சென்னை: இந்தியாவில் ஐடி துறையில் வேலை செய்பவர்களுக்கு பிடித்தமான நகரங்களாக பெங்களூர் ,ஐதராபாத், சென்னை உள்ளிட்டவை இருக்கின்றன. தங்களுடைய 20 மற்றும் 30 களில் ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பெரிய அளவிலான குடும்ப பொறுப்புகள் வருவதற்கு முன்னதாகவே சொந்தமாக வீடு வாங்கி விட வேண்டும் என எண்ணுகிறார்கள்.
எந்த நகரம் சிறந்தது: ஆனால் ஐடி சார்ந்த வேலைவாய்ப்புகள் எதிர்கால திட்டம் உள்ளிட்டவை காரணமாக எந்த நகரத்தில் வீட்டினை வாங்குவது என குழப்பம் அடைகின்றனர். இது தொடர்பாக ரெடிட் தளத்தில் மிகப்பெரிய விவாதமே நடந்து வருகிறது. 25 வயதான ஒரு மென்பொருள் பொறியாளர் ரெடிட் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் பெங்களூரு , ஐதராபாத் மற்றும் சென்னை ஆகியவற்றில் எங்கே வீடு வாங்குவது என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு இருக்கின்றனர்.

பெங்களூரு: பெங்களூருவை பொறுத்தவரை இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரம், ஐடி தலைநகரம் என கூறியுள்ள ஒரு பதிவர் இந்தியாவின் ஸ்டார்ட் அப் பொருளாதாரமே இந்த நகரத்தை நம்பி தான் இருக்கிறது என கூறியுள்ளார். எளிதாக நெட்வொர்க்கிங் செய்து கொள்ள முடியும் , பல்வேறு யூனிகார்ன் நிறுவனங்கள் இருக்கக்கூடிய ஒரு நகரம் என்பதால் வேலைவாய்ப்புக்கு இங்கே பஞ்சம் இருக்காது என தெரிவித்திருக்கிறார் . நீங்கள் ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும் என்ற யோசனையில் இருக்கிறீர்கள் அல்லது நீண்ட காலமாக ஐடி துறையில் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என நினைக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக பெங்களூரில் வீடு வாங்கி செட்டில் ஆவது தான் எதிர்காலத்திற்கு நல்லது என ஒரு பயனர் கூறி இருக்கிறார்.
போக்குவரத்து நெரிசல்: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை இருக்கிறது, ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் ஒரு தொழில் தொடங்க சாதகமான சூழல் என்பது இந்தியாவிலேயே பெங்களூருவில் மட்டும்தான் இருக்கிறது என ஒரு நபர் சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆனால் ஒரு பயனர் பெங்களூரு வேலைவாய்ப்பு ரீதியாக பார்க்கும் போது சிறந்த நகரமாக இருக்கிறது ஆனால் உள்கட்டமைப்பு ரீதியாக பார்க்கும் போது மிக மோசமான ஒரு நகரமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
பெங்களூரில் மழைக்காலங்களில் நம்மால் வீட்டை விட்டு வெளியே கூட செல்ல முடியாது ,வழக்கமான நாட்களில் கூட இந்த போக்குவரத்து நெரிசலை கடந்த வேலைக்கு சென்று விட்டு திரும்பி வருவது என்பது பெரிய சாதனையாக இருக்கிறது. அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பெங்களூருவில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை என்றால் பெங்களூருவை விட்டு பல்வேறு நிறுவனங்கள் வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் சிறிது காலம் யோசித்து முடிவு எடுப்பது நல்லது என ஒரு நபர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஐதராபாத்: சிலர் நீங்கள் ஐடி துறையில் தான் நீடிக்க போகிறேன் என்றால் ஐதராபாத்திற்கு வரலாம் என தெரிவித்திருக்கின்றனர். ஐதராபாத்தில் தற்போது தெலுங்கானா மாநில அரசு சார்பாக பல்வேறு நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி மேலும் பல நிறுவனங்களை கொண்டு வருவதற்கு தயாராகி வருகின்றனர் . உள்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என கூறும் ஒரு நபர் பெங்களூருவுடன் ஒப்பிடும்போது ஐதராபாத்தில் சிறந்த சாலை அமைப்பு இருக்கிறது என்கிறார்.
குறைந்த விலை: ஒரு அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும், நல்ல வாழ்க்கை தரம் வேண்டும் என எண்ணினால் பெங்களூருவை விட ஐதராபாத் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என ஒரு நபர் கூறியுள்ளார். பெங்களூருவை விட 20 லிருந்து 30 சதவீதம் குறைவான தொகைக்கு ஐதராபாத்தில் மெயின் ஏரியாவில் வீடு வாங்க முடியும் என ஒரு பயனர்தெரிவித்திருக்கிறார்.
சென்னை: சென்னையை பொறுத்தவரை ஐடி , ஸ்டார்ட் அப்கள், ஜிசிசி மையங்கள் ஆகியவை அதிகமாக தொடங்கப்பட்டு வருகின்றன என கூறும் ஒரு பயனர் இங்கே ஐடி, ஜிசிசி வளர்ச்சிக்கான எதிர்காலம் வலுவாக இருக்கிறது எனவே சென்னையில் வாங்கலாம் என கூறியுள்ளார். பெங்களூரு அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லை, ரியல் எஸ்டேட் மதிப்பு இல்லை என்றும் ஒரு பயனர் கூறியுள்ளார். இந்தியாவிலேயே2025ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் சென்னையில் தான் வீடுகளின் விற்பனை அதிகரித்திருக்கிறது என அனராக் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை குறிப்பிடுகிறது. சென்னையில் 5660 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன, முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 40 சதவீதம் அதிகம் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சென்னை வளர்ச்சி அடைந்து வரும் நகரமாக இருப்பதே இதற்கு உதாரணம் என ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications