பழைய கார்களை விற்று விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சரியான விலைக்கு வாங்குபவர் கிடைப்பாரா? அல்லது காரின் விலைக்கு குறைவாக கொடுத்து ஏமாற்றப்பட்டு விடுவோமா? என்ற யோசனைகள் இருக்கும். ஆனால் சில நடைமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் உங்களுடைய பழைய காரையும் அதிக விலைக்கு விற்க முடியும். இந்தப் பதிவில் பழைய காரை நல்ல ரேட்டுக்கு விற்பனை செய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
காரை சுத்தம் செய்தல்: உங்களுடைய பழைய காரை வாங்க வரும் நபர்கள் முதல்முறையாக பார்க்கும்போது, அவை பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும் வகையில் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். கார் கண்ணாடிகள், டேஷ் போர்டு போன்ற அனைத்தையும் சுத்தமாக துடைத்து வைத்திருங்கள்.

சரியான விலை நிர்ணயம்: உங்களுடைய காரின் சந்தை மதிப்பை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதிலிருந்து எவ்வளவு வருடங்கள் நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள், என்பதை பொறுத்து விலையை குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும். புதிய காரின் விலையும், நீங்கள் விற்க இருக்கும் பழைய காரின் விலையும் சமமாக இருந்தால்.. வாங்குபவர்கள் புதிதாக வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்து விடக்கூடும்.
எனவே, விலை நிர்ணயம் செய்வது கார் விற்பனையில் முக்கியமான ஒன்று. நீங்கள் ஒரு பழைய காரை வாங்கினால் எந்த காருக்கு எவ்வளவு தொகை என்று நிர்ணயித்து வைத்திருப்பீர்களோ? அதே போல உங்களுடைய காருக்கான விலை நிர்ணயத்தை செய்யுங்கள்.
தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் கையில் வைத்திருங்கள்: உங்கள் வாகனத்திற்கு தேவைப்படும், அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும். அதாவது RC புக், இன்சூரன்ஸ், பொல்யூஷன் சர்டிபிகேட் (Pollution Certificate) போன்றவற்றை வைத்திருப்பது வாங்க வரும் நபர்களுக்கு உங்களுடைய காரின் வெளிப்படைத்தன்மையை எடுத்துக்காட்டும்.
சில இடங்களில் மோசடி செய்து பிறருடைய காரை எடுத்து விற்கும் செயல்களும் நடந்து கொண்டு இருக்கின்றன. நீங்கள் தேவையான ஆவணங்களை வாங்க வருபவர்களிடம் காண்பிக்கும் போது அவர்களுக்கு, உங்கள் காரின் உண்மைத்தன்மை தெரியவரும்.
தொடர்ச்சியான சர்விஸ் ஹிஸ்டரி: உங்களுடைய காரின் மதிப்பை அதிகரிக்க தொடர்ச்சியாக சர்வீஸ் செய்து வைப்பது முக்கியமானது. 2 வருடங்களுக்கு மேல் சர்வீஸ் செய்யவில்லை, என்றால் எதிர்பார்க்கப்படும் சந்தை விலையை விட 5 சதவீத முதல் 10 சதவீதம் வரை, உங்களுடைய காரின் மதிப்பு குறைந்து போகலாம்.
அனைத்து ஆவணங்களிலும் ஒரே பெயர்: RC புக், இன்சூரன்ஸ் மற்றும் இதர கார் ஆவணங்களில் ஒரே பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சில நேரங்களில் நீங்கள் காருக்கு இரண்டாவது உரிமையாளராக இருந்தால் ஆர்சி புக்கில் உங்களுடைய பெயர் இருக்கிறதா? என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
கார் லோன்: உங்கள் காருக்கு வாகன கடன் பெற்றிருந்தால், அவற்றை செலுத்தி முடித்த பிறகு வங்கியிடம் இருந்து NOC பெற்று வைத்திருக்க வேண்டியது அவசியம்
இந்த வழிமுறைகளை கவனமாக கடைப்பிடிப்பது, உங்கள் பழைய காரை சிறந்த விலைக்கு விற்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். காரின் ஒவ்வொரு சிறிய விவரமும் வாங்குபவரை கவரும் வகையில் இருக்க வேண்டும். எனவே, இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் காரை விற்பனைக்குத் தயார்படுத்தி, சிறந்த விலையைப் பெறுங்கள்!


Click it and Unblock the Notifications