சென்னை: பங்குச் சந்தையில் நீண்டகால முதலீடு செய்து முழுமையான லாபம் ஈட்ட முடியாது என்பதற்கு பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் பொறுமையின்மையே காரணம் என DSP மியூச்சுவல் ஃபண்ட் CEO கல்பேன் பாரேக் தெரிவித்துள்ளார். இத்துறையில் சுமார் 29 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கல்பேன் பாரேக் , 1998 முதல் இந்திய முதலீட்டாளர்களின் பழக்கவழக்கங்களை மிகவும் நெருக்கமாக கவனித்து வருகிறார்.
DSP-யின் மிகப் பழைய மியூச்சுவல் ஃபண்டில் சுமார் 6 லட்சம் இந்தியர்கள் முதலீடு செய்துள்ளனர். அந்த ஃபண்ட் 30 ஆண்டுகளில் 122 மடங்கு வருமானம் கொடுத்துள்ளது.

ஆனால், இந்த பண்டில் முழு காலமும் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை வெறும் 23 பேர் மட்டுமே. மற்ற அனைவரும் முன்கூட்டியே தங்களுடைய பண்டுகளை விற்பனை செய்துவிட்டு வெளியேறினர் என கல்பேன் பாரேக் கூறுகிறார். மேலும் இது இந்திய முதலீட்டாளர்களிடையே தொடர்ந்து நடைபெறும் பொதுவான பிரச்சனையை எடுத்துக்காட்டுகிறது.
திரும்பும் அதே தவறு
2008 உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, உச்சகட்டத்தில் இருந்த இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்டுகளில் மக்கள் பெரும் தொகையை முதலீடு செய்தனர். அந்த ஃபண்டுகள் 18 ஆண்டுகளில் சேமிப்பு கணக்கு வட்டியை விட குறைவான வருமானமே கொடுத்தன.
ஆனால், அடுத்த 9 மாதங்கள் கழித்து சந்தை வீழ்ச்சியடைந்தபோது முதலீடு செய்தவர்கள் 17 சதவீத CAGR வருமானம் ஈட்டினர்.
தற்போது இதேபோன்ற நிலை தான் AI பங்குகளுக்கும் உருவாகியுள்ளது. ஏஐ பங்குகளை சார்ந்து அனைவரும் முதலீடு செய்வதை பார்க்கும் போது 2008-ஐ போலவே உள்ளது என கல்பேன் பாரேக் எச்சரிக்கிறார்.
சந்தை உச்சத்தில் இருக்கும் போது மக்கள் அவசரப்பட்டு முதலீடு செய்வதும், வீழ்ச்சியில் பயந்து வெளியேறுவதுமே முக்கிய பிரச்சனை என கல்பேன் பாரேக் கூறுகிறார்.
பங்குச்சந்தை முதலீட்டில் எப்போதும் ஃபண்டின் செயல்திறன் அல்ல, முதலீட்டாளரின் பொறுமையே முக்கியம் என்பதை வலியுறுத்தினார். சந்தை ஏற்ற இறக்கங்களை பொறுத்துக்கொண்டு நீண்டகாலம் தங்கியிருப்பவர்களுக்கு மட்டுமே உண்மையான லாபம் கிடைக்கும் என 1% கிளப் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசும் போதும் கூறியுள்ளார் கல்பேன் பாரேக்.


Click it and Unblock the Notifications