டெல்லி : அதானி குழுமம் தொடர்ந்து விமான நிலையங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் தனது விமான வர்த்தகத்தை கவனிப்பதற்காக Adani Airports Ltd என்ற புதிய நிறுவனத்தை நிறுவியுள்ளது.
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விமான நிலையங்களை இயக்குவதற்காக, இந்தக் குழுவின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ், இந்த புதிய நிறுவனத்தை இணைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Adani Airports Ltd நிறுவனம் குஜராத்தில் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள பதிவு அலுவலகத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இனி இந்த நிறுவனம் விமானம் சம்பந்தமான வர்த்தகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும், அதானி எண்டர்பிரைசஸ் ஒர் அறிக்கையில் கூறியுள்ளது.
ஏற்கனவே அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கௌகாத்தி ஆகிய 6 விமான நிலையங்களை மேம்படுத்திப் பராமரிப்பதற்கான பணிகளைத், கௌதம் அதானி தலைமையிலான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், 5 விமான நிலையங்களுக்கான ஏலத்தை வென்றது. அகமதாபாத் விமான நிலையத்துக்கான ஏலத்தில், பயணி ஒருவருக்கு மாதாந்திர கட்டணமாக 85 ரூபாய் தருவதாக ஜிஎம்ஆர் என்ற நிறுவனம் குறிப்பிட்டிருந்த நிலையில், பயணி ஒருவருக்கு 177 ரூபாய் தருவதாகக் குறிப்பிட்டிருந்த அதானி குழுமமே ஏலத்தில் வெற்றி பெற்றது.
இதேபோன்று லக்னோ விமான நிலையத்துக்கு ஏஎம்பி கேப்பிட்டல் என்ற நிறுவனம் 139 ரூபாயைக் குறிப்பிட்டிருந்த நிலையில், 171 ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்த அதானி நிறுவனம், அந்த ஏலத்தைக் கைப்பற்றியுள்ளது. இதேபோன்றே இதர 3 விமான நிலையங்களுக்கான ஏலத்திலும் அதானி குழுமமே வென்றது.
கடந்த 2014ம் ஆண்டு முதல் 2018-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த நிறுவனம் காற்றாலை மின் உற்பத்தி, சோலார் மின் உற்பத்தி, மின் விநியோகம் மற்றும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் காலடி எடுத்துவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதானி தற்போது முறையாக விமான துறைக்குள்ளும் காலடி எடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல துறைகளில் கொடி கட்டி பறக்கும் இந்த நிறுவனம், இனி விமான துறையிலும் கொடிகட்டி பறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications