இன்றைய விலைவாசி உயர்வுக்கு மத்தியில் எந்தவித கடனும் வாங்காமல் ஒருவர் குடும்பம் நடத்துவது மிகவும் அரிதாக உள்ளது. பலரும் தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுகள், திருமணச் செலவுகள், தங்களுடைய தனிப்பட்ட செலவுகள், மருத்துவ செலவுகள் என பல காரணங்களுக்காக கடன் வாங்குகின்றனர். சிலர் வீடு கட்ட பட்ஜெட் இடிக்கும் காரணத்தினால் கடன் வாங்குகின்றனர். கடன் வாங்குவது இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்தப் பதிவில் கடனை எப்படி சீக்கிரம் அடைப்பது? என்ற டிப்ஸ்கள் குறித்து பார்ப்போம்.
நிதி விஷயங்களில் தெளிவு: நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறு என்னவென்றால் கணக்கிடாமல் செலவு செய்வது தான். வருமானம், செலவுகள், கடன் விவரங்கள் போன்றவற்றை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமலே இங்கு பல பேர் இருக்கின்றனர். அவசர காலங்களில் நம்மையும் மீறி கடன் வாங்க சென்று விடுவோம். அதேபோல சிறு தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் கடன் வாங்குகிறோம்.

இவை அனைத்தையும் கணக்கிட்டு உங்களிடம் உள்ள மொத்த கடன் தொகை எவ்வளவு என்பதை முதலில் தெளிவாக எழுதி வையுங்கள். அதேபோல நீங்கள் பணிபுரியும் ஊழியராக இருந்தால் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? உங்களுடைய வருமான ஆதாரங்கள் என்னென்ன? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களின் மொத்த வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய முழுமையான புரிதல் கிடைக்கும்.
முதலில் செலுத்த வேண்டிய கடனை அடையாளம் காணுங்கள்: உங்களிடம் எத்தனை வகையான கடன்கள் இருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதிக வட்டிக்கு வாங்கிய கடனை முதலில் அடைப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். அதிக வட்டி விகிதங்களுடன் கூடிய கடன்களை வைத்திருப்பதால் கடன் சுமை அதிகரிக்கிறது. எனவே விரைவாக திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு கடன் கொடுத்தவர்களின் தேவையை உணர்ந்து வாக்குறுதி அளித்த நேரத்திற்குள் கடனைத் திருப்பி செலுத்த முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் அவர்கள் உங்கள் மீது நம்பிக்கையை இழந்து விடுவார்கள். மீண்டும் கடன் தேவைப்பட்டால் கொடுக்காமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.
கூடுதல் வருமான ஆதாரங்களை கண்டறியவும்: உங்கள் வழக்கமான வருமானத்துடன் கூடுதல் வருமானத்தை பெறுவதற்கான வழிகளைக் கண்டறியுங்கள். அதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்களுக்கு தினசரி எவ்வளவு நேரம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வதுதான். கூடுதல் வருமானம் ஈட்ட அந்த நேரத்தில் வேறு என்ன வேலையை செய்யலாம் என்பதை கண்டறியுங்கள். தற்பொழுது வீட்டிலிருந்து செய்யக்கூடிய பல வேலைகள் கிடைக்கின்றன. உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுங்கள். நீங்கள் செய்யக்கூடியதை மட்டும் தேர்வு செய்யவும். குறைந்த நேரத்தில் அதிக வருமானம் ஈட்டுவதை பற்றி திட்டமிடுங்கள்.
செலவுகளை குறைக்கவும்: தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் பெரிய அளவிலான கடனை சீக்கிரம் திருப்பிச் செலுத்தலாம். தேவையற்ற செலவுகள் என்றால் சந்தர்ப்பம் இல்லாவிட்டாலும் ஆடைகளை வாங்குவது, தேவையில்லாமல் பயணம் செய்வது, எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குவது போன்றவற்றை தவிர்க்க முயற்சி செய்யலாம். இவற்றால் பணம் செலவாகுமே தவிர எந்தவித லாபமும் கிடைக்காது. குறிப்பாக கடன்களை அடைக்கும் நேரத்தில் இது போன்ற தேவையற்ற செலவுகளை குறைப்பது அவசியம்.
அனைத்து கடன்களையும் ஒருங்கிணைத்தல்: உங்களுக்கு பல்வேறு கடன்கள் இருக்கலாம். அவை அனைத்தையும் சேர்த்து ஒரு கடனாக மாற்றுவது வட்டி விகிதங்களினால் ஏற்படும் செலவைக் குறைக்கிறது. உதாரணமாக நீங்கள் வங்கியில் தனி நபர் கடன் வாங்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மேலும் வேறொரு வங்கியில் கார் கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த இரண்டு வங்கிகளும் சேர்த்து தனித்தனியாக வட்டி விகிதங்களை வசுவலிக்கும். பொதுவாக தனிநபர் கடனுக்கு 14 சதவீதம் வரை வட்டி விகிதம் வசூலிக்கப்படும். சில வங்கிகள் இந்த இரண்டு கடன்களையும் ஒரே வங்கிக்கு மாற்றும் வசதியை வழங்குகின்றன. இது போன்ற விஷயங்களை கண்டறிந்து ஒரே வங்கியில் இரண்டு கடன்களையும் இணைக்கும் வசதியை தேர்வு செய்தால் வட்டி சுமையிலிருந்து விடுபடலாம்.
முறையான திட்டத்தை உருவாக்குங்கள்: ஒவ்வொரு மாதமும் எவ்வளவு கடனை திருப்பிச் செலுத்த இருக்கிறீர்கள் என்பதை முன்கூட்டியே முடிவு செய்யுங்கள். அந்தத் திட்டத்தை தவறாமல் பின்பற்றுங்கள். இதற்கு உங்கள் வருமானம் மற்றும் செலவுகள் குறித்து தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் சம்பாதிப்பவர்களாக இருந்தால் வீட்டு தேவைக்காகவும், மருத்துவமனை செலவுக்காகவும் ஒதுக்குவது போல கடனை திருப்பி செலுத்தவும் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டும். இப்படி திட்டமிட்டு கணக்கிட்டால் கடன் சுமை அவ்வளவு பெரியதாக தோன்றாது. சில நாட்களில் நம்மை அறியாமலேயே நம் கடன்கள் வேகமாக குறைந்து விடும்.


Click it and Unblock the Notifications