இந்தியாவில் கோடிக்கணக்கான தனியார் நிறுவன ஊழியர்களின் ஓய்வுகால நிதி பாதுகாப்பிற்காக EPFO திட்டம் மூலம் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு மாதம் தோறும் பணம் வரவு வைக்கப்படுகிறது. பணி ஓய்வு பெறும் போது பிஎஃப் கணக்கில் இருந்து மொத்த தொகை கிடைக்கிறது. இதனால் இந்தியாவின் மிகச்சிறந்த ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக பிஎஃப் திட்டம் பார்க்கப்படுகிறது.
பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை டிஜிட்டல் முறையில் மேலாண்மை செய்வதை மேம்படுத்தும் வகையில் ஈபிஎஃப்ஓ 3.0 திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது. இது நடைமுறைக்கு வரும் போது பிஎஃப் பணத்தை எளிமையாக ஏடிஎம் மற்றும் யுபிஐ வழியே எடுத்து பயன்படுத்தலாம். அதாவது பிஎஃப் பணத்தை எடுக்க நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

யுபிஐ செயலிகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாகவே பிஎஃப் பணத்தை உடனுக்குடன் எடுக்கும் வசதி வரவுள்ளது. இது தேசிய பணப் பரிவர்த்தனை கழகத்துடன் (NPCI) இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டங்கள் முடிந்து பிஎஃப் அமைப்பின் கணினிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அப்டேட் செய்யும் பணிகள் நடக்கின்றன.
பிஎஃப் பணத்தை யுபிஐ, ஏடிஎம் மூலம் எடுப்பதற்கான விதிகளில் இதுவரை பெரிய மாற்றங்கள் அறிவிக்கப்படவில்லை. தற்போதுள்ள விதிகளின்படி, உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள தொகையில் சுமார் 75% வரை எடுப்பதற்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஃப் சேமிப்பே ஓய்வுக்காலத்திற்கானது என்பதால் உங்கள் கணக்கில் குறைந்தது 25% தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட உள்ளது.
பிஎஃப் பணத்தை ஏடிஎம்மில் எடுப்பது தொடர்பான அறிவிப்பு ஜூலை முதல் வாரமே வரும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை வழங்க பிஎஃப் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை வழக்கமான டெபிட் கார்டுகளைப் போலப் பயன்படுத்த முடியுமாம்.
பணம் எடுப்பதற்கு ஆதார் அடிப்படையிலான ஓடிபி சரிபார்ப்பு முறை பயன்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது. பணத்தை எடுக்கும்போது அது நேரடியாக உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிடும். பின்னர் பிரத்தியேக ஏடிஎம் கார்டு மூலம் அதனை எடுத்து கொள்ள வசதி செய்து தரப்படுமாம்.
இந்த சேவையை பெறுவதற்கு உங்கள் UAN எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும், பான் விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும், மற்றும் சரியான IFSC குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த வசதிகள் இன்னும் அமலுக்கு வரவில்லை. இப்போதைக்கு பிஎஃப் பணம் எடுப்பதற்கான பழைய விதிகளே நடைமுறையில் உள்ளன. பிஎஃப் அமைப்பு விரைவில் இது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடைமுறைக்கு வந்துவிட்டால் பிஎஃப் பணத்தை நொடிபொழுதில் நம் தேவைக்கு ஏற்ப எடுத்து பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications

