அவசரத்திற்கு பணம் தேவைப்படும்போது உதவும் உற்ற தோழன் தோழனாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது. இதனால் வட்டியை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் வங்கிகள் வழங்கும் சலுகையை நம்பி சிலர் கிரெடிட் கார்டு பெறுகின்றனர். ஒவ்வொரு மாதமும் பில்லை சரியாகவும் செலுத்துகின்றனர். ஆனால் சில நேரங்களில் கட்ட வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் குறையாமல் அப்படியே இருக்கும். இதற்கு காரணம் என்ன தெரியுமா?
நீங்கள் செலுத்தும் மினிமம் டியூ. அதாவது குறைந்தபட்ச நிலுவையைத் தொகையை மட்டும் மாதா மாதம் செலுத்தி வந்தால் அதில் பெரும்பகுதி வட்டிக்கு சென்று விடும். மீதமுள்ள தொகை ஜிஎஸ்டி கட்டணங்களுக்கு சென்று விடும். இதனால் அசல் தொகையில் மிகக் குறைந்த தொகை தான் வரவு வைக்கப்படும். ஒருவர் தொடர்ந்து மினிமம் டியூவை மட்டும் செலுத்தி வந்தால் சுலபமாக அடைக்கப்படும் கடன் கூட பல ஆண்டுகள் நீடிக்கும் வாய்ப்புள்ளது.

கிரெடிட் கார்டு பில்லை நீங்கள் இரண்டு விதமாக செலுத்தலாம். ஒன்று மினிமம் டியூ. அதாவது நீங்கள் செலவு செய்ததில் குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்துதல். மற்றொன்று முழுமையான தொகையை செலுத்துதல். இதில் மாதா மாதம் மினிமம் டியூவை மட்டும் செலுத்தினால் தற்காலிகமாக அபராதக் கட்டணங்களில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் இதையே எப்போதும் செய்யக்கூடாது.
இப்படி செய்வதால் நீங்கள் தீராத கடன் சுமையில் சிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதை ஒரு சின்ன உதாரணத்தோடு பார்ப்போம். உங்களுக்கு ரூ.1 லட்சம் பேலன்ஸ் இருக்கிறது இதற்கு மாதாந்திர வட்டியாக வங்கி 3.75% வரை வசூலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த வட்டி மட்டுமே ஆண்டிற்கு 45 சதவீதம்.
பெரும்பாலான கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வருடத்திற்கு 30 முதல் 45 சதவீதம் வரையிலான வட்டியை வசூலிக்கின்றன. மினிமம் டியூவை செலுத்தி வந்தால் அதில் பெரும் பகுதி வட்டி தொகை மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றுக்கு சென்று விடும். மீதமிருக்கும் 2 சதவீத தொகை தான் அசலில் வரவு வைக்கப்படும். இதனால் ஒரு வருடத்திற்கு பிறகு என்ன நடக்கும் தெரியுமா?
12 மாதங்களுக்கும் மினிமம் டியூ மட்டும் செலுத்தி வந்தால் நீங்கள் மொத்தமாக செலுத்திய தொகை 69,160 ரூபாய் இருக்கும். இதில் 47,630 ரூபாய் வட்டி மற்றும் ஜிஎஸ்டி-க்கே சென்று விடும். அசலில் வெறும் ரூ. 21,530 மட்டுமே வரவு வைக்கப்பட்டிருக்கும். 1 வருடத்தில் நீங்கள் ரூ.69,000 பில் செலுத்தினாலும் மீதம் 78,470 ரூபாய் நிலுவையில் இருக்கும்.
இதனால் தான் SBI போன்ற கிரெடிட் கார்டு வழங்குனர்கள் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்தி வந்தால் கடனை அடைக்கும் காலம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எச்சரிக்கின்றன. இருந்தும் அவ்வப்போது ஏற்படும் கடன் சுமையிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க சிலர் இன்னும் இந்த வழியையே பயன்படுத்துகின்றனர்.
வட்டி இல்லா காலம்?: கிரெடிட் கார்டில் உள்ள மிகப்பெரிய நல்ல விஷயமும் இதுதான். ஆபத்தான விஷயமும் இதுதான். ஏனெனில் முந்தைய மாதத்து பில்லை சரியாக செலுத்தினால் மட்டுமே அடுத்தடுத்த முறை வட்டி இல்லா காலம் வழங்கப்படும் .நீங்கள் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்தி வந்தால் இந்த சலுகை கிடைக்காது. இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி கடன் தொகையை முழுமையாக செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு புதிதாக ஷாப்பிங் செய்யும் அடுத்த நாளிலிருந்து வட்டி கணக்கிடபடத் தொடங்கிவிடும்.
உதாரணத்துக்கு நீங்கள் பழைய பாக்கி வைத்திருக்கிறீர்கள். புதிதாக கார்டைப் பயன்படுத்தி செலவு செய்கிறீர்கள் 3.75% வட்டி சேர்க்கப்படும். இதில் 750 ரூபாய் ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும். எனவே மினிமம் டியூவை அவசரக் காலங்களில் மட்டும் செலுத்துங்கள். பிரச்சனை இல்லை.. அதிலும் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு இந்த ஆப்ஷனை பயன்படுத்தலாம். ஆனால் அதையே வாடிக்கையாக மாற்றி மாதா மாதம் செலுத்தக் கூடாது.
கிரெடிட் கார்டு கடனில் நீங்கள் சிக்கி இருந்தால் இதைவிட குறைந்த வட்டி விகிதம் வசூலிக்கப்படும் பர்சனல் லோனுக்கு மாறலாம். பர்சனல் லோனுக்கு 16 சதவீதம் வரையிலான வட்டி வசூலிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
