இந்தியாவில் கூடிய விரைவில் EPFO 3.0 திட்டத்தின் மூலம் பிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை நாம் யுபிஐ, ஏடிஎம் மூலம் எளிதாக எடுத்து பயன்படுத்தும் வசதி நடைமுறைக்கு வர இருக்கிறது. இது நடைமுறைக்கு வந்துவிட்டால் அவசர தேவைக்கு நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நொடி பொழுதில் எடுத்து பயன்படுத்த முடியும்.
பிஎஃப் கணக்கில் பணம் சேமிப்பதே ஓய்வுகால தேவைக்காக தான். ஆனால் அந்த பணத்தை முன் கூட்டியே எடுப்பதால் ஓய்வு காலத்தில் நமக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்பதை பெரும்பாலானவர்கள் கணக்கிடுவதில்லை. 28 வயதில் இருக்கும் ஒரு நபர் தன் PF கணக்கிலிருந்து ரூ. 1 லட்சம் எடுப்பது, அவரது ஓய்வுக்காலத்தில் அவருக்கு 11.78 லட்சம் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். இதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம் கூட்டு வட்டி (Compounding Effect) எனும் மாயாஜாலம்.

PF என்பது நீண்ட கால முதலீடு. நீங்கள் 28 வயதில் இந்த பணத்தை எடுக்கும்போது, உங்கள் ஓய்வு வயது வரை (பொதுவாக 58 வயது வரை) சுமார் 30 ஆண்டுகள் அந்தப் பணம் உங்கள் கணக்கில் காம்பவுண்டிங் முறையில் வளர்வதற்கான வாய்ப்பினை நீங்கள் தட்டி பறிக்கிறீர்கள். அதாவது அந்த 1 லட்சம் ரூபாய் 30 ஆண்டுகளில் கூட்டு வட்டியில் வளர்ந்து உங்களுக்கு பல லட்சமாக கிடைத்திருக்கும்.
PF கணக்கில் இருக்கும் பணத்திற்கு அரசு 8.25% வட்டி வழங்குகிறது. 30 ஆண்டுகளுக்கு ஒரு சிறிய தொகையை நீங்கள் அப்படியே விட்டிருந்தால், அந்தப் பணம் வட்டியுடன் சேர்ந்து பலமடங்கு பெருகும். உதாரணமான நீங்கள் இன்று எடுக்கும் ரூ. 1 லட்சம், அடுத்த 30 ஆண்டுகளுக்கு அந்த வட்டி விகிதத்தில் வளர்ந்திருந்தால், அது சுமார் ரூ. 12 லட்சம் வரை உயர்ந்திருக்கும்.
ஆனால் இப்போதே பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நீங்கள் எடுக்கும்போது, அதன் அசல் தொகை மட்டுமின்றி, அந்த பணம் ஈட்ட வேண்டிய கூட்டு வட்டியையும் சேர்த்து இழக்கிறீர்கள். எனவே பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு முன்பு பல முறை யோசிக்க வேண்டும்.
பிஎஃப் என்பது உங்கள் ஓய்வுகால நிதி பாதுகாப்பு. மருத்துவ அவசரம் அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைத் தவிர, மற்ற சாதாரண தேவைகளுக்கு அதாவது பயணம், திருமணம், ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதற்கு போன்றவற்றுக்கு இதிலிருந்து பணம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பலர் வேலை மாறும்போது EPF கணக்கை முடித்து பணத்தை எடுத்துவிடுகிறார்கள். இது மிகப் பெரிய தவறு. அதற்குப் பதிலாக, உங்கள் PF கணக்கை புதிய நிறுவனத்திற்கு Transfer செய்து கொள்ளுங்கள். இது உங்கள் முதலீட்டுத் தொடர்ச்சியைப் பாதிக்காது. ஒரு முதலீட்டை நீங்கள் எவ்வளவு காலம் பணத்தை எடுக்காமல் வைத்திருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் பணம் வளரும். 28 வயதில் எடுக்கும் ஒரு சிறிய தொகை, ஓய்வுக்காலத்தில் உங்கள் நிதி சுதந்திரத்தை பெரிதும் பாதிக்கும்.


Click it and Unblock the Notifications

