இந்தியாவில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO -இல் உள்ள லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் EPFO 3.0 திட்டம் எப்போது முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். EPFO 3.0 திட்டத்திற்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது.
நம் நாட்டில் பல ஆண்டுகளாகவே பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுப்பது என்பது பல்வேறு ஆவண பணிகள் மற்றும் அலைச்சல்களை கொண்டதாகவே இருக்கிறது. நவீன தொழில்நுட்பங்களின் வருகைக்கு ஏற்ப இவை மாறி இருந்தாலும் இன்னமும் விண்ணப்பம் செய்து விட்டு பல நாட்கள் காத்திருக்கும் நிலை தான் இருக்கிறது. இதனை மாற்றும் வகையில் EPFO 3.0 அப்டேட் மூலம் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகள் மூலமாகவே தங்களது பிஎஃப் தொகையை நேரடியாக பெற்று கொள்ளும் வசதி வர உள்ளது.

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உடன் இணைந்து பிஎஃப் அமைப்பு இந்த வசதியை உருவாக்கியுள்ளது. மேலும் வங்கி கணக்கை போலவே, பிஎஃப் கணக்கிற்க்கும் பிரத்யேக ஏடிஎம் கார்டுகள் அல்லது யுபிஐ க்யூஆர் கோடு அடிப்படையிலான ஏடிஎம் பணப் பரிமாற்றம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எனவே இணைய வசதி இல்லாத இடங்களில் கூட ஏடிஎம் மூலம் நேரடியாக பிஎஃப் பணத்தை எடுக்க இது உதவும்.
இந்த திட்டம் மூலம் பிஎஃப் கணக்கில் உள்ள மொத்த தொகையில் 75% வரை உடனடி பணமாக எடுக்கலாம். இதில் ஏடிஎம் மூலமாக 50% வரை பணம் பெற அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. EPFO 3.0-ல் பெரும்பாலான கிளைம்களுக்கு நிறுவனத்தின் ஒப்புதல் தேவையில்லை என்ற மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஊழியர்களே நேரடியாக பணத்தை பெறலாம்.
அதாவது நம் வங்கி கணக்கை எப்படி டிஜிட்டல் முறையில் பயன்படுத்துகிறோமோ அதே போல பிஎஃப் கணக்கும் மாறுகிறது. இதற்காக அமைப்பு ரீதியாகவே மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தீபாவளி பரிசாக இதனை செயல்படுத்த பிஎஃப் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
EPFO 3.0 -இல் உங்கள் பிஎஃப் பணத்தை யுபிஐ , ஏடிஎம் மூலம் எடுக்க முதலில் யுஏஎன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும், மேலும் ஓடிபி பெற ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கையில் வைத்திருக்க வேண்டும். பிஎஃப் பதிவுகளில் சரியான வங்கி கணக்கு எண் மற்றும் ஐஎப்எஸ்சி குறியீடு இருக்க வேண்டும்.
உங்களின் தகவல்கள் அப்டேட்டாக இருக்கிறது என்றால் இந்த வசதி நடைமுறைக்கு வருவதில் இருந்து எளிதாக நீங்கள் பிஎஃப் பணத்தை கையாள முடியும். தீபாவளி பரிசாக வரவிருக்கும் இந்த EPFO 3.0 திட்டம், ஊழியர்கள் தங்களின் பிஎஃப் பணத்தை எந்தவித அலைச்சலும் இல்லாமல், அவசர காலங்களில் ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலமாக நொடிப்பொழுதில் கையில் பெற வழிவகுக்கும்.


Click it and Unblock the Notifications


