இந்தியாவில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பிஎஃப் பணம் பிடித்தம் செய்யப்பட்டு மாதம் தோறும் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இவ்வாறு வரவு வைக்கப்படும் பணம் நாம் பணி ஓய்வு பெறும் போது ஒரு மொத்த தொகையாகவும் பின்னர் மாதாந்திர ஓய்வூதிய தொகையாகவும் நமக்கே திரும்ப கிடைக்கும்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு EPFO தனது உறுப்பினர்களுக்கு ஒரு மிக முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. பிஎஃப் திட்டத்தில் ஓய்வூதிய பலன்களை பெற விரும்பும் உறுப்பினர்கள், தங்களின் பணிக்காலத்தில் குறைந்தபட்சம் எத்தனை ஆண்டுகள் கட்டாயமாக சேவை செய்திருக்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி EPS ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற வேண்டுமானால், உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு தகுதியான சேவையை பூர்த்தி செய்திருப்பது அவசியம் என கூறியுள்ளது. ஈபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, ஒரு ஊழியர் தொடர்ந்து 10 ஆண்டுகள் பிஎஃப் திட்டத்தில் பணத்தை வரவு வைத்திருந்தால் மட்டுமே ஓய்வூதிய திட்டத்தில் இணையவே தகுதி பெற முடியும்.
எனவே பணி ஓய்வு பெற்ற காலத்தில் மாதந்திர ஓய்வூதிய பிஎஃப் மூலம் கிடைக்க வேண்டும் என நினைக்கும் ஊழியர்கள் குறைந்தது 10 ஆண்டுகளாவது வேலை செய்து பிஎஃப் கணக்கில் பணம் வரவு வைக்க வேண்டும். இதற்காக ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. வெவ்வேறு அலுவலகங்களில் வேலை செய்திருந்தாலும் பரவாயில்லை.
11 ஆம் ஆண்டு முதல் தானாகவே பிஎஃப் பணத்தில் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியத்திற்கு என அனுப்பி வைக்கப்பட்டு விடும். உறுப்பினர்கள் 58 வயது நிரம்பிய பின்னரும், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்திருந்தாலும் இந்த முழு ஓய்வூதியத்தை பெற தகுதி பெறுவார்கள். மேலும் பிஎஃப் உறுப்பினர்கள் 50 முதல் 58 வயதுக்குள் தங்களின் விருப்பத்தின் பேரில் முன்கூட்டிய ஓய்வூதியத்தையும் பெறலாம். ஆனால் முறஒப்படி ஓய்வு பெறும் நபரை விட இவருக்கு குறைந்த தொகையே ஓய்வூதியமாக கிடைக்கும். தற்போது பிஎஃப் திட்டத்தில் மாதாந்திர குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையாக 1000 ரூபாய் கிடைக்கிறது.
எனவே ஓய்வு காலத்தில் மாதம் தோறும் ஓய்வூதிய தொகை வேண்டும் என விரும்பும் நபர்கள் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக வேலை செய்து பிஎஃப் கணக்கில் பணம் பங்களிப்பு செய்திருக்க வேண்டும். மேலும் தேவையில்லாமல் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்காமல் அதனை நீண்ட காலத்திற்கு காம்பவுண்டிங் முறையில் வளர விட வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே ஓய்வு பெறும் போதும் அதன் பின்னரும் கணிசமான தொகை கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications

