பிஎஃப் (PF) பணத்தை எடுப்பது என்றாலே ஒரு காலத்தில் அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடக்க வேண்டும், வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் அந்த கதையெல்லாம் இனி பழையது. மத்திய அரசின் டிஜிட்டல் புரட்சியால், EPFO 3.0 இப்போது புதிய அவதாரம் எடுத்துள்ளது.
பிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட்டாக, இனி 5 லட்சம் ரூபாய் வரையிலான கிளைம்கள் எந்தவித மனித தலையீடும் இன்றி, தானாகவே செட்டில் செய்யப்பட உள்ளன. இது கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு, இந்த ஆட்டோ-செட்டில்மென்ட் முறை உண்மையில் ஒரு வரப்பிரசாதம் தான்.

மருத்துவ அவசரம், கல்வி அல்லது திருமணச் செலவு என எதுவாக இருந்தாலும், இனி உங்கள் பிஎஃப் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு விரைவில் வந்து சேரும். EPFO 3.0 கொண்டு வந்துள்ள அந்த அதிரடியான 5 முக்கிய நன்மைகள் என்னென்ன? வாருங்கள் விரிவாக தெரிந்து கொள்வோம்.
பிஎஃப் சந்தாதாரர்களின் நீண்டகால புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு EPFO 3.0 என்ற பிரம்மாண்ட டிஜிட்டல் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே விரிவாக விளக்கமளித்துள்ளார்.
EPFO 3.0 என்பது வெறும் தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல, இது பிஎஃப் சேவைகளை பேப்பர் லெஸ் மற்றும் அதிவேகமாக மாற்றும் ஒரு திட்டமாகும். மேலும் இனி ஊழியர்கள் தங்கள் பிஎஃப் மற்றும் பென்ஷன் கணக்குகளை ஒரே தளத்தில் எளிதாக நிர்வகிக்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக பிஎஃப் பணத்தை மாற்றவோ அல்லது எடுக்கவோ இனி பழைய நிறுவனங்களின் கையெழுத்துக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
EPFO 3.0 - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்:
1. ரூ.5 லட்சம் வரை தானியங்கி தீர்வு: இதுதான் பிஎஃப் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாற்றம். முன்பு 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே இருந்த ஆட்டோ-செட்டில்மென்ட் வரம்பு, இப்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ அவசரம், கல்வி அல்லது திருமணத்திற்காக நீங்கள் கோரும் பணம், எந்த அதிகாரியின் தலையீடும் இன்றி தானாகவே செட்டில் செய்யப்படும்.
2. பிஎஃப் டிரான்ஸ்பர் ஆட்டோமேட்டிக்: நீங்கள் வேலை மாறும்போது, பழைய பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை, புதிய கணக்கிற்கு மாற்ற இனி விண்ணப்பிக்க தேவையில்லை. ஆட்டோ டிரான்ஸ்பர் முறை மூலம் உங்கள் பணம் தானாகவே புதிய கணக்கிற்கு மாறிவிடும். 2026 பிப்ரவரி வரை மட்டும் சுமார் 70.5 லட்சம் கணக்குகள் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது.
3. மையப்படுத்தப்பட்ட பென்ஷன் முறை (CPPS): ஜனவரி 2025 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள Centralised Pension Payment System மூலம், சுமார் 70 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இந்தியாவின் எந்த ஒரு வங்கி கிளையிலிருந்தும் தங்களின் பென்ஷனை எவ்வித தாமதமும் இன்றி பெற முடியும்.
4. பிஎஃப் வித்டிராயல் கார்டு மற்றும் UPI வசதி; விரைவில் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட ஏடிஎம் கார்டுகள் அல்லது UPI மூலம், உங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை அவசரத் தேவைக்கு நேரடியாக எடுத்துக் கொள்ளும் வசதி வரவுள்ளது. இதற்கான சாப்ட்வேர் சோதனைகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன.
5. ஆன்லைனில் நீங்களே திருத்தம் செய்யலாம்: உங்களுடைய பெயர், பிறந்த தேதி அல்லது திருமண நிலை போன்ற விவரங்களில் தவறு இருந்தால், நிறுவனத்தின் ஒப்புதல் இன்றி ஊழியர்களே நேரடியாக ஆன்லைன் மூலம் (OTP Verification) திருத்தம் செய்து கொள்ளலாம். கடந்த ஓராண்டில் மட்டும் 32 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வசதியை பயன்படுத்தி உள்ளனர்.
குறைந்த ஆவணங்கள், அதிவேகத் தீர்வுகள் என்பதே EPFO 3.0-ன் முக்கிய அம்சமாக உள்ளது. 2026-ம் ஆண்டின் பாதியில் இது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் போது, பிஎஃப் அலுவலகங்களுக்கு செல்லும் தேவையே இருக்காது.


Click it and Unblock the Notifications