்ல ஐடி வட்டாரங்களில் பரவத் தொடங்கியது. அவர் பிரியாணியின் புகழும் நல்ல படியாக பேசப்பட்டது. அதோடு சில ஐடி ஊழியர்கள் ஒரு படி மேலே போய், தங்கள் சமூக வலைதளங்களிலும், வெங்கி கடையின் பெயரை டேக் செய்து சாப்பிட்டவர்கள் தாங்களாக பதிவுகள் போட்டார்கள். இதனால் பல புதிய வாடிக்கையாளர்கள் தினமும் வரத் தொடங்கினர். இந்த ஆஃபரைச் சொன்ன நாள் முதல் 75 கிலோ பிரியாணி காலை 6.30 மணிக்கு எல்லாம் காலியானது.

150 கிலோ பிரியாணி

150 கிலோ பிரியாணி

அப்படியே படிப்படியாக 2013 ஜூலை மாத இறுதியில் வெங்கி 150 கிலோ பிரியாணி சமைக்க வேண்டி இருந்தது. இந்த ஜூலையிலும் லாபம் என ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் கடை வாடகை, கேஸ், சிலிண்டர், தண்ணீர் செலவுகள், மளிகை சாமான்கள் என அனைத்து செலவுகளுக்கும் தேவையான பணம் கிடைத்தது. ஆனால் தனக்கான கூலியாக எதையும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இப்படி கூலி இல்லாமலேயே 2013 முழுக்க கழிந்தது.

விலை

விலை

ஒரு பொருளைத் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட தொகை செலவாகிறது. ஆனால் அதே பொருளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் போது, அந்தப் பொருளின் விலை குறைகிறது. எனவே அதிக அளவில் பிரியாணி விற்றால் நிச்சயம் லாபம் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது வெங்கிக்கு. வியாபாரத்தை அதிகப்படுத்த என்ன செய்யலாம். நீண்ட நேரம் யோசித்து ஒரு ஐடி ஐடியாவைக் கையில் எடுக்கிறார்.

ஐடியா

ஐடியா

தன்னிடம் இலவசமாக பிரியாணி சாப்பிட வருபவர் இனி தன் மொபைல் நம்பருக்கு பதிலாக ஃபேஸ்புக் ஐடியில், தன் கடையின் பெயரை டேக் செய்து பிரியாணியைப் பற்றி ஒரு ரிவ்யூ எழுதச் சொன்னார். இப்படி தன்னை டேக் செய்யும் புதிய வாடிக்கையாளர்களின் விவரங்கள் கூகுள் ஷீட்களில் சேமிக்கப்படுவது போல ஒரு புதிய API ப்ரோகிராமைப் பயன்படுத்தினார். ஆக ஒரு முறை வந்த வாடிக்கையாளர் அதே ஃபேஸ்புக் ஐடியை வைத்து இலவச பிரியாணி வாங்க முடியாத படி பார்த்துக் கொண்டார். அதே நேரத்தில் இலவச பிரியாணிக்கு வருபவர் கட்டாயம் ரிவ்யூ செய்வதையும் இது உறுதி செய்தது. செம ஐடியா இல்ல..?

200 கிலோ

200 கிலோ

இந்த ஐடியாவை அமல்படுத்திய அடுத்த ஒரு வாரத்தில் 150 கிலோ பிரியாணி 200 கிலோவுக்கு நெருக்கமாகப் போனது. இப்போது 200 கிலோ பிரியாணியை விற்க காலை 7.30 மணி வரை காத்திருந்தார். 2014 ஜனவரியில் இருந்து மாதம் சுமார் 15,000 ரூபாய் வரை லாபம் பார்த்தார். சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு தன் பிசினஸ் கனவில் இருந்து அவர் செலவழித்துக் கொள்ள பணம் கிடைத்ததை அம்மாவிடம் கொடுத்தார். "இதுக்கு நீ ஐடி-லயே சம்பளம் வாங்கிக்கிட்டு இருந்திருக்கலாமே என்றாள்" சிரித்துக் கொண்டே படுக்கச் சென்றார் வெங்கி.

முதல் ஆண்டு

முதல் ஆண்டு

வெங்கி பிரியாணியில் முதலாமாண்டு நிறைவு விழா 2014 ஜூன் வந்த போது நாள் ஒன்றுக்கு 225 கிலோ பிரியாணி காலை 7.30 மணிக்குள் விற்றுவிடும். மாதம் 20,000 ரூபாய் வரை கையில் நிற்கும் என்கிற நிலை உருவானது. இதற்கு மேல் இங்கு வியாபாரத்தை எப்படிப் பெருக்குவது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து நிதானமாக சாப்பிடுவது போல கூடுதலாக 2,000 சதுர அடியை வாடகைக்கு எடுத்தார். இப்போது மொத்த மாத வாடகை 35,000 ரூபாய்.

மீண்டும் கடன்

மீண்டும் கடன்

மீண்டும் நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கி தன் கடைக்குத் தேவையான டேபிள் சேர்களை வாங்கிப் போட்டார். முதல் நாள் அதே 225 கிலோ பிரியாணி தான் ஆனால் காலை 6 மணிக்கு எல்லாம் விற்றுத் தீர்ந்தது. வெங்கி கடையில் கூட்டம் இல்லை என்கிற நினைப்பில் கூடுதலாக வரத் தொடங்கினார்கள். ஆக 2014 ஜூலை முடிவில் நாள் ஒன்றுக்கு 270 கிலோ பிரியாணி ஓடியது. இந்த சமயத்தில் வெங்கி தனக்கு ஒரு 10,000 ரூபயை சம்பளம் போல எடுத்துக் கொண்டார். வெங்கியின் சம்பள செலவுகள் உட்பட அனைத்தும் போக, பிசினஸின் கைக்காசாக 18,000 ரூபாய் இருந்தது. அந்த 18,000 ரூபாயில் ஒரு பெரிய தொகை வாங்கிய கடனை அடைக்க போய்க் கொண்டிருந்தது.

டூ 300 கிலோ

டூ 300 கிலோ

2014-ம் ஆண்டு முடிவில் நண்பர்களிடம் வாங்கிய கடன் எல்லாம் கழிந்து நிம்மதியாக இருந்தார் வெங்கி. இன்னும் பிசினஸை வளர்க்க வேண்டும். அனைத்து செலவுகள் (தன் சம்பளம் உட்பட) மாத லாபம் மட்டும் சுமார் 40,000 முதல் 50,000 ரூபாய் வரைக்குமாவது வேண்டும் என இலக்கு வைத்து கொஞ்சம் விலை ஏற்றினார். வாடிக்கையாளர்களிடம் பெரிய மாற்றம் இல்லை.  270 கிலோ பிரியாணி ஓடியது. 2015 ஜனவரி மாதம் 32,000 ரூபாய்க்கு மேல் நிகர லாபமாக நின்றது. 2015 ஜூன் வரை இந்த லாபம் தொடர்ந்தது. ஆனால் பிரியாணி அளவு 300 கிலோவைத் தொட்டிருந்தது. இப்போது வெங்கியின் கீழ் ஐந்து பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் லாபம் வெறும் 32,000 ருபாயாக இருந்தாலும் அவனுக்குக் கீழ் ஐந்து பேர் வேலை பார்ப்பது அவனுக்கு ஒரு நிறைவாக இருந்தது. ஆனால் இன்னும் வியாபாரத்தை பெருக்க ஆசை இருந்தது. வழி தான் தெரியவில்லை.

விலை ஏற்றம்

விலை ஏற்றம்

2015 ஜூனில் மீண்டும் கொஞ்சம் விலை ஏற்றினார். அப்படியே தன் சம்பளத்தையும் 30,000 ரூபாயாக உயர்த்திக் கொண்டார். அதே 300 கிலோ பிரியாணி நன்றாக ஓடியது. இதற்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் வேளச்சேரியில் பிரியாணி விற்பனையைக் கூட்ட முடியாது என ஒரு saturation புள்ளிக்கு வந்துவிட்டார். இப்போதும் எல்லா செலவுகளும் போக வெங்கி எதிர்பார்த்த 40,000 ரூபாய் வந்து கொண்டிருந்தது. இதே புள்ளியில் 2017 ஜூலை வரை ஓட்டினார். ஆக தன் பிரியாணி பிசினஸ் தொடங்கி நான்கு வருடத்தில், எல்லா செலவுகளும் போக (வெங்கி சம்பளம் உட்பட) மாதம் 40,000 ரூபாய் தன் பிரியாணிக் கடைக்கு லாபமாக நின்றது.

புதிய திட்டம்

புதிய திட்டம்

இதை வைத்துக் கொண்டு கடன் வாங்கி சோலிங்கநல்லூரில் ஒரு பிரபல ஐடி நிறுவனத்தின் பின் புறத்தில் இதே போல காலை 3.00 மணி முதல் 8.00 மணி வரை பிரியாணி கடை போட விரும்பினார். அதற்கு கடை அட்வான்ஸ், ஒரு டாடா ஏஸ், கூடுதலாக தேவையான பாத்திர பண்டங்கள், டேபிள் சேர்கள் என எல்லாவற்றையும் சேர்த்து சுமார் 7 லட்சம் ரூபாய் தேவையாக இருந்தது. கடந்த ஒரு வருடத்தில் பிசினஸில் வந்த லாபத்தைச் சேர்த்து வைத்த பணம் ஒரு 1.5 லட்சம் ரூபாய் இருந்தது. ஆக 6 லட்சம் ரூபாய் வங்கியில் கடன் வாங்கப் போனார்.

கடன் கிடையாது

கடன் கிடையாது

வங்கி, ஜிஎஸ்டி பதிவைக் கேட்டது. பதிவு செய்யவில்லை என்றார் வெங்கி.

வருமான வரி தாக்கல் செய்ததைக் கேட்டார்கள் கடைக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்.கடைக்கு பான் அட்டையே கிடையாது எனச் சொல்லிவிட்டார்.

வங்கி ஒரே வார்த்தையில் கடன் கொடுக்க முடியாது எனச் சொல்லிவிட்டது. என்ன செய்தால் கடன் கொடுப்பீர்கள் என ஒற்றைக் கேள்வி திரும்ப கேட்டார்.

கடன் வேண்டுமா இதைச் செய்யுங்கள்
என்ன செய்ய வேண்டும்

1. உங்கள் கடைக்கு என்று தனி பான் அட்டை வாங்குங்கள் அல்லது உங்கள் பெயரில் கடைக்கு வரும் வருமானத்துக்கு வரி செலுத்துங்கள்
2. ஜிஎஸ்டி பதிவு செய்து கொள்ளுங்கள். முறையாக அரசுக்கு ஜிஎஸ்டி செலுத்துங்கள்
3. கடை பெயரில் பான் அட்டை எடுத்தால், கடை பெயரில் ஒரு வங்கிக் கணக்கையும் தொடங்குங்கள்.
4. அந்த வங்கிக் கணக்கில் ஒரு குறைந்தபட்ச தொகையை சீராக பராமரியுங்கள்.
5. உங்கள் கடைக்கு சாப்பிட வருபவர்கள் ஆன்லைனில் பணம் செலித்தினால் அதை கடை பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்... என வரிசையாக அடுக்கினார்கள். வங்கிக் கடன் வாங்க மட்டுமல்ல, வருங்கால வியாபார விரிவாக்கத்துக்கும் இது தான் நல்ல யோசனை எனப்பட்டது. செயலில் இறங்கினார் வெங்கட்ராமன்.

உடனடி வேலை

உடனடி வேலை

2017 ஜூன் மாதத்தில் தான் வங்கி, வெங்கியின் கடனை நிராகரித்தார்கள். ஆக 2016 - 17 நிதி ஆண்டுக்கான வருமான வரியைத் தன் பெயரில் கட்டினார். அதன் பின் தன் பிரியாணிக் கடைக்கு ஜிஎஸ்டி பதிவு செய்து கொண்டு, வியாபாரம் செய்தார். வங்கி அதிகாரிகள் சொன்னது போலவே தன் பிரியாணிக் கடைக்கு தனி பான் அட்டை எடுத்து அதை ஒரு பிசினஸ் நிறுவனமாக பதிவு செய்து கொண்டார். ஒரு கரண்ட் அக்கவுண்டும் பிரியாணிக் கடை பெயரில் திறந்து கொண்டார். எல்லா பணப் பரிவர்த்தனைகளையும் முறையாக வங்கி வழியாகவே செய்தார். கூடுமான வரை கணக்கு வழக்குகளை சுத்தமாக வைத்துக் கொண்டார். ஜிஎஸ்டி சேர்த்ததால் பிரியாணியின் விலையும் கொஞ்சம் அதிகரித்தது. ஆனால் வியாபாரம் அதே அளவுக்கு சிறப்பாகத் தொடர்ந்தது.

புதிய கடை ரெடி

புதிய கடை ரெடி

2017 - 18 நிதி ஆண்டுக்காக வருமான வரிப் படிவத்தை சமர்பித்த பின் அந்த ஆதாரத்துடன் இரண்டாவது முறையாக வங்கிகளிடம் கடன் கேட்டு நின்றார். இந்த முறை வெங்கி கேட்ட 6 லட்சம் ரூபாயை 12% வட்டிக்கு கடனாகக் கொடுக்க முன் வந்தது வங்கி.

வங்கி கொடுத்த பணத்தைப் பயன்படுத்தி, நம் வெங்கியின் புதிய பிரியாணிக் கடை சோழிங்கநல்லூரில் ஒரு பெரிய தனியார் ஐடி நிறுவனத்துக்கு எதிரில் போட்டிருக்கிறார். இப்போது எல்லா செலவுகள் போக (தன் சம்பளம் 40,000 ரூபாய் உட்பட) பிசினஸுக்கான லாபம் 50,000 ரூபாயாக இருக்கிறது. இப்போதும் அதே சிரித்த முகத்துடன் தன் கையாலேயே பிரியாணி சமைத்து சோழிங்கநல்லூருக்கு அனுப்புகிறார். அங்கு வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

நிதி கொடுக்கும் வங்கி உதவி தேவை

நிதி கொடுக்கும் வங்கி உதவி தேவை

வெங்கியின் அடுத்த டார்கெட், வேளச்சேரி போல, தன் சோழிங்கநல்லூரில் இருந்து மட்டும் தனக்கான சம்பளம் 40,000 ரூபாயும், தன் பிரியாணிக் கடைக்கான லாபம் (எல்லா செலவுகள் போக) மாதம் 50,000 ரூபாயும் ஈட்ட வேண்டும் என்பது தான். அப்படி ஈட்டினால் வெங்கி தன் ஐடி ஊழியர்களை விட கூடுதலாக் சம்பாதிக்கத் தொடங்கி விடுவார். அதோடு தனக்கென்று ஒரு தனி பிசினச் சாம்ராஜ்யத்தையும் அமைத்த நிறைவு கிடைத்துவிடும்.

இதைத் தான் வெங்கி எதிர்பார்த்தார். தன் கனவுக்காக ஓடினார். தன் கை மணம் மாறாத பிரியாணியை வைத்து தன் கணவை நிறைவு செய்து கொண்டிருக்கிறார். இன்னும் நம்மில் எத்தனை வெங்கியில் இப்படிப்பட்ட நல்ல பிசினஸ் ஐடியா உடன் இருக்கிறோம் எனத் தெரியவில்லை.

உங்கள் பிசினஸ் கனவை நோக்கி ஓடுங்கள், வெங்கிக்கு தன் பிசினஸ் கனவை நினைவாக்க 6 வருடங்கள் ஆனது. உங்களுக்கு அதை விட குறைந்த வருடங்களில் ஆகலாம். இந்தியாவின் அடுத்த அம்பானியாகக் கூட ஆகலாம். ஆனால் அம்பானி ஆவதற்கும் சரி, வெங்கி ஆவதற்கும் சரி வங்கியின் உதவி எப்போதும் தேவையாக இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு தொழில் செய்யுங்கள். தமிழ் குட் ரிட்டன்ஸ் சார்பாக அட்வான்ஸ் வாழ்த்துக்கள். வாழ்க பிசினஸ், வளர்க உங்கள் தொழில்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

if you want bank loan especially business loan see what biryani shop venky did to get

if you want bank loan especially business loan see what biryani shop venky did to get
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X