மாதா மாதம் வருமானம் வர வேண்டும்.. அதே நேரத்தில் நாம் முதலீடு செய்யும் பணம் பத்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் மாதாந்திர வருமானத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு இந்தியாவில் உள்ள எந்த ஒரு போஸ்ட் ஆபீஸ் கிளையில் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதை ஆங்கிலத்தில் போஸ்ட் ஆபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம் (Post Office Monthly Income Scheme - MIS) என்று கூறுவார்கள். இதில் மொத்தமாக குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். அந்தத் தொகைக்கு ஏற்ப மாதாந்திர வட்டி வழங்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் வட்டியை எடுத்து நீங்கள் பயன்படுத்தலாம். அரசே வழங்கும் திட்டம் என்பதால் இன்றளவும் ஏராளமான நபர்கள் இந்தத் திட்டத்தில் மாத வருமானம் பெற்று வருகின்றனர். இப்படி செய்யும் பலருக்கு ஒரே ஒரு கணக்கின் மூலம் கிடைக்கும் மாத வருமானத்தைப் போலவே பல கணக்குகளை வைத்து மாத வருமானம் பெறலாமா என்ற கேள்வி எழுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கை தொடங்க முடியுமா?: கண்டிப்பாக முடியும். போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் மாதாந்திர வருமானத் திட்டத்தில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கை தொடங்கி நிர்வகிக்கலாம்.
அப்படி தொடங்கினாலும் மாதாந்திர வருமான திட்டத்திற்கு என்று டெபாசிட் வரம்பு இருக்கிறது. அதை மீறாமல் முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் ஒரு தனி நபர் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்கலாம்.

போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?: இந்த திட்டத்திற்கு தற்போது 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி தொகை நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு ஏற்ப உங்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படும். MIS திட்டத்தின் வட்டி விகிதத்தை அரசு காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்கிறது.
குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக தனி நபர்கள் ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் லாக்கின் காலம் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகள் வரை நீங்கள் முதலீடு செய்த தொகையை எடுக்க முடியாது. நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு ஏற்ப 5 ஆண்டுகளுக்கும் வட்டி கிடைக்கும். முதிர்வு காலம் முடிந்த பிறகு அதாவது 5 ஆண்டுகள் முடிந்த பிறகு உங்களுடைய டெபாசிட் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
மூன்று பேர் கணக்கு தொடங்கலாமா?: MIS கணக்கை ஒரு தனி நபர் அல்லது மூன்று பெரியவர்கள் வரை இணைந்து தொடங்கலாம். தனிநபர் கணக்காக இருந்தால் ரூ.9 லட்சம் டெபாசிட் செய்யலாம். அதுவே ஜாயிண்ட் அக்கவுண்டாக இருந்தால் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு மைனரின் சார்பாக அவர்கள் பெற்றோர்கள் கணக்கை நிர்வகிக்கலாம் அல்லது பாதுகாவலர்களும் கணக்கை தொடங்கலாம்.
ஆனால் இது ஒரு முறை செய்யப்படும் முதலீடு. பிக்சட் டெபாசிட் திட்டங்களைப் போலவே நீங்கள் ஒரே ஒருமுறை மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். ரூ.1,000 தொடங்கி ரூ.15 லட்சம் வரை ஆயிரம் மடங்குகளில் டெபாசிட் செய்யலாம். உதாரணமாக நீங்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால்.. அதுதான் இந்த திட்டத்தின் முதலீடாக இருக்கும். கணக்கு முதிர்ச்சியடையும் வரை நீங்கள் மீண்டும் முதலீடு செய்ய முடியாது. அதேபோல ஒரு தனிநபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்கலாம். ஆனால் தனிநபராக இருக்கும் பட்சத்தில் அதிகபட்ச வரம்பு ரூ.9 லட்சம் என்று முன்பே பார்த்தோம். இந்த வரம்பை மீறாமல் முதலீடு செய்ய வேண்டும். மூன்று கணக்குகள் இருந்தால் 3 லட்சமாக பிரித்து முதலீடு செய்யலாம்.
தற்போதைய வட்டி விகிதத்தின் படி ஒரு நபர் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் அதற்கு ஒவ்வொரு ஆண்டும் வட்டியாக ரூ.66,600 வருமானம் கிடைக்கும். இந்த வட்டி விகிதத்தை ஒவ்வொரு மாதமும் ரூ.5,550 ஆக பிரித்து பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் எடுக்காமல் விடும் வட்டி தொகைக்கு கூட்டு வட்டி எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. கணக்கு தொடங்கிய ஓராண்டுக்கு பிறகு கணக்கை முடித்தால் 2 சதவீதம் முதலீட்டு தொகையில் பிடித்தம் செய்யப்படும். அதுவே அதற்குப் பிறகு முடித்தால் 1 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications

