உலகளவில் கிரிப்டோ கரன்சி முதலீடுகள் பெரும் சரிவை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக பிட்காயினில் முதலீடு செய்த அனைவரும் செய்வது அறியாமல் திகைத்து நிற்கின்றனர்.
ஓராண்டுக்கு முன்னர் தங்கத்துக்கு நிகரான லாபம் தரும் முதலீடாக இருந்த பிட்காயின் இன்று அதிக நஷ்டம் தந்த முதலீடாக மாறி இருக்கிறது. கிரிப்டோ சந்தையே வீழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில் புகழ்பெற்ற கிரிப்டோ நாணயமான பிட்காயின் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, முதல் முறையாக 60,000 டாலருக்கும் கீழே சரிந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிட்காயின் மதிப்பு அதிகபட்சமாக 126,000 டாலரை தொட்டது. ஆனால் இப்போது அதன் மதிப்பில் பாதிக்கும் மேலாக குறைந்துவிட்டது.

கிரிப்டோகரன்சிக்கு ஆதரவான டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றதால் தொடக்கத்தில் பிட்காயின் மதிப்பு சர்ரென உயர்ந்தது. ஆனால் பெரிய நிறுவன முதலீட்டாளர்கள் (Institutional Investors) கிரிப்டோ சந்தையில் தங்களுக்குக் கிடைத்த லாபத்தை எடுத்துக்கொண்டு, தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஏஐ, பாதுகாப்பு , எனர்ஜி மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக பிட்காயின் முதலீட்டாளர்கள் பிட்காயினுக்குப் பதிலாக தங்கம் மற்றும் AI நிறுவனங்களின் பங்குகள் மீது அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர் இதனால் பிட்காயின் மதிப்பு சரிகிறது.
தற்போதைக்கு பிட்காயின் விலை 60,000 டாலர் முதல் 62,000 டாலர் என்ற வரம்பிற்குள் நிலைபெறுகிறதா என சந்தை வல்லுநர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்த விலையில் சந்தை நிலை பெற்றால், முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டு, அவர்கள் மீண்டும் கிரிப்டோ முதலீட்டுக்கு திரும்பி வந்து விலை உயர வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிரிப்டோ சந்தையில் இது போன்ற சரிவுகள் இயல்பானவை என கூறும் நிபுணர்கள், இதற்கு முன்பும் பெரிய முதலீட்டாளர்கள் குறுகிய கால லாபத்திற்காக விற்கும்போது பிட்காயின் விலை தற்காலிகமாகக் குறைந்து, பின்னர் மீண்டும் முதலீடுகள் உள்ளே வந்தபோது விலை உயர்ந்தது என்கின்றனர்.
கிரிப்டோ சந்தையின் ஏற்ற இறக்கங்களைத் தாங்கக்கூடியவர்கள் மற்றும் நீண்ட கால முதலீட்டை நோக்கமாகக் கொண்டவர்கள், இந்த விலை வீழ்ச்சியை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திப் புதிய முதலீடுகளைச் செய்யலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். அதே வேளையில் ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் பதற்றமடைந்து நஷ்டத்தில் கிரிப்டோக்களை விற்காமல் சந்தை மீண்டும் சீராகும் வரை பொறுமையாக காத்திருக்கலாம் என்கின்றனர்.
குறுகிய கால லாபத்திற்காக பிட்காயின் முதலீட்டு வந்தவர்கள் , அதிக நஷ்டத்தைத் தாங்க முடியாதவர்கள் தங்களின் முதலீட்டு உத்தியை மறுபரிசீலனை செய்து வெளியேறுவது பற்றி யோசிக்கலாம் என்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

