சென்னை: காலகாலமாக நம் நாட்டில் உள்ளவர்களுக்கு முதன்மையான முதலீட்டு திட்டமாக இருப்பது ஃபிக்ஸட் டெபாசிட் என்று சொல்லப்படுகிற நிலையான வைப்புத் தொகை தான். FD-கள் சிறந்த வட்டி விகிதங்களை வழங்கினாலும், போஸ்ட் ஆபீஸ்களில் பிற சிறந்த திட்டங்கள் உள்ளன. பெரும்பாலான நேரங்களில் அவற்றை நாம் கண்டு கொள்வதில்லை. மேலும் இந்தத் திட்டங்கள் FD வட்டி விகிதங்களைப் போல அதிகமான வட்டியையும் வழங்குகிறது. எனவே இந்தப் பதிவில் ஃபிக்ஸட் டெபாசிட்களைப் போல சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் பிற திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம் (National Savings Time Deposit Scheme) : தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டத்தில் நீண்ட முதிர்வு காலத்துடன் செய்யப்படும் முதலீட்டுக்கு, அதிக வட்டி வழங்கப்படுகிறது. 1 வருட டெபாசிட்களுக்கான திட்டத்தில் ஆண்டுக்கு 6.9 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட முதலீடுகளுக்கு வட்டி விகிதமாக ஆண்டுக்கு 7.0 சதவீதம் மற்றும் 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும் 5 ஆண்டுகள் இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் முதலீடாக ரூ. 1000 முதல் நீங்கள் முதலீடு செய்ய முடியும். அதே போல உங்களுடைய முதலீடு 100-இன் மடங்குகளில் இருக்க வேண்டும். 5 ஆண்டு முதிர்வு காலத்துடன், இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்யும்போது, வருமான வரி விலக்கு கிடைக்கும்.

தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு (National Savings Recurring Deposit Account - RD): இந்திய அரசாங்கத்தால் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் ஒரு முக்கிய சேமிப்பு திட்டம் தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு (RD) ஆகும். பொதுவாக 5 ஆண்டுகள், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த வகையான சேமிப்பு ஒவ்வொரு 33 மாதங்களுக்கும் கூட்டு வட்டியையும் மற்றும் உத்தரவாதமான வருமானத்தையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதம் ஆண்டுதோறும் 6.7 சதவீதமாக உள்ளது.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate): தேசிய சேமிப்புச் சான்றிதழ்களில் குறைந்தபட்ச முதலீடாக ரூ. 1000 முதல், நீங்கள் முதலீடு செய்யலாம். தேவைப்பட்டால் 100-இன் மடங்குகளில் கூடுதல் முதலீடு செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது. டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச தொகை, இந்தத் திட்டத்திற்கு வரையறுக்கப்படவில்லை. இந்தத் திட்டத்தில் வருமானவரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்குகள் வழங்கப்படுகின்றன. டெபாசிட்டுக்கு முதலீடு தேதியிலிருந்து 5 வருட லாக்கின் காலம் உண்டு. தேசிய சேமிப்பு சான்றிதழின் வருடாந்திர கூட்டு வட்டி விகிதம் தற்போது 7.7 சதவீதமாக உள்ளது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY): செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று சொல்லப்படுகிற சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம், 2015-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பெற்றோர்கள் சேமிக்க முடியும். இந்த திட்டம் டெபாசிட்களுக்கு 8.2% வட்டியை வழங்குகிறது. மேலும் இந்தத் திட்டத்திற்கான லாக்கின் காலம் 21 ஆண்டுகள். குறைந்தபட்ச வருடாந்திர முதலீடாக ரூ. 250 முதல் நீங்கள் முதலீடு செய்யலாம். அதே போல 1 ஆண்டுக்கு அதிகபட்ச முதலீடாக ரூ.1.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications