இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிக சம்பளம் வாங்கினாலும், அதற்கான செலவுகளும் சமமாக வந்து கொண்டுதான் இருக்கிறது. சம்பளத்திற்கு ஏற்றபடியான செலவுகள் மட்டுமில்லாமல், சம்பளத்தைத் தாண்டிய செலவுகளும் வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்காக மக்கள் தங்கள் உயர்தர தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் கடன் வாங்குகின்றனர். கடன் வாங்கிய பின்பு அதற்கான இஎம்ஐ-களை கட்டி வருகின்றனர்.
ஆனால் இதில் சோகம் என்னவென்றால், அதிகரிக்கும் பணச் செலவுகளால் மக்கள் மேலும் மேலும் கடன் வாங்கி அதைத் திரும்பக் கட்ட முடியாமல் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் நிதி நிலைமை மோசமாகி விடுகிறது. எனவே இதில் சிக்காமல் இருப்பதற்குச் சில வழிமுறைகளைச் செயல்படுத்தி திறம்பட நிர்வகித்தால் பெரிய கடன்களில் இருந்து விடுபட முடியும். பல கடன்களை நிர்வகிக்கவும், நிதிச் சிக்கலில் சிக்காமல் இருக்கவும் ஒரு சில வழிமுறைகள் இருக்கின்றன. அதைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.

பட்ஜெட் அமைத்தல்: மாத சம்பளம் வந்தவுடன் வருமானம் மற்றும் செலவுகளைக் கண்காணிப்பது மிகவும் அவசியமாகும். இதன் மூலம் தேவையற்ற செலவுகளைக் குறைத்து, அத்தியாவசிய தேவைகளில் கவனம் செலுத்த முடியும். இவ்வாறு செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்கும்போது கடனைத் திருப்பி செலுத்துவது சற்று சுலபமாக இருக்கும்.
இஎம்ஐ-களைச் சரியான நேரங்களில் செலுத்துதல்: கடன் வாங்கிய பின்பு அதற்கான இஎம்ஐ-களைக் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்துவது முக்கியமான ஒன்றாகும். காரணம், இஎம்ஐ-களைத் தாமதமாக செலுத்துவதால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அது மட்டுமில்லாமல், அதற்கு அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, இது போன்ற தாமதங்களைத் தவிர்ப்பதற்கு ரிமைண்டர்களை வைத்துக் கொள்ளலாம். மேலும் கட்டணங்களை செலுத்துவதற்கு ஆட்டோமேட்டிக்காக டெபிட் ஆகும்படி செட்டிங்கை மாற்றிக் கொள்ளலாம்.
கடன் காலத்தை நீட்டித்தல்: சிலர் மாத இஎம்ஐ தொகையை குறைப்பதற்காக கடன் காலத்தை நீட்டிப்பர். இது முற்றிலும் தவறு. ஏனெனில் கடன் காலத்தை அதிகரிக்கும்போது நீங்கள் அதற்கான வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறுகிய காலத்தில் கடனை முடிக்கும் போது வட்டி சற்று குறைவாக இருக்கும். அதுவே 10 ஆண்டுகளுக்குள் முடியக்கூடிய கடனை 20 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் மாதம் மாதம் இஎம்ஐ சுமை குறையும். இருந்தாலும் 20 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது நீங்கள் 2 அல்லது 3 மடங்கு கடன் வாங்கிய தொகையை விட அதிகமாக செலுத்தி இருப்பீர்கள்.
அதிக வட்டி உடைய கடன்களுக்கு முன்னுரிமை அளித்தல்: பொதுவாக கடன்களை வாங்கும் போது, அதிக வட்டி உள்ள கடன்களுக்கு முன்னுரிமை அளித்து கட்டினால், அது நிதிச் சுமையைக் குறைக்கும்.
சேமித்தப் பணத்தைப் பயன்படுத்துதல்: ஏற்கனவே கடன் வாங்கி நிதிச் சிக்கலில் இருக்கும் பட்சத்தில் சேமிப்பு இருந்தால் அதை வைத்து உடனடியாக கடனை கட்டி முடிக்கலாம். யாரோ ஒருவருக்கு வட்டி கட்டி கொண்டே வருவதை விட கையில் இருக்கும் சேமிப்பை பயன்படுத்தி வட்டியை கட்டி, கடனை முடித்து விட்டால்.. பிறகு வரும் வருமானத்தை சேமிப்பதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடன்களை ஒருங்கிணைத்தல்: பொதுவாக கடன் வாங்கும்போது, அதைத் தனித்தனியாக வாங்காமல் ஒரே கடனாக வாங்குவது நல்லதாகும். இதன் மூலம் இஎம்ஐ குறைய வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல், குறைந்த வட்டி விகிதத்தில் கடனைப் பெற முடியும். மேலும், ஒரே கடனாக வாங்கும்போது மாதத் தவணையைத் தாமதிக்காமல் செலுத்த முடியும்.
நிதி ஆலோசகரைத் தேர்ந்தெடுத்தல்: நிதி ஆலோசகரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒருவர் அவரின் நிதி நிலைமையைக் குறித்த ஆலோசனைகளைப் பெற்று, சரியான முதலீட்டு முடிவுகளை எடுக்க முடியும். இதன்மூலம் பணத்தைக் கச்சிதமாக நிர்வகிக்கலாம்.


Click it and Unblock the Notifications