சென்னை: இந்தியாவில் தற்போது பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் வங்கி கடன் வாங்கி சொந்த வீடு வாங்க வேண்டுமா அல்லது வாடகை வீட்டிலேயே இருந்து விடலாமா என்ற விவாதம் எழுந்துள்ளது .இதற்கு முக்கிய காரணம் வீட்டுக்கடன் என வாங்கி விட்டால் அடுத்த 15 முதல் 20 ஆண்டு காலத்திற்கு அந்த கடனை செலுத்துவதற்காக நாம் உழைத்தாக வேண்டும் என்பதுதான் .
அந்த வகையில் வீட்டு கடன் வாங்குவது நிதி ரீதியாக சிறந்த முடிவா அல்லது தவறான முடிவா என்பதை நாம் இந்த கட்டுரையில் ஆய்வு செய்யலாம்.

உங்கள் பெயரில் சொத்து உருவாகும்: உங்களுக்கென சொந்தமாக ஒரு சொத்து உருவாகிறது எனும்போது எதிர்காலத்தில் உங்களுக்கு அது ஒரு நிதி ஸ்திரத்தன்மையை வழங்கும். எனவே கடன் வாங்குவதன் மூலம் உங்களுக்கு ஒரு சொத்து கிடைக்கிறது அந்த சொத்து நாளடைவில் வளர்ச்சி அடைந்து வரக்கூடிய இடத்தில் இருக்கிறது என்றால் தாராளமாக வாங்கலாம்.
வரி சலுகை: இந்தியாவில் வருமானவரித்துறை சார்பாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வீட்டுக் கடனுக்கான வரி சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதாவது வீட்டுக் கடனுக்கான அசல் தொகையை திரும்ப செலுத்துவது மற்றும் வீட்டு கடனுக்கான வட்டியை செலுத்துவது ஆகிய இரண்டையும் குறிப்பிட்டு நாம் வருமான வரி சலுகையை பெற முடியும். இதற்கு பிரிவு 80சி மற்றும் பிரிவு 24 ஆகியவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் .
வாங்கும் சக்தியை அதிகரிக்கிறது: வீட்டுக் கடன்கள் என்பது ஒரு தனிநபரின் வாங்கும் சக்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் நிதி ரீதியாக அடைய முடியாத சொத்துக்களை கூட ஒரு நபரால் வங்கி கடன் மூலம் வாங்கி விட முடிகிறது. எனவே ஒருவர் தன்னுடைய வருமானத்தை குறிப்பிட்டு கணிசமான தொகையை கடனாக வாங்கி அவர் பெயரில் ஒரு சொத்தினை உருவாக்கலாம்.
பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு: ரியல் எஸ்டேட் என்பது வரலாற்று ரீதியாகவே பணம் வீக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்பாக செயல்படுகிறது. சொத்து மதிப்பு காலப்போக்கில் அதிகரிப்பதால் வீட்டு உரிமையாளருக்கு அது பண வீக்கத்திற்கு எதிரான விளைவுகளை பாதுகாக்க வழிவகை செய்கிறது.
நீண்ட கால பொறுப்பு: வீட்டு கடன் வாங்குவதில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் அதில் சில விஷயங்களை கவனத்தில் கொள்வதும் அவசியம். வீட்டுக்கடன் என்பது அடுத்த ஒன்று இரண்டு ஆண்டுகளில் முடிந்து விடாது. குறைந்தது 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கடனை மாதாந்திர இஎம்ஐ தொகையாக செலுத்தி ஆக வேண்டும். எனவே நீண்ட கால பொறுப்பு கொண்டது.
இஎம்ஐ தவறக் கூடாது: ஒவ்வொரு மாதமும் தவறாமல் இந்த தொகையை செலுத்த வேண்டும். ஒரு மாதம் தவறினால் கூட உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் பாதிக்கும் அல்லது நீங்கள் அபராதத்தோடு அந்த தொகையை திருப்பி செலுத்த வேண்டியது இருக்கும் .
கூடுதல் செலவுகள்: வீடு வாங்குவதற்கான கடனை தாண்டி பதிவு கட்டணம், பராமரிப்பு கட்டணம் ,சொத்து வரி உள்ள கூடுதல் சுமைகளையும் சுமக்க வேண்டி இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் தயாராக இருக்கிறோம் என்றால் மட்டுமே வீட்டு கடன் வாங்கி வீடு வாங்க வேண்டும்.
எனவே வீடு வாங்கும் போது வருங்காலத்தில் அதன் மதிப்பு வளர்ச்சி அடையுமா? அதன் ரீசேல் வேல்யூ என்ன என்பது குறித்து எல்லாம் பார்த்து ஆய்வு செய்து கொள்வது நல்லது. வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பாக நிதி ரீதியாக அந்த கடனை திரும்ப செலுத்த நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதை ஒரு முறை மதிப்பாய்வு செய்து கொள்வது கட்டாயம் என்கின்றனர் இத்துறை சார்ந்த நிபுணர்கள்.


Click it and Unblock the Notifications