சென்னை: நீங்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணிப்பவரா.. மற்றும் சர்வதேச பயணங்கள் மேற்கொள்ளும் போது புதிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் கொண்ட கிரெடிட் கார்டைத் தேடுகிறீர்களா.. உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களின் ஓய்வறைகளைப் பயன்படுத்துவது முதல் விமான டிக்கெட் முன்பதிவுக்கான ரிவார்டுகளைப் பெறுவது வரை, அதிக நன்மைகளை வழங்கும் கிரெடிட் கார்டுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
சர்வதேச அளவில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் போது, வங்கிகள் அதிக ஜாயினிங் கட்டணம் மற்றும் வருடாந்திரக் கட்டணங்களை வசூலிப்பது வழக்கமான ஒன்றுதான். எனவே, உங்களுக்கு உதவும் வகையில் குறைவான வருடாந்திரக் கட்டணம் மற்றும் ஜாயினிங் கட்டணங்களைக் கொண்ட கிரெடிட் கார்டுகளின் விவரங்களைப் பார்ப்போம்.

SBI எலைட் கிரெடிட் கார்டு: SBI எலைட் கிரெடிட் கார்டு, ஒரு பிரீமியம் கிரெடிட் கார்டு ஆகும். சர்வதேச பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு பல நன்மைகளை, இந்தக் கிரெடிட் கார்டு வழங்குகிறது. SBI எலைட் பிரீமியம் கார்டு பயனர்களுக்கு ஒரு வருடத்தில் உள்நாட்டில் 8 முறை இலவசமாக விமான நிலைய ஓய்வறைகளைப் பயன்படுத்தவும், சர்வதேச விமான நிலையங்களில் 6 முறை இலவசமாக விமான நிலைய ஓய்வறைகளைப் பயன்படுத்தும் நன்மைகளை வழங்குகிறது. மேலும் இதற்கான வருடாந்திரக் கட்டணம் ரூ.4999 ரூபாய்.
IDFC ஃபர்ஸ்ட் வெல்த் கிரெடிட் கார்டு: இந்தக் கிரெடிட் கார்டுக்கு வருடாந்திரக் கட்டணம் எதுவும் கிடையாது. பயணக் காப்பீடு, விமான விபத்து காப்பீடு, ஒரு வருடத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலைய ஓய்வறைகளை 16 முறை இலவசமாக பயன்படுத்தும் நன்மைகளை வழங்குகிறது. 450க்கும் மேற்பட்ட இடங்களுக்கு, விமான நிலைய சேவையில் தள்ளுபடியை வழங்குகிறது.
RBL வேர்ல்ட் சஃபாரி கிரெடிட் கார்டு: இந்தக் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பயணச் செலவில் ஒவ்வொரு ரூ. 100 ரூபாய்க்கும், 5 டிராவல் பாயிண்டுகள் கொடுக்கப்படுகிறது, மற்றும் இந்தக் கார்டைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள முக்கிய உள்நாட்டு விமான நிலையங்களில் 8 முறை இலவசமாக விமான நிலைய ஓய்வறைகளைப் பயன்படுத்தலாம். அதே போல 8 சர்வதேச விமான நிலையங்களில் உள்ள ஓய்வறைகளையும் இலவசமாகப் பயன்படுத்தும் நன்மைகளை வழங்குகிறது. இதன் வருடாந்திரக் கட்டணம் ரூ. 3000 ரூபாய்
AU பேங்க் ஜெனித்+ கிரெடிட் கார்டு: இந்தக் கிரெடிட் கார்டுகள் மூலம் லக்சரி பிராண்ட் வவுச்சர்கள், குறைந்த ஃபோரக்ஸ் மார்க்அப் கட்டணம் உட்பட சில பிரிமியம் நன்மைகள் கிடைக்கிறது. பயணம், உணவு மற்றும் சர்வதேச செலவுகளுக்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூ. 100 ரூபாய்க்கும், 2 ரிவார்ட் பாயிண்ட்களைப் பயனர்கள் பெறுகின்றனர். சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் 16 முறை இலவசமாக விமான நிலைய ஓய்வறைகளைப் பயன்படுத்தலாம். AU பேங்க் ஜெனித்+ கிரெடிட் கார்டு மூலம் அதற்கு முந்தைய ஆண்டு ரூ. 8 லட்சத்திற்கு மேல் செலவு செய்திருந்தால், வருடாந்திரக் கட்டணம் இலவசம். அதுவே புதியதாக கிரெடிட் கார்ட் பெற்றவராக இருந்தால் வருடாந்திரக் கட்டணமாக ரூ. 4,999 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு ஈசி மை ட்ரிப் கிரெடிட் கார்டு: இதற்கான வருடாந்திரக் கட்டணம் ரூ. 350 ரூபாய். அதுவே அதற்கு முந்தைய ஆண்டில் இந்த கிரெடிட் கார்டுகளைப் பெற்று ரூ. 50,000 ரூபாய்க்கு மேல் செலவழித்து இருந்தால், வருடாந்திரக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும், இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஈசி மை ட்ரிப் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications