வீடு வாங்குவதற்கு பட்ஜெட் இல்லை என்று நினைப்பவர்கள் முதலில் நாடுவது ஹோம் லோன்களைத் தான். ஹோம் லோன்களைப் பலரும் வாங்குவதற்கான முக்கிய காரணம் EMI தவணைகளாக கடன் தொகையை மாதம் மாதம் செலுத்திக் கொள்ளலாம். அதுவும் முதல் முறையாக வீடு வாங்குபவராக இருந்தால் கடனை பெறுவதற்கான செயல்முறை உங்களுக்கு சற்று கடினமானதாகவோ அல்லது சிக்கலானதாகவோ தோன்றலாம். இந்தப் பதிவில் செயல்முறையை எளிதாக்குவதற்கும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற கடனை கண்டறியவும் உதவும் சில அடிப்படை குறிப்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
லோன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முன்பு கீழ்காணும் விஷயங்களை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

உங்கள் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்க்கவும்: கடன் விண்ணப்பச் செயல்பாட்டில் உங்கள் கிரெடிட் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் கடன் தகுதி மற்றும் திருப்பிச் செலுத்தும் விதத்தை மதிப்பிடுவதற்கு கடன் வழங்குபவர்கள் முதலில் உங்கள் கிரெடிட் ஸ்கோரைத் தான் பயன்படுத்துகின்றனர்.
வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், உங்களிடம் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 750 அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் ஸ்கோர் இருந்தால், அவை நல்ல கிரெடிட் ஸ்கோராகக் கருதப்படும். மேலும் குறைந்த வட்டி விகிதங்களுடன் கடனைப் பெற உங்களுக்கு உதவும். நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்க, உங்கள் பில்களை சரியான நேரத்தில் செலுத்துவது முக்கியம்.
முன்பணத்தை ஏற்பாடு செய்யவும்: கடன் வழங்குநர்கள் பொதுவாக சொத்து மதிப்பில் 80% வரை மட்டுமே கடன் வழங்குவார்கள். மீதமுள்ள 20%, முன்பணத்தை நீங்களே செலுத்த வேண்டும். கடன் தொகை மற்றும் கடன் வழங்குநரைத் தேர்வு செய்த பிறகு, நீங்கள் செலுத்த வேண்டிய முன்பணத்தை கண்டறிந்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். இது தவிர, ஸ்டாம்பு கட்டணம், பதிவு கட்டணம், கடன் செயலாக்க கட்டணம் போன்ற கடன் தொடர்பான பிற செலவுகளுக்கும் தயாராக இருங்கள்.
சொத்தின் சட்டப்பூர்வ தன்மையை சரிபார்க்கவும்: நீங்கள் வாங்க இருக்கும் சொத்துக்களின் சட்டப்பூர்வ நிலையைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். வாங்கிய பிறகு எதிர்பாராத தொந்தரவுகளைத் தவிர்க்க, சொத்து சர்ச்சைகள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்யவும். சட்ட அனுமதிகள் மற்றும் ஆவணங்களை மதிப்பாய்வு செய்ய ஒரு வழக்கறிஞரை நியமிப்பது சிறந்தது.
கடன் பெறுவதற்கான ஆவணங்களைத் தயாராக வைத்திருங்கள்: உங்களுக்கு கடன் தருவதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கு கடன் வழங்குபவர்கள் அடையாளச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், உங்களுடைய ஊதிய விவரங்கள் மற்றும் பிற ஆவணங்களை கேட்கலாம். வீட்டுக் கடனுக்கான தகுதி கடன் வழங்குபவரை பொறுத்து மாறுபடும். நீங்கள் முதல் முறையாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க இருக்கிறீர்கள் என்றால் தேவையான ஆவணங்களை சேகரிக்கத் தொடங்குங்கள்.
வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்: வட்டி விகிதங்கள் உங்கள் EMI-களை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். வட்டி விகிதங்களில் சிறிய அளவு மாற்றம் இருந்தாலும் அது மிகப்பெரிய நிதி சிக்கலுக்கு வழிவகுக்கலாம். எனவே, நீங்கள் வீட்டு கடன் பெற விண்ணப்பிக்கும் போது.. எந்த வங்கியில் கடன் விகிதம் குறைவாக உள்ளது என்பதை ஒப்பீடு செய்து பாருங்கள்.
வெவ்வேறு கடன் காலங்கள் மற்றும் பிற நிபந்தனைகள் கடன் விதிமுறைகள் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். வட்டி விகிதங்களுக்கு அப்பால் செயலாக்க கட்டணம், விண்ணப்ப கட்டணம், முன்கூட்டியே செலுத்தும் கட்டணம், அபராதங்கள் போன்ற பிற கட்டணங்களையும் கடன் வழங்குனர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதன்பின்னர் லோன் பெற விண்ணப்பியுங்கள்.
ரூ.30 லட்சத்துக்கும் குறைவான வீட்டுக் கடன்களுக்கு முன்னணி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
RBL பேங்க்: 8.20% முதல் 14.75% வரை
UCO பேங்க்: 8.30% முதல் 10.00% வரை
சென்ட்ரல் பேங்க்: 8.35% முதல் 9.50% வரை
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: 8.35% முதல் 10.75% வரை
மகாராஷ்டிரா பேங்க்: 8.35% முதல் 10.90% வரை
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்: >=8.40% வரை
இந்தியன் பேங்க்: 8.40% முதல் 9.80% வரை
பேங்க் ஆஃப் பரோடா: 8.40% முதல் 10.60% வரை
பேங்க் ஆஃப் இந்தியா: 8.40% முதல் 10.85% வரை
பஞ்சாப் நேஷனல் பேங்க்: 8.45% முதல் 10.10% வரை


Click it and Unblock the Notifications