ஆதார் அட்டையில், உங்கள் புகைப்படம், முகவரி அல்லது ஏற்கனவே உள்ள பிற தகவல்கள் விவரங்களைப் புதுப்பிக்க விரும்பினால், அவற்றை நீங்கள் இலவசமாகச் செய்யலாம். இதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது ஏற்கனவே, இலவச ஆதார் புதுப்பிப்புகள் செய்ய கால அவகாசம் வழங்கியுள்ளது. தற்போது இதற்கான காலக்கெடுவை டிசம்பர் 14 வரை நீட்டித்துள்ளது .உங்கள் ஆதார் 10 ஆண்டுகள் பழமையானது மற்றும் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்றால் இந்த சலுகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை செய்ய மை ஆதார் போர்ட்டலுக்குச் சென்று இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
முன்னதாக, செப்டம்பர் 14 ஆம் தேதி வரை இருந்த இந்த காலக்கெடு ஆனது, இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. அத்துடன் இப்போது டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்படுவதாக யுஐடிஏஐ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இன்னும் அதிக மக்கள் தங்கள் ஆதார் கார்டை புதுப்பிக்காததால், இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காலக்கெடு முடிவதற்குள் தனிநபர்கள் இந்த இலவச ஆன்லைன் புதுப்பிப்பு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு UIDAI வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் வழங்கப்பட்டவர்கள் மற்றும் அதை புதுப்பிக்காதவர்கள் உடனடியாக ஆன்லைனில் சரியான அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆவணங்களைப் பதிவேற்றுமாறு வலியுறுத்துகிறது.
ஆன்லைனில் ஆதார் விவரங்களை எவ்வாறு புதுப்பிப்பது?: ஆன்லைனில் ஆதாரை புதுப்பித்தல் என்பது ஒரு நேரடியான செயலாகும். மக்கள் தங்கள் ஆதார் எண் மற்றும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐப் பயன்படுத்தி myAadhaar போர்ட்டலில் நுழைய வேண்டும்.
ஆதார் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பதற்கான ஸ்டெப்ஸ்: myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்,
அதில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு OTP-ஐ உள்ளிட்டவும்
திறக்கப்பட்டவுடன் உங்கள் சுயவிவரத்தில் அடையாளம் மற்றும் முகவரி தகவலைச் சரிபார்க்கவும்.
ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் சரியானவை என்பதை சரிபார்க்கிறேன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின் அடுத்த மெனுவிலிருந்து அடையாளம் மற்றும் முகவரி சரிபார்ப்புக்கு பொருத்தமான ஆவணங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆவணங்களைப் பதிவேற்றவும், விவரங்களை சரிபார்த்து கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
ஆதார் அட்டையை ஆஃப்லைனில் புதுப்பிப்பது எப்படி?: ஆன்லைனில் ஆதார் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு, நேரடியாக ஆதார் மையங்கள் மற்றும் ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று ரூ.50 கட்டணத்தை செலுத்தி இந்த சேவையை பெறலாம்
தேவையான ஆவணங்கள்: ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க, தங்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் ஐடி, இருப்பிடச் சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது வங்கி பாஸ்புக் போன்ற ஆவணங்களைப் பயன்படுத்தலாம். இவை அடையாளம் மற்றும் முகவரிக்கான சரியான ஆதாரமாக இருக்க வேண்டும்.
ஆதாரை புதுப்பிப்பது ஏன் முக்கியம்?: வங்கி, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மொபைல் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சேவைகளுக்காக ஆதார் தகவல்களைப் புதுப்பித்து வைத்திருப்பது அவசியம். இந்த சேவைகளை பெற ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க, துல்லியமான மக்கள்தொகை விவரங்களை சரிபார்ப்பதன் முக்கியத்துவத்தை UIDAI வலியுறுத்தியுள்ளது.
காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படுமா?: தற்போதைய இலவச அப்டேட் காலக்கெடு டிசம்பர் 14, 2024 அன்று முடிவடையும். ஆனால், மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications