சென்னை: தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ(EPFO) குறிப்பிட்ட சில பிரிவை சேர்ந்த ஊழியர்கள் தங்களுடைய ஆதாரை, யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் எனப்படும் யுஏஎன் உடன் இணைக்க வேண்டிய தேவை இல்லை என தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஆதார் எண்ணை யுனிவர்சல் கணக்கு எண்ணுடன் இணைக்க முடியாமல் தவித்து வந்த ஊழியர்கள் எளிதாக கிளைம் நடைமுறைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் தளர்வு: சர்வதேச ஊழியர்கள் - இந்தியாவில் பணிபுரிந்து விட்டு தங்கள் நாட்டுக்கு திரும்பிய மற்றும் ஆதார் அட்டை பெற முடியாத ஊழியர்கள் இதில் பயன்பெறுவார்கள்.
வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள்: இதற்கு முன்பு இந்திய குடிமகன்களாக இருந்து தற்காலிகமாக வெளிநாடு சென்று அங்கேயே குடியுரிமை பெற்ற நபர்கள் . இதுவரை அவர்களிடம் ஆதாரே இல்லை என்ற போது அவர்கள் தங்களுடைய யுனிவர்சல் கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டிய தேவையில்லை.
நேபாள மற்றும் பூடான் குடிமக்கள்: இந்தியாவின் ஆதார் திட்டம் பொருந்தாத நேபாள மற்றும் பூடான் நாட்டு மக்கள். இவ்வாறு யுனிவர்சல் கணக்கு எண்ணோடு ஆதாரை இணைக்க வேண்டாம் என விலக்கு பெற்ற ஊழியர்கள் அதற்கு பதிலாக சரிபார்ப்புக்கு மாற்று ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டி இருக்கும்.
பாஸ்போர்ட் ,குடியுரிமைக்கான சான்றிதழ் அல்லது பிற அதிகாரப்பூர்வ அடையாள ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். கூடுதல் பரிசோதனைக்கு அதிகாரிகள் அந்த நபரின் பான், வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்டவற்றை சரி பார்ப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஊழியர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை எடுக்கிறார் , அவர் தன்னுடைய ஆதரையும் யுனிவர்சல் கணக்கு எண்ணையும் இணைக்கவில்லை, மேலும் அவரிடம் ஆதார் இல்லை எனும் போது, அவர் வேலை செய்த நிறுவனம் அவர் தொடர்பான விவரங்களை சரிபார்த்து வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து பரிவர்த்தனைகளும் NEFT முறையில் மட்டுமே செட்டில் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி பிரிவை சேர்ந்த அதிகாரிகள் இந்த விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஆதார் அட்டை பெற முடியாத நபர்கள் தங்களுடைய பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை பெற முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு உரிய தொகை அவர்களை சென்றடைய வேண்டும் என்ற வகையில் அரசு இந்த மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications