இன்றைய உலகில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அதிக அளவில் பணம் தேவைப்படுகிறது. முன்பெல்லாம் ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப பொறுப்புகளை இருக்கும் சம்பளத்தை வைத்து நிறைவேற்றி வந்தனர். ஆனால் தற்போது செலவுகள் அதிகரித்துவிட்டன. தேவையோ இல்லையோ சலுகைகள் இருப்பதால் மால்களுக்குச் சென்று பொருட்களை வாங்குவது பல குடும்பங்களுக்கு வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக மாதத்தின் கடைசி தேதிக்குள் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.
பட்ஜெட்: நிதி மேலாண்மை என்பது சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு மட்டுமே என்பது கிடையாது. ஒவ்வொரு குடும்பமும் பட்ஜெட்டை வைத்து செலவு செய்யும்போது உங்களின் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். இந்திய அரசே கோடிக்கணக்கான மக்களுக்கு பட்ஜெட் போடும்போது.. உங்கள் குடும்பத்திற்கான நிதிச் செலவை பட்ஜெட் போடாமல் செய்வது நிதி சிக்கலுக்கு வழி வகுக்கலாம். பட்ஜெட்டை அமைத்து அதன் கீழ் செலவு செய்யும் போது பணப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும்.

செலவுகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்: கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் நிறுவனங்களே தங்களின் நிகர லாபம் மற்றும் நஷ்டம் ஆகியவற்றை கண்டுபிடிக்க தனித்தனியாக செலவுகளை குறித்து வைக்கிறது. அதேபோல உங்களின் வருடாந்திர அல்லது மாதாந்திர பரிவர்த்தனைகளை கண்காணிக்க ஒரு பட்டியலை உருவாக்குங்கள். அதில் உங்கள் முக்கியமான செலவுகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக மின்சார கட்டணம், மொபைல் பில், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், மளிகை பொருட்கள் மற்றும் பிற வீட்டு செலவுகள் ஆகியவை இதில் அடங்கும்.
அவசரத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குங்கள்: வாழ்க்கையில் யாராக இருந்தாலும் அவசர நிலை ஏற்படுவது என்பது இயல்பான ஒன்றுதான். எதிர்பாராத சூழ்நிலைகள் நிதிச் சுமையை அதிகரிக்கலாம். இது போன்ற சூழலை சமாளிக்க ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்கலாம் அல்லது ஒவ்வொரு மாதமும் உங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியை அவசர தேவைகளுக்காக ஒதுக்கி வைக்கலாம். இந்த நிதி உங்கள் குடும்பத்திற்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கும். அவசர கால நிதியை நீங்கள் சேமிக்கவில்லை அச்சமயங்களின் போது மற்றவர்களிடம் பணம் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அந்த நேரத்தில் யாரும் உதவி செய்யவில்லை என்றால்.. நீங்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடலாம்.
தேவையற்ற ஷாப்பிங் தவிர்க்கவும்: தேவையில்லாமல் இ-காமர்ஸ் தளங்களில் வழங்கப்படும் டிஸ்கவுண்டுக்காக ஷாப்பிங் செய்வதை நிறுத்தவும். இது தேவையற்ற நிதி சிக்கலுக்கு வழிவகுக்கலாம். ஒருவேளை உண்மையிலேயே உங்களுக்கு ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால்.. அவற்றை உணர்ச்சியின் அடிப்படையில் ஆர்டர் செய்யாமல் சில மணி நேரங்கள் காத்திருந்து அவை உண்மையில் தேவைதானா? என்பதை தெரிந்து கொண்ட பின் ஆர்டர் செய்யவும்.
தேவையற்ற செலவுகளை லிஸ்டில் இருந்து நீக்கவும்: உங்கள் வருமானம் மற்றும் செலவுகளை பட்டியலிடும்படி முன்பே பார்த்திருந்தோம். எனவே பட்டியலைத் தயாரித்த பிறகு அனைத்தையும் ஒன்றுக்கு இருமுறை சரி பார்க்க வேண்டும். எந்த செலவுகள் அவசியம்? எது தேவை இல்லை? என்பதை தீர்மானிக்க வேண்டும். இதன் விளைவாக உங்கள் வீட்டு பட்ஜெட் கட்டுக்குள் இருக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். பணம் சேமிக்கப்படும். இதனால் மாத இறுதிக்குள் பிறரிடம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications