இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) அமைப்பில் உள்ள ஊழியர்களுக்கு, இலவசமாக காப்பீடு ஒன்றை வழங்குகிறது. ஆனால் இது பற்றி பெரும்பாலான பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தெரிவதில்லை. இந்த காப்பீடு எப்படி செயல்படுகிறது, எத்தனை லட்சம் காப்பீடாக கிடைக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
பிஎஃப் அமைப்பு இடிஎல்ஐ (EDLI) திட்டத்தின் கீழ் இலவச ஆயுள் காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது. ஊழியர்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு காப்பீட்டு திட்டமாகும். துரதிர்ஷ்டவசமாக ஒரு ஊழியர் பணியில் இருக்கும்போது மரணமடைந்தால், அவரது வாரிசுதாரர்களுக்கு அல்லது நாமினிக்கு இந்த காப்பீட்டு தொகை வழங்கப்படும். இதற்கு ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் எந்த பிரீமியமும் செலுத்த வேண்டியதில்லை. இந்த ஆயுள் காப்பீடு திட்டம் குறித்து சாமானிய மக்களும் தெரிந்து வைத்து கொள்வது நல்லது.

இடிஎல்ஐ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு தொகை, ஊழியரின் கடைசி 12 மாத கால சம்பளத்தை (அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி) அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. அதாவது ஊழியர் மரணமடைவதற்கு முந்தைய 12 மாத கால அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் சராசரி கணக்கிடப்படும். தற்போது 15,000 ரூபாய் மட்டுமே அதிகபட்ச சம்பளமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.
இதனை 30-ஆல் பெருக்க வேண்டும். இதனுடன், கடந்த 12 மாதங்களில் ஊழியரின் PF கணக்கில் இருந்த சராசரி இருப்பில் 50% தொகையும் (அதிகபட்சம் 1.75 லட்சம் வரை) சேர்க்கப்படும். இப்படி கணக்கிட்டு அந்த ஊழியரின் வாரிசுதாரருக்கு அதிகபட்சமாக 7 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதற்கு அந்த ஊழியர் மரணமடைவதற்கு முந்தைய 12 மாத காலத்தில், எதேனும் ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்திருக்க வேண்டும். ஊழியர் தனது பிஎஃப் கணக்கில் முறையாக நாமினியை பதிவு செய்திருப்பது கட்டாயமாகும்.
இந்த காப்பீட்டு தொகைக்கும் ஊழியர் தனது பிஎஃப் கணக்கில் வைத்துள்ள தொகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது கூடுதலாக வழங்கப்படும் ஒரு பலனாகும். இதற்கு எந்த பிரீமியமும் செலுத்த வேண்டியதில்லை. அரசு அவ்வப்போது இத்திட்டத்தின் விதிகளில் மாற்றங்களை கொண்டு வருகிறது, தற்போதைய நிலவரப்படி 7 லட்சம் ரூபாய் என்பதே அதிகபட்ச காப்பீடு தொகையாகும்.
எதிர்பாராத வகையில் ஒரு ஊழியர் மரணமடைந்துவிட்டால் அவாது வாரிசுதாரர்கள், Form 5IF-ஐ பூர்த்தி செய்து, இறப்பு சான்றிதழ் மற்றும் இதர தேவையான ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட பிஎஃப் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது ஆன்லைன் மூலமாகவும் இந்த கோரிக்கையை சமர்ப்பிக்க முடியும்.
இதனை அடுத்து பிஎஃப் அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து காப்பீட்டு தொகையை விடுவிப்பார்கள். பெரும்பாலான மக்களுக்கு இந்த விழிப்புணர்வு இல்லாததால் இந்த காப்பீட்டு தொகையை கிளைம் செய்யாமலேயே விட்டுவிடுகிறார்கள். எனவே ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் பிஎஃப் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், பிஎஃப் கணக்கில் அனைத்து தகவல்களையும் அப்டேட் செய்ய வேண்டும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

