தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் ஓய்வு கால நிதி பாதுகாப்பை உறுதி செய்ய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு மேலாண்மை செய்யப்படுகிறது. பிஎஃப் கணக்கில் இருக்கும் பணம் நம் ஓய்வுகாலத்திற்கு தான் என்றாலும் இடையில் சில அவசர தேவைகளுக்கு பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.
குறிப்பாக திருமணம், கல்வி செலவு வீடு கட்டுவது , மருத்துவ செலவு போன்றவற்றுக்கு பிஎஃப் பணத்தை எடுத்து பயன்படுத்தலாம். முன்பெல்லாம் பிஎஃப் பணத்தை எடுப்பது பெரிய பிராசஸ். ஆனால் இப்போது அப்படி இல்லை. பிஎஃப் பணம் எடுப்பது எளிமையானதாக மாறிவிட்டது. விரைவில் ஈபிஎஃப்ஓ 3.0 திட்டம் வர உள்ளது. இது வந்துவிட்டால் பிஎஃப் பணத்தை யூபிஐ மற்றும் ஏடிஎம் மூலமே எடுத்து பயன்படுத்தலாம். தற்போது வீடு வாங்குவது, கட்டுவது மற்றும் சீரமைப்பது போன்ற வேலைகளுக்கு பிஎஃப் பணம் கிடைக்குமா என தெரிந்து கொள்ளலாம்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு விதிகளின்படி, உறுப்பினர்கள் வீடு வாங்குவது, கட்டுவது, மனை வாங்குவது, வீட்டு கடன் செலுத்துவது அல்லது பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றுக்கு தங்களது பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் பெற்று கொள்ள முடியும்.
இந்த வசதியை பெற, ஒரு பிஎஃப் உறுப்பினர் குறைந்தபட்சம் 12 மாதங்கள் தொடர்ச்சியாக ஈபிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். புதிய விதிகளின்படி, தகுதியான இபிஎஃப் உறுப்பினர்கள் தங்களது கணக்கில் உள்ள மொத்த தொகையில் 75% வரை முன்பணமாக பெற்று கொள்ளலாம்.
உதாரணமாக பிஎஃப் கணக்கில் 5 லட்சம் ரூபாய் இருந்தால் அதில் 75% அதாவது 3.75 லட்சம் ரூபாயை முன்பணமாக பெற முடியும். அதே சமயம் மீதமுள்ள 25% தொகை அதாவது 1.25 லட்சம் ரூபாய் பிஎஃப் கணக்கிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதனை ஓய்வு காலத்தில் தான் எடுக்க முடியும்.
வீட்டுத் தேவைகளுக்காக வழங்கப்படும் இந்த முன்பண வசதியை ஒரு உறுப்பினர் தனது முழு சேவைக்காலத்தில் அதிகபட்சமாக 5 முறை மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே, இதற்கு முன்பு இந்த வசதியை பயன்படுத்தியவர்கள் மீதமுள்ள எண்ணிக்கையை கருத்தில் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த முன்பணத்தை வீடு, பிளாட் அல்லது மனை வாங்குதல், புதிய வீடு கட்டுதல், ஏற்கனவே வாங்கிய வீட்டுக்கான வீட்டுக் கடனைத் திருப்பி செலுத்துதல் , வீடு அல்லது பிளாட்டை சீரமைத்தல், புதுப்பித்தல் அல்லது மேம்படுத்துதல் ஆகிய தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.
வீட்டுவசதி தவிர மற்ற அவசர தேவைகளுக்கும் பிஎஃப் பணத்தை எடுக்கலாம். தங்களுக்கு அல்லது குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ செலவுகளுக்காக கணக்கில் உள்ள பணத்தை பெற்றுக் கொள்ளலாம். தங்களது அல்லது குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு இணங்க மொத்த பணத்தையும் பெறலாம். சுய திருமணம் அல்லது குடும்ப உறுப்பினர்களின் திருமணத்திற்கு பணம் பெறலாம். காரணங்களை குறிப்பிடாமலேயே ஒரு நிதியாண்டில் 2 முறை இந்த முன்பணத்தை பெறலாம்.


Click it and Unblock the Notifications


