சென்னை: இன்று வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் துறையில் புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்கு பதிலாக மலிவு விலையில் ஸ்மார்ட் போன்கள் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு செகண்ட் ஹேண்ட் ஃபோன் விரும்பத்தக்க விருப்பம் ஆகிவிட்டது. நீங்கள் பணத்தை சேமிக்க விரும்புகிறீர்கள்.. என்றால், இதன் மூலம் நீங்கள் பயனடையலாம். இதுபோன்ற மொபைல் ஃபோனை வாங்குவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கலாம், ஆனால் அதற்கு முன்பு நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளது அவை என்ன என்பதைப் பார்ப்போம்.
செகண்ட் ஹேண்ட் ஃபோன்களை வாங்குவதற்கு முன்பு சில விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். ஏனெனில், அவை இன்னொருவர் பயன்படுத்திவிட்டு நம் கைகளுக்கு வர இருப்பதால், ஏதேனும் சிக்கல்கள் இருக்கலாம். உதாரணமாக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவரின் மொபைல் ஃபோன் தற்செயலாக உங்களிடம் வந்துவிட்டால் அது பெரிய பிரச்சினையை உங்களுக்கு விளைவிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு காரணமே இல்லாமல் நீங்கள் பதில் சொல்லக்கூடிய நிலைமை கூட ஏற்படலாம். இது போன்ற விஷயங்கள் வராமல் தடுக்க ஒரு மொபைல் ஃபோனை வாங்குவதற்கு முன்பு என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

மொபைல் ஃபோனின் கண்டிஷன்: மொபைல் ஃபோனின் கண்டிஷன் குறித்து தெரிந்து கொள்ளவும். நீங்கள் வாங்க இருக்கும் ஸ்மார்ட்போனின் மேற்பரப்பில் கீறல்கள் தேய்மானங்கள் இருக்கிறதா.. என்பதைப் பரிசோதிக்கவும். திரையில் ஏதேனும் விரிசல் உள்ளதா என பார்த்து அனைத்து போர்ட்களும் சரியாக செயல்படுகிறதா.. என்பதையும் உறுதி செய்யவும். மேலும் அந்த ஃபோன் மாடல் வெளியான தேதி மற்றும் நீங்கள் வாங்க இருக்கும் மொபைல் ஃபோனின் உரிமையாளர் அதை எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தி இருக்கிறார் என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இது நீங்கள் வாங்க இருக்கும் ஸ்மார்ட் ஃபோனுக்கான விலையை நிர்ணயம் செய்வதற்கு உதவும்.
பேட்டரி கண்டிஷன்: எந்த ஒரு ஸ்மார்ட்போனாக இருந்தாலும், அதனுடைய பேட்டரி கண்டிஷன் பற்றி தெரிந்து கொள்வது மிக முக்கியமானது. 1 மணி நேரம் சார்ஜ் செய்தால், எவ்வளவு நேரம் ஃபோனை பயன்படுத்த முடியும் என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் சிலர் பேட்டரி செய்தால் சார்ஜ் நிற்கவில்லை என்பதற்காக மொபைல் ஃபோன்களை விற்க முடிவு செய்திருப்பார்கள். இதுபோன்ற மொபைல் ஃபோன்களை வாங்குவதால், உங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. நீங்கள் மேலும் அதற்காக செலவு செய்ய நேரிடலாம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
விலைகளை ஒப்பிட்டுப் பார்த்தல்: தற்போது நிறைய கடைகள் செகண்ட் ஹேண்ட் மொபைல் ஃபோன்களை விற்பனை செய்வதற்காக வந்துள்ளன. இது போன்ற கடைகளை நேரில் சென்று பார்த்து உங்களுக்கு பிடித்த மொபைல் ஃபோனை தேர்வு செய்யவும். ஆனால் அதற்கு முன்பு அதன் விலை மற்றும் நிலை குறித்து தெரிந்து கொண்டு முடிவெடுப்பது சாலச் சிறந்தது.
செயல் திறன்: நீங்கள் வாங்க இருக்கும் ஃபோனை பயன்படுத்திப் பார்க்கவும். அதன் கேமரா தரத்தை சரிபார்க்கலாம். ஒவ்வொரு மெனுவிற்கும் சென்று அதை கிளிக் செய்த பின்னர் எவ்வளவு நேரத்தில் திறக்கிறது என்பதை வைத்து அதன் செயல் திறனை மதிப்பாய்வு செய்யலாம். இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை, நீங்கள் தெரிந்து கொண்டாலே உங்களால் நல்ல செகண்ட் ஹேண்ட் ஃபோனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications