இந்தியாவில் பாலின சமத்துவத்தை கொண்டு வரும் நோக்கில் பெண்கள் முன்னேற்றத்தை மையமாக கொண்டு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகளும், நிறுவனங்களும் அறிவிக்கின்றன.
அதில் பெரும்பாலானவர்கள் கவனிக்க தவறுவது வீட்டுக் கடன். பெண்கள் பெயரில் வீட்டுக் கடன் வாங்கினால் என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பது குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

2019ஆம் ஆண்டு ஆனரோக் என்ற இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் வீடு வாங்குபவர்களில் 30% - 35% சதவிகிதத்தினர் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது.
அதேபோல வீடு வாங்கக்கூடிய பெண்களில் 78% பேர் தங்களது சொந்த பயன்பாட்டிற்காக வீடு வாங்குகின்றனர் என்பதும், 22% பேர் முதலீட்டு நோக்கத்தில் வீடுகளை வாங்குகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. அண்மைக்காலமாக பெண்கள் பெயரில் வீட்டுக் கடன்கள் வாங்குவது அதிகரித்திருப்பதாக பேஸிக் ஹோம் லோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என அதுல் மோங்கா தெரிவித்துள்ளார்.
வீட்டு கடன்களை பொறுத்தவரை பெண்களின் பெயரில் வாங்கும் போது வட்டி விகிதத்தில் குறிப்பிட்ட அளவிலான சலுகை கிடைக்கிறது என அவர் கூறுகிறார். கடன் வழங்கும் நிறுவனங்கள் 0.05% முதல் 0.10% வரை வட்டி விகிதத்தை குறைக்கின்றன என்கிறார். பார்ப்பதற்கு இந்த சதவிகிதம் குறைவாக தெரிந்தாலும் நீண்ட கால அடிப்படையில் கணக்கிட்டு பார்க்கும்போது ஒரு கணிசமான தொகையை இதன் மூலம் சேமிக்க முடியும் என அவர் கூறுகிறார்.
உதாரணமாக ரூ.1 கோடிக்கு வீட்டுக்கடன் 20 ஆண்டு காலத்திற்கு வாங்குகிறோம் எனில், ஒரு ஆண் பெயரில் வீட்டு கடன் வாங்கும் போது அவர்களுக்கான வட்டி 8.9% ஆக இருக்கும் இதுவே ஒரு பெண்ணின் பெயரில் வாங்கும் போது அது 8.8% என குறைகிறது.
இதனால் வட்டியில் ரூ.1 லட்சம் சேமிக்க முடியும். அது மட்டுமின்றி வருமான வரி சட்டத்தின் பிரிவு 24 பி -இன் கீழ் பெண்களின் பெயர்களில் வீடு வாங்கும் போது அதற்காக அவர்கள் செலுத்தும் வட்டிக்கு ஒரு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும்.
வீட்டு கடனுக்கான பிரின்சிபல் தொகையை திரும்ப செலுத்தும் போது வருமான வரி சட்டத்தின் பிரிவு 80cஇன் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம். கணவன் மனைவி இருவரும் கூட்டாக சேர்ந்து வீட்டுக் கடன்களை பெறும்போது அவர்கள் தனித்தனியாக இத்தகைய வரி சலுகைகளை அனுபவிக்க முடியும்.
சில மாநிலங்களில் பெண்களின் பெயர்களில் ஒரு சொத்துக்களை வாங்கும் போது அதற்கான பத்திரப்பதிவு கட்டணங்களில் குறிப்பிட்ட அளவு சலுகை கிடைக்கிறது என அதுல் மோங்கா கூறுகிறார்.
மேலும் பெண்களின் கிரெடிட் ஸ்கோர் என்பது வலுவானதாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு விரைவாக கடன் ஒப்புதல் கிடைப்பதோடு அதிகபட்ச தொகை கடனாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications