சென்னை: தற்போது இந்திய மக்களிடையே பணத்தை சேமித்து வைக்க வேண்டும் அல்லது முதலீடு செய்து வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெருமளவில் அதிகரித்துள்ளது. இவ்வாறு முதலீடு செய்யும் போது பெரும்பாலானவர்கள் உற்று நோக்குவது முதலுக்கு மோசம் போகாத ஒரு முதலீட்டு திட்டமாக இருக்க வேண்டும் ,குறிப்பாக அரசு வழங்கக்கூடிய திட்டமாக இருந்தால் தைரியமாக முதலீடு செய்யலாம் என்று தான் எண்ணுகின்றனர். அதிலும் மூத்த குடிமக்கள் பெரிய ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள்.
அந்த வகையில் நமது மத்திய அரசு தபால் நிலையங்கள் வழியாக வழங்கக்கூடிய ஒரு சிறப்பான சேமிப்பு திட்டமே மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். சௌகரியமான ஒரு ஓய்வு கால வாழ்க்கை வாழ வேண்டும் மற்றும் நிதி ரீதியான நிம்மதியை பெற வேண்டும் என விரும்புபவர்களுக்கு ஏற்ற திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். மூத்த குடிமக்களுக்காகவே பிரத்யேகமாக மத்திய அரசு வழங்கும் ஒரு சேமிப்பு திட்டம் இது .

இந்த திட்டத்தில் ஓர் ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வருமானம் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். 60 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து மாதம் தோறும் 20,000 ரூபாயை வட்டி வருமானமாக பெறுவது எப்படி என்பது குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை பொருத்தவரை 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு தனிநபர் 30 லட்சம் ரூபாய் வரை அதிகபட்சமாக முதலீடு செய்ய முடியும். இவ்வாறு அதிகபட்ச தொகையான 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 2 ,46, 000 ரூபாய் வட்டியாக கிடைக்கிறது. இந்த வட்டியை மாதாந்திர அடிப்படையில் நாம் பிரிக்கும் போது மாதத்திற்கு 20,500 ரூபாய் வட்டி தொகையாக கைகளுக்கு கிடைக்கும்.
மாதந்தோறும் நமது செலவுகளுக்கு பயன்படக்கூடிய ஒரு தொகையாக இருக்கும், மேலும் நமது முதலீடும் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறது என்கிற நிம்மதி நமக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் கிடைக்கும் வருமானம் வரிக்கு உட்பட்டது என்பதால் வரி அடிப்படையில் இந்த முதலீட்டு முடிவினை எடுப்பது சிறந்ததாகும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 முதல் அதிகபட்சம் 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 5 ஆண்டுகள் முதிர்வு காலத்தின் போது விண்ணப்பம் செய்தால் கூடுதலாக 3 ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டிக்க முடியும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications