இன்னமும் சிலர் தங்களுடைய சேமிப்பை சேவிங்ஸ் அக்கவுண்டில் வைத்திருக்கின்றனர். இப்படி வைத்திருப்பவர்களுக்காக வங்கி நிறைய வசதிகளை வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் பலர் அவற்றை பயன்படுத்துவதே இல்லை. உங்கள் சேவிங்ஸ் அக்கவுண்டில் ஒரே ஒரு செட்டிங்கை மாற்றிவிட்டால் போதும் உங்களுடைய பணத்திற்கு 2 விதமாக வட்டி கிடைக்கும். இதை எப்படி செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பொதுவாக சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு 2.5 சதவீதம் முதல் 3 சதவீத வட்டி மட்டுமே கிடைக்கிறது. இது ஒவ்வொரு வங்கியையும் பொறுத்து மாறுபடும். ஆனால் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு இதைவிட சற்று அதிகமான வட்டி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் FD திட்டத்தின் கால அளவைப் பொறுத்து 6 முதல் 8 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. இந்த இரண்டு ஆப்ஷனையும் ஒன்றாகப் பயன்படுத்தினால் 2 விதத்தில் வட்டி பெறலாம்.
FD-யில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் நேரடியாக வங்கிக்கு சென்று குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். 2 ஆண்டு கால FD திட்டத்தை தேர்ந்தெடுத்தால் தொடர்ந்து அந்த 2 ஆண்டுகளுக்கும் வட்டி கிடைக்கும். முதிர்வில் வட்டியையும் அசலையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் உங்களுடைய சேவிங்ஸ் அக்கவுண்டில் இருக்கும் பணம் தானாகவே ஃபிக்சட் டெபாசிட் செய்யப்பட்டு அதற்கு வட்டி கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் நீங்கள் நினைக்கும் நேரத்தில் எல்லாம் அந்த பணத்தை மீண்டும் எடுக்க முடிந்தால் இன்னும் வசதியாக இருக்கும் அல்லவா? அப்படி ஒரு வசதியை தான் வங்கிகள் வழங்குகின்றன.

ஆட்டோ ஸ்வீப் வசதி: ஆட்டோ ஸ்வீப் எனப்படும் வசதியின் மூலம் உங்களுடைய சேவிங்ஸ் அக்கவுண்டில் இருக்கும் பணத்தின் ஒரு பகுதியை FD டெபாசிட்டாக மாற்ற முடியும். இதனால் சேவிங்ஸ் அக்கவுண்டில் இருக்கும் பணத்திற்கும் தனியாக வட்டி வரும். ஃபிக்சட் டெபாசிட்டிற்கும் தனியாக வட்டி கிடைக்கும். பெரும்பாலானோர் FD-யில் பணம் போட தயங்குவதற்கு காரணம் லாக்கின் பீரியட். அதாவது டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் காலம் வரை பணத்தை எடுக்க முடியாது.
ஒருவேளை எடுத்தாலும் அதற்கு வங்கிகளில் அபராதம் விதிக்கும். ஆனால் இந்த ஆட்டோ ஸ்வீப் வசதியின் மூலம் நீங்கள் நினைக்கும் நேரத்தில் ஃபிக்சட் டெபாசிட் செய்த பணத்தை எடுக்கலாம். இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம்.
ஆட்டோ ஸ்வீப் என்ற வசதியை பயன்படுத்தும் போது முதலில் உங்கள் சேவிங்ஸ் அக்கவுண்டிற்கு குறிப்பிட்ட வரம்பை நிர்ணயிக்க வேண்டும். உதாரணமாக ரூ.25,000 என வைத்துக் கொள்வோம். நீங்கள் தொடர்ந்து சேமித்துக் கொண்டே வருகிறீர்கள் அப்போது உங்களுடைய சேவிங்ஸ் அக்கவுண்டில் இருக்கும் பணம் ரூ.65,000 ஆக அதிகரிக்கிறது என்றால் மீதமுள்ள ரூ.40,000 பணம் தானாகவே FD-யாக மாற்றப்படும்.
உங்கள் அன்றாட செலவுக்காக சேவிங்ஸ் அக்கவுண்டில் இருந்த ரூ.25,000-த்தில் ரூ.5,000-த்தை செலவு செய்து விட்டீர்கள் என்றால்.. நீங்கள் நிர்ணயித்த ரூ,25,000 வரம்பு குறைந்துவிடும். அப்போது FD டெபாசிட்டில் இருந்து ரூ.5,000 தொகை மீண்டும் சேவிங்ஸ் அக்கவுண்டிற்கு வந்துவிடும். இப்போது சேவிங்ஸ் அக்கவுண்டில் இருக்கும் ரூ.25,000-த்திற்கு வட்டி கிடைக்கும். அதே போல உங்கள் ஃபிக்சட் டெபாசிட்டில் இருக்கும் 35,000-த்திற்க்கும் வட்டி கிடைக்கும்.
இந்த வசதியை ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு பெயரில் வழங்குகின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, HDFC பேங்க், ICICI பேங்க், கோடக் மகேந்திரா பேங்க், ஆக்சிஸ் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா என பல வங்கிகளிலும் இந்த வசதி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஆப்ஷனை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்கள் வங்கியின் வட்டி விகிதம் என்ன? ஃபிக்சட் டெபாசிட்டின் கால அளவு என்ன? முன்கூட்டியே பணம் எடுத்தால் அதற்கான விதிமுறை என்ன?, வரி எவ்வளவு? என்ற விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications
