இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான ஊழியர்களுக்கும் ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஈபிஎஃப்ஓ (EPFO) திட்டத்தில் பெரிய மாற்றம் கொண்டு வர உள்ளது. இதற்கான முதல்கட்ட ஒப்புதலும் கிடைத்துள்ளது.
தற்போது தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் ஊழியர்களுக்கு பிஎஃப் பணம் பிடித்தம் செய்ய சம்பள வரம்பு மாதம் ரூ.15,000ஆக தான் கணக்கிடப்படுகிறது. பிஎஃப் பங்களிப்புக்கான இந்த சம்பள வரம்பினை உயர்த்த வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை இருக்கும் நிலையில் , மத்திய நிதி அமைச்சகம் பிஎஃப் சம்பள வரம்பினை 25,000 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் தந்திருக்கிறது என மணிகண்ட்ரோல் பிரத்தியேக செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் இதற்கு ஒப்புதல் தந்ததை அடுத்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் மத்திய அமைச்சரவை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால் இது சட்டமாக மாற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படும். பிஎஃப் சம்பள வரம்பு 25,000 ரூபாயாக உயர்த்தப்படுவதால் பிஎஃப் பாதுகாப்பு பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.
தற்போது, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து 15,000 ரூபாய் மற்றும் அதற்கும் கீழ் இருந்தால் அந்த ஊழியர்கள் கட்டாயமாக EPF திட்டத்தில் சேர வேண்டும். இதன் மூலம் சம்பளத்தில் ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணம் பணி ஓய்வின் போது மொத்த தொகையாக கிடைக்கும்.
இந்த வரம்பை தான் 25,000 ரூபாயாக உயர்த்த முடிவு செய்துளனர். அப்படி என்றால் மாத அடிப்படை சம்பளம் 25,000 ரூபாய் வரை கொண்டிருக்கும் அனைத்து ஊழியர்களுக்கு பிஎஃப் பிடித்தம் கட்டாயம் ஆகும். எனவே அதிகப்படியான ஊழியர்கள் பிஎஃப் எனப்படும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள். இது அவர்களின் ஓய்வுக்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்யும்.
இந்த திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படாமல் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக மணி கண்ட்ரோல் செய்தி கூறுகிறது. ஏனெனில் இந்த சம்பள வரம்பு மாற்றம் மூலம் இன்னும் கூடுதலான ஊழியர்கள் பிஎஃப் திட்டத்தின் கீழ் வருவார்கள். நிறுவனங்களுக்கு இது கூடுதல் செலவு என்பதால் இதற்கேற்ப நிறுவனங்கள் பே ரோலில் மாற்றம் கொண்டு வரும் வகையில் கால அவகாசம் வழங்கப்படும்.
இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டு தான் பிஎஃப் சம்பள வரம்பு 15,000ஆக உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் இந்த சம்பள வரம்பை உயர்த்த பரிசீலனை நடத்தப்பட்டது. முதலில் 30,000 ரூபாய் என சம்பள வரம்பு பரிந்துரைக்கப்பட்டதாம். ஆனால் மத்திய நிதி அமைச்சகம் 25,000 ரூபாய் வரை உயர்த்தினால் போதும் என கூறி விட்டதாம்.
இப்போதைக்கு PF வரம்பு பழைய நிலையிலேயே அதாவது 15,000 ரூபாய் என்ற அளவிலேயே நீடிக்கிறது. தற்போதைக்கு நாம் பங்களிப்பு செய்யும் தொகையும் மாறவில்லை. அரசு விரைவில் இந்த திட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து உரிய வழிகாட்டுதல்களை வெளியிடும். அதுவரை ஊழியர்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம்.


Click it and Unblock the Notifications

