சென்னை: மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது ஒருவரின் செல்வத்தை வளர்ப்பதற்கான பிரபலமான வழியாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் அபாயங்கள் நிறைந்திருப்பதால், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், முதலீட்டாளர்கள் முழுமையான கவனத்துடன் செயல்படுவது அவசியம். எனவே, ஃபண்டைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு முதலீட்டாளராக நீங்கள் சரிபார்க்க வேண்டிய விஷயங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
உங்களுடைய இலக்குகளைத் தீர்மானியுங்கள்: உங்கள் முதலீடுகள் மூலம் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டறிந்து, அதற்கான பொருத்தமான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். உங்கள் இலக்குகளை விரைவாக அடைய விரும்புகிறீர்களா? அல்லது நீண்ட காலத்திற்குப் பிறகு அடைய விரும்புகிறீர்களா? என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

அது ஓய்வூதியத்திற்காக சேமிப்பது அல்லது வீடு வாங்குவது போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே சேமிப்புத் தொகையை வைத்து, நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்று உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.
ஃபண்டு வகைகள்: மியூச்சுவல் ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகள், ஹைப்ரிட் ஃபண்டுகள் போன்ற பல்வேறு ஃபண்டுகள் உள்ளன. ஒவ்வொரு வகையும் வெவ்வேறு பலன்களைத் தரும். மேலும் அந்த ஃபண்டுகளில் உள்ள பண இழப்பு அபாயத்தை வைத்து மாறுபடும். எனவே உங்களுடைய முதலீட்டு இலக்கை வைத்து ஃபண்டுகளைத் தேர்வு செய்யவும்.
சான்றாக, ஈக்விட்டி ஃபண்டுகள் நீண்ட காலத்திற்கு சேமிக்க ஏற்றது. ஆனால் இவை சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. இதுபோல் ஒவ்வொரு திட்டத்தையும் ஆராய்ச்சி செய்து முதலீடு செய்யவும்.
ஃபண்டு பெர்பாமன்ஸ்: நீங்கள் முதலீடு செய்ய உள்ள மியூச்சுவல் ஃபண்டின் வரலாற்றை ஆராயுங்கள். ஃபண்டின் பெர்பாமன்ஸ், வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள். அதாவது 1 வருடம், 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் போன்ற முதலீடு காலங்களில் அதிக ரிட்டர்ன்ஸ்-ஐ பெற்று தந்ததா? மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்தும் கவனியுங்கள்.
என்னதான் ஃபண்டின் பெர்பாமன்ஸ், கடந்த காலங்களில் சிறப்பாக இருந்தாலும், உங்களுடைய எதிர்கால முதலீட்டுக்கு உத்தரவாதம் இல்லை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
எக்ஸ்பென்ஸ் ரேஷியோ: மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களுக்கு 'எக்ஸ்பென்ஸ் ரேஷியோ' என்ற கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். இது உங்களுடைய ஃபண்டுகளை நிர்வகிப்பதற்கான வருடாந்திர கட்டணமாகும். இந்த எக்ஸ்பென்ஸ் ரேஷியோ குறைவாக உள்ள ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். எனவே, ரிட்டன்ஸ் அதிகம் தரும் குறைந்த எக்ஸ்பென்ஸ் ரேஷியோ, கொண்ட ஃபண்டுகளை தேர்வு செய்வது நல்லது.
ஃபண்டின் அபாயங்கள் குறித்து ஆராயவும்: ஒவ்வொரு ஃபண்டும் அதன் தனிப்பட்ட அபாயங்களை வைத்து மாறுபடும். எனவே, நீங்கள் முதலீடு செய்யவுள்ள ஃபண்டில் ஆபத்து குறைவாக இருக்கிறதா? வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா? சந்தை அபாயங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஃபண்ட் வகையை தேர்ந்தெடுக்கவும்.
எக்ஸிட் சார்ஜஸ்: குறிப்பிட்ட முதலீட்டு காலத்திற்கு முன் உங்கள் யூனிட்களை விற்கும்போது, ஃபண்ட் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், ஃபண்டில் பங்குகளை வாங்குவது, விற்பது எவ்வளவு எளிது என்பதைச் சரிபார்க்கவும்.
வரிகள் பற்றி தெரிந்து கொள்வது: வரி திட்டமிடல் இல்லாமல்,முதலீடு செய்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்காது. உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் வரிவிதிப்புகள் குறித்துத் தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, ஈக்விட்டி ஃபண்டுகளில் நீண்ட கால முதலீடுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படலாம்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது, கவனமாக ஆராய்ச்சியுடன் இறங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் ஒன்றுக்கு இருமுறை யோசித்து உங்களின் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று சுய விருப்பத்துடன் முதலீடு செய்யவும்.


Click it and Unblock the Notifications