காப்பீடு என்பது தற்போது அத்தியாவசியமாகிவிட்டது. ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, மருத்துவ காப்பீடு என பல திட்டங்கள் சந்தையில் உள்ளன. இதற்காகவே ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை நாம் ப்ரீமியமாக செலுத்த ஒதுக்க வேண்டியுள்ளது.
நகர் பகுதிகளில் இது பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும் இந்தியாவின் கிராமப் பகுதிகளில் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு குறைவு. குறிப்பாக மக்கள் காப்பீடுக்காக பெரிய தொகையை செலுத்த தயாராக இருக்க மாட்டார்கள்.

பொதுவாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கான கட்டணங்கள் அதிகமாக இருப்பது, புரியாத வார்த்தைகளை கொண்டிருப்பது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அவற்றை வாங்க தயங்குகின்றனர். இந்நிலையில் குறைந்த ப்ரீமியம் கொண்ட காப்பீடு திட்டம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏஐ (IRDAI) ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டமான பீமா விஸ்தாருக்கு (Bima Vistaar) ரூ.1,500 ஐ ஆண்டு ப்ரீமியம் கட்டணமாக நிர்ணயிக்க பரிந்துரைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 25 மற்றும் 26 ஆம் தேதி காப்பீட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய ஐஆர்டிஏஐ, பீமா விஸ்தார் திட்டத்தில் தனி நபருக்கான காப்பீட்டு ப்ரீமியமாக ஆண்டுக்கு ரூ.1,500 மற்றும் குடும்பங்களுக்கு ரூ.2,420ஐ நிர்ணயிக்க பரிந்துரை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
கிராமப் பகுதிகளில் உள்ளவர்களும் காப்பீடு பெற வேண்டும் ஒரே திட்டத்தின் கீழ் மருத்துவம், ஆயுள், விபத்து காப்பீடு அனைத்துமே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பீமா விஸ்தார் என்ற காப்பீட்டு திட்டத்தை ஐஆர்டிஏஐ கொண்டு வந்துள்ளது.
பீமா விஸ்தார் என்பது பொது மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் கொண்டு வரப்பட உள்ள ஒரு ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டமாகும். இதில் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் சொத்துக்களுக்கான காப்பீடு ஆகியவற்றை ஒரே திட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளலாம்.
2047ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை எட்ட ஐஆர்டிஏஐ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களை நோக்கமாக கொண்டு பல அறிவிப்புகளை வெளியிடுகிறது.
அந்த வகையில் ஐஆர்டிஏஐ-இன் பீமா டிரைனிட்டி திட்டத்தின் கீழ் இந்த பீமா விஸ்தார் அமலுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு குறைந்த விலையில் காப்பீடு கிடைக்கும் என்று ஐபிஏஐ துணை தலைவர் நரேந்திர பரிந்த்வால் கூறியுள்ளார்.
பீமா விஸ்தாராவில் அனைத்து காப்பீடுகளுக்கு தனிநபர் ஆண்டுக்கு ரூ.1,500 மற்றும் குடும்பத்திற்கு ரூ.2,420ஐ ப்ரீமியமாக செலுத்த நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ரீமியம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த காப்பீட்டில் உத்தரவாத தொகை ரூ.2 லட்சமாக இருக்க கூடும். விரைவில் இந்த திட்டம் குறித்த முழுமையான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications