சமூக வலைதளங்களுக்கு சென்றாலே நீங்க இன்னும் SIP ஆரம்பிக்கலயா, 10 வருஷம் SIP பண்ணா போதும் கோடீஸ்வரனாகலாம் என பல பதிவுகளை காண முடிகிறது. ஆனால் SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு செய்வதாலேயே ஒருவரால் கோடீஸ்வரனாக முடியுமா என்றால் இல்லை என்பது தான் உண்மை.
மியூச்சுவல் ஃபண்டுகளில் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக எஸ்ஐபி முதலீடு செய்வது உங்களை பணக்காரனாக்குவதற்கான வாய்ப்பை பெருமளவு அதிகரிக்குமே தவிர, அதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார் பேங்க் பஜார் சிஇஓ அத்ஹில் ஷெட்டி. இந்தியா டுடேவுக்கு பேட்டி அளித்துள்ள அவர் மியூச்சுவல் ஃபண்டு லாபம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய நிகழ்வுகளைப் பொறுத்து ஏறி இறங்கும் தன்மை கொண்டது என கூறுகிறார்.

பங்குச்சந்தை முதலீட்டில் சில உத்திகளை கையாண்டால் மட்டுமே எஸ்ஐபி மூலம் ஒருவரால் செல்வம் சேர்க்க முடியும் என்கிறார். இதற்கு பங்குச்சந்தை சரியும்போது முதலீட்டாளர்கள் பயந்து நடுங்க கூடாது, மாறாக அந்த சமயத்தில் SIP முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும் என கூறுகிறார்.
பொதுவாக நீண்ட கால SIP முதலீடுகள் 10% முதல் 15% வரை வருடாந்திர லாபத்தை (Annualised Returns) தந்துள்ளன. ஆனால், லாபம் சம்பாதிப்பது வேறு, பெரிய அளவில் சொத்து சேர்த்து பணக்காரர் ஆவது வேறு. அதற்கு நீங்கள் முதலீடு செய்யும் தொகையின் அளவும் பெரியதாக இருக்க வேண்டும் என அவர் விளக்குகிறார். இளம் வயதினர் நீண்ட கால முதலீடு என்றால் சிறு தொகையில் முதலீடு தொடங்கி அதனை 30 ஆண்டுகளாவது தொடர வேண்டும். 30 வயதுக்கு மேல் தான் தொடங்குகிறேன் என்பவர்கள் பெரிய தொகையில் தான் முதலீட்டையே தொடங்க வேண்டும் என கூறுகிறார்.
சந்தை கடுமையாக வீழ்ச்சியடையும் போது பயந்து தங்களின் SIP-ஐ பலர் நிறுத்தி விடுகிறார்கள் அல்லது பணத்தை எடுத்து விடுகிறார்கள். இந்த தவறை செய்யாமல் பொறுமையாக தொடர்ந்து முதலீடு செய்பவர்களுக்கே காம்பவுண்டிங்கின் முழு பலனும் கிடைக்கும் என அறிவுரை வழங்குகிறார்.
மேலும் அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளும் ஒரே மாதிரியான லாபத்தைத் தருவதில்லை. தவறான, டிரெண்டை ஃபாலோ செய்யாத அல்லது அதிக ரிஸ்க் கொண்ட ஃபண்டுகளை தேர்ந்தெடுத்தால், 10 ஆண்டுகள் கழித்தும் உங்களுக்கு நஷ்டம் அல்லது மிகக் குறைவான லாபமே கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே சிறந்த ஃபண்டில் எஸ்ஐபி முதலீடு செய்வதும் அவசியம்.
மேலும் உங்களது முதலீடு 10-12% வளர்ந்தாலும், நாட்டின் பணவீக்கமும் (பொருட்களின் விலைவாசி உயர்வு) உயர்ந்துகொண்டே இருக்கும். எனவே, வெறும் முதலீட்டை மட்டும் நம்பியிருக்காமல், உங்களது சம்பளம் அல்லது வருமானம் உயரும்போது, அதற்கு ஏற்ப உங்களது SIP முதலீட்டுத் தொகையையும் ஆண்டுதோறும் சிறுகச் சிறுக அதிகரிக்க வேண்டும் அதாவது ஸ்டெப் அப் செய்ய வேண்டும் என்கிறார்.
சிறந்த ஃபண்டை தேர்வு செய்வது, வயதுக்கு ஏற்ப முதலீட்டு தொகையை அமைப்பது, முதலீட்டை நிறுத்தாமல் தொடர்வது, அவ்வப்போது ஸ்டெப் அப் செய்வது ஆகியவை மட்டுமே உங்களுக்கு சிறந்த லாபத்தை பெற்று தரும். நானும் முதலீடு செய்கிறேன் என ஒரு 5000 ரூபாயை போட்டு விட்டு 10 ஆண்டாகியும் பணம் வளவரேவில்லை என புலம்புவதில்லை ஒன்றுமே கிடைக்காது இது தான் ரியாலிட்டி என கூறுகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

