இந்தியாவில் கோடிக்கணக்கான ஊழியர்களின் ஓய்வுகால நிதி பாதுகாப்பை EPFO தான் உறுதி செய்கிறது. நம் பிஎஃப் கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கப்படும் பணம் பின்னாளில் பெருமளவில் வளர்ந்து நமக்கு கை கொடுக்கிறது.
பிஎஃப் கணக்கில் நம் விவரங்கள் அனைத்தும் அப்டேட்டாக இருக்க வேண்டும் அதிலும் குறிப்பாக நாமினி யார் என்பதை நியமனம் செய்வது கட்டாயம். அப்படி நாமினி இல்லாத பட்சத்தில், பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அந்த பணம் யாருக்குச் செல்லும், அதற்கான விதிகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஈபிஎஃப்ஓ தனது உறுப்பினர்களின் சேமிப்பு தொகை அவர்களின் குடும்பத்தினருக்கு எளிதாக மாற்றும் வகையில் கணக்கில் ஒரு நாமினியை பதிவு செய்யுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஒருவேளை, கணக்கு வைத்திருப்பவர் நாமினியை பதிவு செய்யாமல் இறந்துவிட்டால், பிஎஃப் தொகை அரசுக்கு போய்விடாது. வாரிசுகள் அதை பெறுவதற்கு சட்டப்பூர்வ வழிமுறைகள் உள்ளன.
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் நாமினியை நியமிக்காமல் இறந்துபோனால், சேமிக்கப்பட்ட பிஎஃப் தொகை மற்றும் காப்பீட்டுப் பலன்களை வாரிசுதாரர்கள் கிளைம் செய்யலாம், ஆனால் இது கொஞ்சம் வேலைகள் நிறைந்தது. முதலில் ஈபிஎஃப்ஓ விதிகளின்படி, பிஎஃப் கணக்கில் நாமினி யாரும் நியமிக்கப்படவில்லை என்றால், தகுதியான குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பிஎஃப் பலன்களில் சமமான பங்கை பெற உரிமை உடையவர்கள் ஆவர்.
ஒருவேளை தகுதியான குடும்ப உறுப்பினர்கள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் யாரும் இல்லையென்றால், அந்தப் பணம் சட்டப்படி அதற்கு உரிமை உடைய நபருக்கு வழங்கப்படும். பிஎஃப் விதிகளின்படி ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களுக்கு 'குடும்பம்' என்பதன் வரையறை வெவ்வேறாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண் உறுப்பினர்களுக்கு மனைவி, குழந்தைகள் (திருமணமானவர்கள் அல்லது திருமணமாகாதவர்கள்), பெற்றோர், மறைந்த மகனின் மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோர் அடங்கியவர்களே குடும்பம்.
பெண் உறுப்பினர்களுக்கு கணவர், கணவரின் பெற்றோர், குழந்தைகள் (திருமணமானவர்கள் அல்லது திருமணமாகாதவர்கள்), பெற்றோர், மறைந்த மகனின் மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோர் உள்ளனர்.
எனவே ஒரு நபர் நாமினி கூறாமல் காலமாகிவிட்டார் என்றால் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் பெற வேண்டி இருக்கும். இதனை பிஎஃப்-ன் அதிகாரப்பூர்வ் இணையதளம் அல்லது அலுவலகம் சென்று தாக்கல் செய்யலாம். இத்துடன் இறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் போன்ற ஆவணங்கள் கேட்கப்படும். இவை சரியாக இருந்தால் பிஎஃப் அதிகாரிகள் பணத்தை செட்டில்மெண்ட் செய்வார்கள். ஆனால் இது ஒரு நாளில் முடியும் வேலை இல்லை. பல வாரங்கள் தேவைப்படும். இதனால் தான் வாரிசுகளுக்கு சிக்கல் வராமல் முன் கூட்டியே நாமினியை நியமன்ம் செய்யுங்கள் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் பிஎஃப் கணக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் கோரப்படாமல் இருந்தால் அந்த கணக்கு செயலற்ற கணக்காக மாறக்கூடும். அப்போது பணம் பெறுவது இன்னமும் சிக்கல். எனவே, தாமதிக்காமல் சட்டப்பூர்வ வாரிசுகள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இத்தகைய சட்ட சிக்கல்களை தவிர்க்கவும், குடும்பத்தினரின் அலைச்சலை குறைக்கவும் ஈபிஎஃப்ஓ ஆன்லைன் மூலம் E-Nomination வசதியை வழங்கியுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் நாமினியை பதிவு செய்ய முடியும். ஈ-நாமினேஷன் செய்ய, உங்கள் UAN எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும், மேலும் மொபைல் எண்ணும் ஆதாருடன் இணைந்திருக்க வேண்டும்.
இதனை அடுத்து பிஎஃப் போர்ட்டலில் புகைப்படம், முகவரி மற்றும் நாமினியின் ஆதார் விவரங்கள், வங்கி கணக்கு விவரங்களை அளித்து எளிதில் பதிவு செய்து கொள்ளலாம். இது அவசர காலத்தில் குடும்பத்தினருக்கு பிஎஃப், பென்ஷன் மற்றும் காப்பீட்டு பலன்கள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யும்.


Click it and Unblock the Notifications


