வங்கியில் பணம் எடுப்பது, கிரெடிட் கார்டு வாங்குவது, ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்துவது, வீட்டுக் கடன் பெறுவது என மக்கள் ஏதேனும் ஒரு விஷயத்திற்காக வங்கிச் சேவைகளை தினமும் ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வருகிறார்கள்.
வங்கிகள் நம்முடைய கணக்கில் போதுமான பேலென்ஸ் வைக்காத போது, கடனை உரிய காலத்திற்குள் செலுத்தாவிட்டாலோ அபராதம் விதிப்பது போல், வங்கிகள் செய்யும் தவறுக்காக வங்கிகள் மக்களுக்கு இழப்பீடு கொடுப்பது எத்தனை பேருக்கு தெரியும்.

அதாவது வங்கிகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சேவைகளை வழங்கத் தவறினாலோ அல்லது ஆர்பிஐ விதிகளை மதிக்காவிட்டாலோ, வங்கி வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்.
உதாரணமாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யும் போது தோல்வி அடைந்தாலோ, கிரெடிட் கார்டு கணக்கை மூடுவதில் தாமதம் செய்வது, ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகு சொத்து ஆவணங்களை கொடுப்பதில் தாமதம் செய்வது, கிரெடிட் ஸ்கோர் அறிக்கையில் உள்ள பிழைகளைச் சரிசெய்வதில் வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்த பின்பும் தாமதப்படுத்துவது போன்ற சேவைகளுக்கு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்கும் விதிமுறைகள் உள்ளன.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள்:
ஏடிஎம், யூபிஐ, டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது டிரான்ஸ்சாக்ஷன் தோல்வி அடைந்த பின்பும் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டால் அதை வங்கி நிர்வாகம் உடனடியாக சரி செய்து பணத்தை திரும்ப செலுத்திவிட வேண்டும். அப்படி பணத்தை திரும்பி செலுத்த முடியாமல் போனால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்பு ஆர்பிஐ விதிகளின்படி ஒரு நாளுக்கு 100 ரூபாய் இழப்பீடு வங்கிகள் அளிக்கும்.
கிரெடிட் கார்டை மூடுவதில் தாமதம்:
ஒரு வங்கி வாடிக்கையாளர் தன்னுடைய கிரெடிட் கார்ட்டை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தால், அதை 7 வேலை நாட்களுக்குள் கிரெடிட் கார்டு கணக்கை மூட வேண்டும். இப்படி செய்யாவிட்டால் கணக்கு மூடப்படும் வரை தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 500 ரூபாய் இழப்பீட்டை வங்கி வழங்க வேண்டும்.
சொத்து ஆவணங்கள்:
உதாரணமாக வீட்டு கடனை முழுமையாகச் செலுத்திய பிறகு, அந்த வாடிக்கையாளருக்கு வங்கி நிர்வாகம் 30 நாட்களுக்குள் அசல் சொத்து ஆவணங்களை வங்கி திருப்பித் தர வேண்டும். அப்படி வழங்காவிட்டால் வங்கி ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் 5000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
வங்கி லாக்கர்:
எந்தொரு வங்கியாக இருந்தாலும் சரி, வங்கி லாக்கரில் இருக்கும் பொருட்களுக்கு வங்கி நிர்வாகம் தான் பொறுப்பு. அப்படி வங்கி லாக்கரில் இருக்கும் பொருட்கள் தொலைந்து போனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ ரிசர்வ் வங்கியின் விதிமுறையின் படி, லாக்கருக்குச் செலுத்தும் வருடாந்திர வாடகை தொகையை விடவும் 100 மடங்கு வரை இழப்பீடு வழங்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த தொகை வங்கி சேதத்தின் அளவு பொருத்து முடிவு செய்யப்படும். உதாரணமாக, வருடத்திற்கு 3000 ரூபாயை லாக்கர் வாடகை தொகையாக செலுத்தினால், அதிகபட்ச இழப்பீடாக 3 லட்சம் வரையில் இழப்பீடு பெறலாம்.


Click it and Unblock the Notifications