இரவு பகலாக உழைத்து சம்பளம் பெறும் மாது சம்பளக்காரர்களுக்கு வருடா வருடம் இன்கிரிமெண்ட் என்னவோ கிடைக்கிறது. ஆனால் பேங்க் பேலன்ஸ் மட்டும் ஏறவே இல்லை. இங்கு ஒவ்வொருவரும் சம்பளம் ஏறும்போது தங்கள் செலவுகளையும் அதிகரித்துக் கொள்கிறார்கள். இந்த விஷயம் தெரியாமல் இன்னும் கூடுதலாக ஹார்ட்ஒர்க்கைப் போட்டால் பணக்காரர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த எண்ணமே ஒரு மாயை தான்.
கூடுதலாக உழைத்து அதன் மூலம் வருமானம் கிடைத்தாலும், அதற்கும் ஒரு செலவு காத்துக் கொண்டிருக்கும். எனவே நாம் தூங்கும் போதும் நமக்காக பணம் வர வேண்டும். அதைத்தான் "பாசிவ் இன்கம்" என்று சொல்கிறோம்.
கௌரவ் பகத் அகாடமியின் நிறுவனரான கௌரவ் பகத் "6 மந்த் ஆக்சன் பிளான்" என்னும் ஆறு மாத திட்டத்தை பற்றி கூறியுள்ளார். இதன் மூலம் நீங்களும் உங்களுடைய வருமானத்தை அதிகரிக்கலாம்.

முதலீடு: பணக்காரராவதற்கு ஒழுக்கமாக முதலீடு செய்ய வேண்டும். ஒழுக்கமான முதலீட்டுக்கும், மொத்த முதலீட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதற்காக மொத்தமாக கொண்டு போய் முதலீடு செய்ய வேண்டும் என்றில்லை. சிறுக சிறுக முதலீடு செய்யலாம். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள், இன்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் டிவிடெண்ட் வழங்கும் பங்குகள் அதிக லாபத்தை தரக்கூடியவை.
எஸ்ஐபி திட்டங்கள்: மாதம் தோறும் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்யலாம். தொகை நேராக உங்கள் அக்கவுண்ட்டை சென்றடையும் வகையில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை செட் செய்து விடுங்கள். இதனால் உங்களுக்கே தெரியாமல் மாதம் தோறும் பணம் சென்று கொண்டிருக்கும். கூட்டு வட்டியின் மூலம் நீங்கள் காலப்போக்கில் அதிக வருமானத்தையும் பெற முடியும்.
பல்வகைப்படுத்தல்: மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு கூடுதலாக FD, தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றிலும் முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள். இதற்கிடையில் 6 முதல் 12 மாதங்கள் வரையிலான எமெர்ஜென்சி ஃபண்டை வைத்திருப்பதும் அவசியம். அந்த சமயத்தில் ஓடிப்போய் முதலீடு செய்தத் தொகையில் கை வைக்கக் கூடாது.
சொத்துக்களை வருமானமாக மாற்றும் வழிகள்: நம்மூர் காரர்களுக்கு முதலீட்டு திட்டங்களை விட நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தனி பிரியம். இதில் சிலர் தங்கமாக வாங்கி வைத்திருப்பார்கள். உங்களிடம் இருக்கும் வீடு, ரூம் ஆகியவை ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் இருந்தால் அதை "Airbnb" போன்ற தளங்களில் வாடகைக்கு விடலாம். நீங்கள் பெரும் மாதாந்திர வாடகையை விட இதில் அதிக வருமானம் கிடைக்கும்.
கிக் வொர்க்கர்கள்: இந்தியா முழுவதிலும் கிக் வொர்க்கர்கள் என்று சொல்லப்படுகிற நிறுவனத்தில் பணிபுரியாத ஊழியர்களின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதை நீங்கள் ஆன்லைன் டெலிவரி தளங்கள் மற்றும் டாக்ஸி ஆப்-களில் காணலாம். இதற்காக நீங்கள் நேரடியாக டாக்ஸி ஓட்ட வேண்டியதில்லை. மாறாக அதற்கான முதலீட்டை மட்டும் போட்டால் போதும். உதாரணமாக ஒரு சொந்த வாகனம் அல்லது டூவீலரை வாங்கி ஓலா, உபர் போன்றவற்றில் இருக்கும் டிரைவர்களுக்கு லீசுக்கு கொடுக்கலாம்.
கிளவுட் கிச்சன்: பணிபுரியும் பலருக்கு வீட்டில் சமைப்பதற்கு நேரம் இருப்பதில்லை. இது போன்ற வாடிக்கையாளர்களை குறிவைத்து ஒரு கிளவுட் கிச்சன் பிசினஸ் தொடங்கினால் போதும். டைனிங் டேபிள் வைத்து அவர்களுக்கு பரிமாறாமல், வெறும் டெலிவரி சேவையை மட்டும் வழங்கி ஆன்லைன் டெலிவரி தளங்களில் லாபம் பார்க்கலாம்.
ஆறு மாத கால வெல்த் பிளான்: உங்களை பணக்காரராக மாற்ற கௌரவ் பகத் 6 மாத வெல்த் பிளானை பற்றி கூறியுள்ளார். இதில் நீங்கள் முதல் 2 மாதங்களில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உங்களுடைய செலவுகள் எப்படி இருக்கிறது? என்பதை கண்காணிக்க வேண்டும். இதில் தேவையில்லாமல் ஏதேனும் செலவு செய்திருக்கிறீர்கள் என்றால் அதை குறைத்துக் கொண்டு 1 முதல் 6 மாத கால எமர்ஜென்சி ஃபண்டை சேர்ப்பதிலும், எஸ்ஐபி திட்டத்தை தொடங்குவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.
அதன் பிறகு 3 மற்றும் 4-ஆம் மாதங்களில் ரியல் எஸ்டேட், தங்கம், மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது பிசினஸ் போன்ற வருமானம் தரும் வழிகளில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். 5 மற்றும் 6 மாதங்களில் உங்களுடைய சேமிப்பு அல்லது பில் பேமென்ட் என எதுவாக இருந்தாலும் அதை ஆட்டோமேட்டிக் பேமெண்ட் ஆப்ஷனை செட் செய்து நிர்வகிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு நல்ல நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனையும் பெறலாம்.
ஒழுக்கமான முதலீடு உங்களை பணக்காரராக மாற்றும் என்று கௌரவ் கூறியுள்ளார். பணக்காரராக ஆவது என்பது ஒரே ராத்திரியில் நடப்பதல்ல. செல்வத்தை சேர்க்க வேண்டுமானால் அதற்கு சில சிரமங்களை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். நிலையான முதலீடு மற்றும் பொறுமை இருந்தால் நீங்களும் பிற்காலத்தில் செல்வந்தராக மாறலாம்.


Click it and Unblock the Notifications