மத்திய அரசின் திட்டங்களில் நல்ல வரவேற்பை பெற்ற திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana - APY). இந்த திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஓய்வுக்காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட ஒரு நல்ல திட்டமாகும்.
இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகளிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அரசின் இந்த அசத்தலான அடல் பென்ஷன் திட்டத்தில் இதுவரை 3.30 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். ஆக இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், மக்கள் இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு எவ்வளவு முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
வரவேற்பை பெற்ற நல்ல திட்டம்
முன்பெல்லாம் அரசு பணியில் இருந்தாலே ஒரு தனி மரியாதை தான். ஏனெனில் ஓய்வுக்காலத்திற்கு பின்பும் கிடைக்கும் பென்ஷனை கொண்டு, யாரையும் சாராமல் வாழ்க்கையை நகர்த்துவர். ஆனால் அரசின் இந்த ஓய்வூதிய திட்டமானது நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக அரசு பணியில் இல்லாத தனியார் துறையை சார்ந்தவர்கL, சுயதொழில் செய்வோர், ஏழை எளிய மக்களுக்கு இது ஒரு நல்ல திட்டமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் அரசு ஊழியர்களுக்கே பலருக்கும் பென்சன் கிடையாது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
மொத்தம் எத்தனை பேர்?
இப்படி ஒரு வரவேற்பினை பெற்ற இந்த திட்டத்தில் கடந்த நிதியாண்டில் மட்டும் 28 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். ஆகஸ்ட் 2021 நிலவரப்படி மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 3.30 கோடியை கடந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் இந்த திட்டத்தில் 24,55,438 பேர் இணைந்துள்ளனர்.
இளைய தலைமுறையினர் விருப்பம்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் 2021 ஆகஸ்ட் 25 வரையிலான மொத்த உறுப்பினர்களில், 78% சந்தாதாரர்கள் 1000 ரூபாய் ஒய்வூதிய திட்டத்தையும், 14% சந்தாதாரர்கள் 5,000 ரூபாய் ஒய்வூதிய திட்டத்தையும் தேர்ந்தெடுத்துள்ளனர். மொத்த உறுப்பினர்களில் 44% சந்தாதாரர்கள் பெண்களாக உள்ளனர். சுமார் 44% சந்தாதாரர்கள் 18-25 வயதுடைய இளம் வயதினராகும்.
மக்கள் ஆர்வம்
குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில், நடப்பு நிதியாண்டில் இதுவரையில் கிட்டதட்ட 8 லட்சம் பேர் இணைந்துள்ளனர். எஸ்பிஐ மட்டும் அல்ல, பலதரப்பிலும் இந்த திட்டத்தில் இணைய மக்கள் ஆர்வம் காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
எங்கெல்லாம் தொடங்கலாம்?
அரசின் இந்த திட்டத்தில் எப்படி இணையலாம்? இதில் என்னென்ன சலுகைகள் உள்ளன? முதலீட்டாளர்களுக்கு என்னென்ன நன்மைகள் உண்டு. என்னென்ன ஆவணங்கள் தேவை? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
அரசின் இந்த அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் தொடங்கலாம். இதனை சந்தாதாரர் தான் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை அல்லது தபால் நிலையத்திலிருந்து தொடங்கிக் கொள்ளலாம்.
எவ்வளவு கிடைக்கும்?
இந்த திட்டத்தின் கீழ் இணைந்த சந்தாதாரர், தான் அளித்த பங்களிப்பின் அடிப்படையில், 60 வயதிலிருந்து ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் உத்தரவாத ஓய்வூதியம் பெறலாம்.
ஒரு வேளை சந்தாதாரர் இறந்துவிட்டால் சந்தாதாரரின் துணைக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
துணை இல்லையென்றாலும், யார் நாமினியோ அவர்களுக்கு இந்த ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்.
எப்படி இணைவது?
உங்களுக்கு எந்த வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இணைந்து கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, முகவரி சான்று, அடையாள சான்றை கொடுக்க வேண்டும்.
அதன் பின்னர் வங்கி உங்களுக்கான ப்ரான் எண்ணை (pran number) பதிவு செய்து கொடுக்கும்.
எவ்வளவு தொகை வேண்டும்?
இந்த திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யும் போதே, 60 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை உங்களுக்கு ஓய்வூதியமாக வேண்டும் என்பதையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆக நீங்கள் பெற நினைக்கும் ஓய்வூதியத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
APY கணக்கில் எப்படி செலுத்துவது?
இந்த ஓய்வூதிய திட்டத்தின் இணைந்த பின், மாதா மாதம் செலுத்த வேண்டிய சந்தா தொகையை, வங்கிக் கணக்கில் இருந்து ஆட்டோடெபிட் மூலம் செலுத்தலாம்.
இதற்கு ஆதாரமாக உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும்.
பணம் செலுத்திய விவரங்கள், எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பது பலவும் எஸ்எம்எஸ் ஆக வரும். இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
எப்போது பணம் எடுப்பார்கள்?
இந்த திட்டத்தில் நீங்கள் எப்போது முதல் முறையாக இணைகிறீர்களோ? அதே தேதியில் அடுத்தடுத்த மாதங்களில் பணம் செலுத்த வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் நவம்பர் 21 அன்று இந்த திட்டத்தினை துவங்குகிறீர்கள் என்றால், டிசம்பர் 21 அன்று தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.
இடையில் மாற்றம் செய்யலாமா?
ஆரம்பத்தில் 500 ரூபாய் தொகையினை செலுத்தியுள்ளீர்கள். இந்த தொகையினை கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் மட்டுமே இந்த தொகையில் நீங்கள் மாற்றம் செய்து கொள்ளலாம். ஆக நீங்கள் ஏப்ரல் மாதத்தில் உங்களது தொகையினை கூடுதலாக செலுத்தவோ அல்லது குறைக்கவோ முடியும்.
அவசரத் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாமா??
அடல் பென்ஷன் திட்டத்தில் சந்தாதாரர் 60 வயதுக்கு பின் இறந்து விட்டால், அவரது இறப்பு சான்றும், இந்த திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார் ஆட்டை, நாமினியின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை, பதிவு செய்யப்பட்ட வங்கிக் கிளையில் கொடுத்தால், வங்கி அந்த விவரங்களை PFRDA-வுக்கு அனுப்பும். இந்த நகல்கள் சரிபார்க்கப்பட்டு பின்னர், பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கப்படும்.
செலுத்திய தொகை கிடைக்கும்?
ஒரு வேளை சந்தாதாரர் 60 வயதுக்கு முன்னரே இறந்தால் அல்லது தீவிரமான நோய் காரணமாக பணத்தினை எடுக்க வேண்டும் என்றால். சந்தாதாரர் எவ்வளவு தொகையினை செலுத்தினாரோ அதனை மட்டும் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான சரியான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இடையில் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் உள்ள சலுகை?
இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, ஒரு சந்தாதாரர் 60 வயதுக்கு பின்னர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகள், சந்தாதாரர் கேட்டிருந்த தொகை முழுமையாக கிடைக்கும். ஒரு வேளை சந்தாதாரர் இறந்து விட்டால், நாமினிக்கு இந்த தொகை கிடைக்கும்.
நாமினியை மாற்ற முடியுமா?
நீங்கள் உங்களது ஓய்வூதிய திட்டத்தில் குறிப்பிட்டிருந்த நாமினி துரதிஷ்டவ்சமாக இறந்துவிட்டால், அவருக்கு பதிலாக வேறு ஒரு நாமினியை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். நீங்கள் எந்த வங்கியில் கணக்கை தொடங்கினீர்களோ, அதே வங்கியில் சென்று சரியான ஆவணங்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
அரசின் இந்த திட்டமானது 60 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் அவசியமான ஒன்று தான். உண்மையில் வயதான காலத்திலும் நாம் யாரையும் சாரமல் வாழ, இது ஒரு அம்சமான திட்டமே.
எஸ்பிஐ இணைய வங்கியில் எப்படி இணையலாம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது இணைய வங்கியினை லாகின் செய்து கொள்ளுங்கள்.
அதில் Social Security Schemes என்ற ஆப்சன் இருக்கும். அதில் adal pesion yojana என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு உங்களது சேமிப்பு கணக்கு நம்பரை கிளிக் செய்து, APY திட்டத்துடன் லிங்க் செய்யவும். அதன் பிறகு Submit என்ற ஆப்சனை கொடுக்கவும். அப்படி கொடுத்த பிறகு உங்களுக்கு CIF எண் கிடைக்கும்.
இந்த CIF எண் செலக்ட் செய்து, பார்மினை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். நாமினி விவரங்களும் கொடுக்க வேண்டியிருக்கும்.
அதன் பிறகு எவ்வளவு ஓய்வூதியம் வேண்டும் என்பதையும் தெளிவாக குறிப்பிட வேண்டியிருக்கும். அதனை தெளிவாக குறிப்பிட்ட பின்னர் உங்களது பார்மினை சப்மிட் கொடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications