அகமதாபாத் : மோடி 2.0 அரசின் 100 நாட்கள் வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து, முக்கிய புள்ளிகள் ஒவ்வொரு மாநிலமாக சென்று அதைப் பற்றி விளக்கியும் விவரித்தும் வருகிறார்கள்.
அந்த வகையில் மத்திய சட்டம், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த புதன்கிழமையன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், மோடி 2.0 அரசின் 100 நாள் சாதனைகள் பற்றி விவரித்தார்.

இது குறித்து அவர் விவரிக்கையில் முன்பெல்லாம் வருமானவரி துறை அதிகாரிகள், ஒருவருக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனில் தாங்களாகவே முடிவு செய்து, அதை அனுப்ப வேண்டிய நபருக்கு நோட்டீஸ் அனுப்பி வந்தனர். ஆனால் இனி அப்படி அனுப்ப முடியாது என்றும், வரும் அக்டோபர் 2ம் தேதியில் இருந்து, இந்த நடைமுறை ரத்து செய்யப்படுகிறது என்றும் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி இனி, வருமான வரித்துறை நினைத்தால் எடுத்தவுடனே நேரடியாக வருமான வரி குறித்த நோட்டீஸ் அனுப்ப முடியாது என்றும், முதலில் அந்த நோட்டீஸ் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்படும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் மையத்துக்கு தான் செல்லும் என்றும், பிறகு அங்கு ஆய்வு செய்யப்பட்ட பின் தான், பிறகு தான், சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த நோட்டீஸ் செல்லும் என்றும் கூறியுள்ளார்.

இதன் மூலம், வருமானவரி அதிகாரிகளின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு இனிமேல் வேலை இருக்காது என்றும் கூறியுள்ளார்.
இது தவிர காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசியவர், காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கையாண்ட விதம் தவறு என்றும், காஷ்மீர் தொடர்பாக சர்தார் படேல் மேற்கொண்ட நடவடிக்கைகள் தான் சரி கூறியுள்ளார். மேலும் சட்டப்பிரிவு 370-ஐ ஏற்படுத்தி வரலாற்று பிழையை செய்திருந்தனர். ஆனால் துணிச்சலுடன் அந்த சட்டப்பிரிவை நீக்கி, பிரதமர் மோடி வரலாற்று பிழையை சரி செய்து விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இது தவிர மத்திய அரசு ஜம்மு காஷ்மீரை மேம்படுத்த பல்வேறு வகையான நடவடிக்கைளை எடுத்து வருவதையும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications