இன்றைய தேதிக்கு ஒரு நொடிப் பொழுதில், உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் பணத்தை அனுப்பவோ அல்லது பணத்தை இன்னொரு வங்கிக் கணக்கில் இருந்து நம் கணக்கில் பெறவோ முடியும்.
பணத்தை செலவழிக்க, டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட் கூடத் தேவை இல்லை. வெறுமனே ஒரு ஸ்மார்ட்ஃபோனும், பேமெண்ட் அப்ளிகேஷனும் இருந்தால் கூட போதும், வங்கிக் கணக்கில் இருந்து தாராளமாக செலவழித்துக் கொள்ளலாம்.
இந்த தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவுக்கு நமக்கு நன்மை பயக்கிக் கொண்டு இருக்கிறதோ, அதே அளவுக்கு நம்மை அச்சுறுத்திக் கொண்டும் இருக்கிறது.
ஆன்லைன் திருட்டு
ஜம்தாரா என ஒரு வெப் சீரிஸ் நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. அதில், எப்படி நம்மை வைத்தே, நம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுகிறார்கள் எனக் காட்டி இருப்பார்கள். வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் போல பேசி, நம் வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடுவதையும் செய்திகளில் படித்து இருக்கிறோம்.
லிங்க் க்ளிக்
அது போக ஏதாவது எஸ் எம் எஸ், வாட்ஸப் செய்திகள் வழியாக ஏதாவது ஒரு லிங்க் வரும். அது நாம் வங்கிக் கணக்கு வைத்திருக்கும், வங்கியின் வலைதளத்தைப் போலவே இருக்கும். அதில் நம் பாஸ்வேர்டை எல்லாம் மாற்றச் சொல்லிக் கேட்கும். அதை நாமும் நம்பி, நம் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்து பாஸ்வேர்டை மாற்றினால், நம் பணத்தை முழுமையாக சுருட்டி விடுவார்கள் ஆன்லைன் திருடர்கள்.
புதிய வைரஸ்
இப்போது அப்படி ஒரு புதிய வைரஸை, திருடர்கள் களம் இறக்கி இருக்கிறார்களாம். அந்த மால்வேரின் பெயர் Cerberus Trojan. இந்த மால்வேரிடம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லி எஸ்பிஐ வங்கி, தன் ட்விட்டர் வழியாக வாடிக்கையாளர்களை எச்சரித்து இருக்கிறது. அது போக மத்திய புலனாய்வுத் துறையும் Cerberus Trojan-ஐப் பற்றி கடுமையாக எச்சரித்து இருக்கிறது.
சிபிஐ எச்சரிக்கை
மத்திய புலனாய்வுத் துறை இந்த Cerberus Trojan குறித்து மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகளுக்கு எச்சரித்து இருக்கிறார்களாம். இந்த மால்வேர் கொரோனாவைப் பயன்படுத்தி பரப்பிக் கொண்டு இருக்கிறார்களாம். கொரோனா தொடர்பான செய்திகளைச் சொல்லும் எஸ் எம் எஸ் வழியாகத் தான் அதிகம் பரவுகிறதாம்.
திருட்டு ஆரம்பம்
கொரோனாவைப் பற்றித் தான் சொல்கிறார்கள் என மக்களும் ஏமாந்து போய், இந்த ட்ரோஜன் மால்வேருடன் வரும் எஸ் எம் எஸ்-ல் கொடுத்திருக்கும் லிங்கையோ அல்லது செயலியையோ டவுன் லோட் செய்துவிடுகிறார்களாம். அதன் பிறகு திருடர்களுக்கு ஜாலி தான்.
காலி தான்
ஒரு முறை நம் ஸ்மார்ட்ஃபோன்களில், இந்த Cerberus Trojan டவுன் லோட் ஆகிவிட்டால், அடுத்தடுத்து, இந்த மால்வேர் தன் மற்ற செயலிகளை களம் இறக்குமாம். இந்த மால்வேர், குறிப்பாக வங்கிக் கணக்கு விவரங்கள், க்ரெடிட் கார்ட் எண்கள், சிவிவி எண்கள் போன்றவைகளைத் தான் குறி வைத்து திருடும் என எச்சரித்து இருக்கிறது சிபிஐ.
உஷார் மக்களே
மீண்டும் மீண்டும் வங்கி தொடங்கி மத்திய புலனாய்வு அமைப்பு வரை எல்லோரும் சொல்வது, தேவை அற்ற லிங்குகள் மற்றும் எஸ் எம் எஸ்-களை க்ளிக் செய்ய வேண்டாம். அந்த லிங்குகளில் கேட்கும் விவரங்களைப் கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கிறார்கள். பணம் நம்முடையது. நாம் தான் கொஞ்சம் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications